ஜாங்கோ – விமர்சனம்

நடிப்பு: சதீஷ்குமார், மிருணாளினி ரவி, கருணாகரன், வேலு பிரபாகரன் மற்றும் பலர்

இயக்கம்: மனோ கார்த்திகேயன்

இசை: ஜிப்ரான்

ஒளிப்பதிவு: கார்த்திக் கே.தில்லை

’இந்தியாவின் முதல் டைம் லூப் திரைப்படம்’ என்ற அறிவிப்பின் மூலம் சயின்ஸ் ஃபிக்‌ஷன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ‘ஜாங்கோ’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

டைம் லூப் படங்களில் இருக்கும் பொதுவான அம்சம், நாயக கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நாள் மீண்டும் மீண்டும் நடந்துகொண்டே இருக்கும். தினமும் அதே நாளின் சம்பவங்கள் திரும்பத் திரும்ப நடந்துகொண்டே இருக்கும். அவரை சுற்றி இருக்கும் மக்களும் முந்தைய நாள் செய்த விஷயங்களையே மீண்டும் மீண்டும் செய்வார்கள். நாயக கதாபாத்திரம் மட்டும் டைம் லூப்பில் தான் மாட்டிக் கொண்டதை உணர்ந்து, அதற்கான காரணங்களை கண்டறிந்து அந்த சுழற்சியில் இருந்து வெளியே வருவார். இதை அடிப்படையாகக் கொண்டு ஹாலிவுட்டில் ஏராளமான படங்கள் வந்துவிட்டன. இந்திய சினிமாவுக்கு புதிதான இந்த கதைக்களத்தை எடுத்துக்கொண்ட இயக்குநர் மனோ கார்த்திகேயனை பாராட்டலாம்.

புகழ் பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக இருப்பவர் டாக்டர் கவுதம் (சதீஷ்குமார்). மனக்கசப்பால் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தனது மனைவியும் ரிப்போர்ட்டருமான நிஷாவோடு (மிருணாளினி ரவி) மீண்டும் சேர முயற்சி செய்கிறார் டாக்டர் கவுதம். இன்னொரு பக்கம் பூமியை நோக்கி ஒரு எரிகல் வந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அந்த எரிகல் விழும் இடத்தில் சிக்கிக் கொள்ளும் டாக்டர் கவுதம் மறுநாள் கண்விழிக்கும்போது முந்தைய நாள் நடந்த நிகழ்வுகள் மீண்டும் நடக்கின்றன.

குழப்பத்தில் தவிக்கும் டாக்டர் கவுதமுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக அன்றைய நாள் முடியும் நேரத்தில் அவரது மனைவி நிஷாவை யாரோ ஒரு மர்ம நபர் சுட்டுக் கொல்லுகிறார். எத்தனை முறை தடுத்தாலும் இதே நிகழ்வு மீண்டும் மீண்டும் நடக்கிறது. எதனால் அந்த நாள் மீண்டும் மீண்டும் நடந்துகொண்டே இருக்கிறது? அவரது மனைவியைக் கொல்வது யார்? என்ற கேள்விகளுக்கான விடையைச் சொல்கிறது ‘ஜாங்கோ’.

நாயகனாக நடித்திருக்கும் சதீஷ்குமார், புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு நடித்திருக்கிறார். முழுக்கதையும் இவரை சுற்றியே நடப்பதால், கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். மகிழ்ச்சி, கவலை, வெறுப்பு என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

நாயகியாக வரும் மிருணாளினி ரவி துணிச்சல் மிக்க பெண்ணாக நடித்து அசத்தி இருக்கிறார். போலீசாக வரும் கருணாகரன், விஞ்ஞானியாக வரும் வேலு பிரபாகர் ஆகியோர் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார்கள். ஹரீஷ் பெராடி அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். டேனியல் பாப், ரமேஷ் திலக், தங்கதுரை ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

டைம் லூப்பை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் மனோ கார்த்திகேயன், முதல் பாதியில் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தினாலும், இரண்டாம் பாதியில் தெளிவுபடுத்துகிறார். இந்த மாதிரி கதையை திரைக்கதையாக்குவது மிகவும் கடினம், அதை சிறப்பாகவே செய்திருக்கிறார் இயக்குனர்.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அதுபோல் கார்த்திக் கே தில்லையின் ஒளிப்பதிவும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

 ‘ஜாங்கோ’ – வரவேற்கத் தக்க புதிய முயற்சி!