பொன் மாணிக்கவேல் – விமர்சனம்

நடிப்பு: பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், சுரேஷ் மேனன், மகேந்திரன்

இயக்கம்: முகில் செல்லப்பன்

வெளியீடு: டிஸ்னி ஹாட்ஸ்டார்

இசை: டி இமான்

ஒளிப்பதிவு: கே.ஜி.வெங்கடேஷ்

தமிழில் ‘போலீஸ் ஸ்டோரி’ ஜானரில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வந்துள்ளபோதிலும், கடந்த 7 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் பிரபுதேவா, காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் முதல் படம் என்ற வகையில் கவனஈர்ப்பு பெறுகிறது ‘பொன் மாணிக்கவேல்’.

ஒரு மூத்த நீதிபதி தலை துண்டிக்கப்பட்டு மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார். கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறுகிறது. கொலையாளியை கண்டுபிடிக்கச் சொல்லி  காவல்துறைக்கு  உயர்மட்டத்திலிருந்து அழுத்தம் அதிகரிக்கிறது. இந்த வழக்கை விசாரிக்க, ஏற்கனவே காவல்துறை அதிகாரியாக இருந்து, பின்னர் சிறை சென்று, இப்போது ஆடம்பர பங்களாவில் வாழ்ந்தபடி மாடு மேய்க்கும் வேலை செய்துவரும் பொன் மாணிக்கவேல் (பிரபுதேவா) தான் பொருத்தமான நபர் என மேலதிகாரிகள் முடிவு செய்கிறார்கள். இதனால் பொன் மாணிக்கவேலை காவல்துறை அதிகாரியாக மீண்டும் நியமித்து இந்த வழக்கை விசாரிக்குமாறு பணிக்கிறார்கள். ஆனால், அவர் ஆரம்பம் முதலே இந்த வழக்கில் ஈடுபாடு எதுவுமின்றி இருக்கிறார்.

நீதிபதியைத் தொடர்ந்து அவரது நண்பரான மற்றொரு காவல்துறை அதிகாரியும் கொல்லப்படவே அழுத்தம் மேலும் அதிகமாகிறது. இதனைத் தொடர்ந்து நீதிபதியின் இன்னொரு நண்பரான அர்ஜுன் கே.மாறனுக்கும்  (சுரேஷ் மேனன்) கொலை மிரட்டல் வருகிறது. அர்ஜுன் கே.மாறனை பொன் மாணிக்கவேல் காப்பாற்றினாரா? இந்தக் கொலைகளுக்கு எல்லாம் காரணம் யார்? என்பதே ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் மீதிக் கதை.

0a1e

பொன் மாணிக்கவேலாக வரும் நாயகன் பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக கம்பீரம் காட்டியிருக்கிறார். அவரது அலட்சியமான தோரணையும் உடல் மொழியும் ரசிக்க வைக்கின்றன. காவல்துறை மீது வெறுப்பைக் காட்டுவது, கட்டிய மனைவியுடன் சரசமாடுவது, தீயவர்களான வில்லன்களுடன் அமைதியாக மோதுவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பொன் மாணிக்கவேலின் மனைவி அன்பரசியாக வரும் நாயகி நிவேதா பெத்துராஜ், கணவனுடன் ரொமான்ஸ் செய்கிறார். டூயட் பாடுகிறார். கணவனுக்காக வில்லன்களிடம் சண்டை போடுகிறார். தன் கதாபாத்திரத்துக்குத் தேவையான அளவு நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக வரும் சுரேஷ்மேனனும், சில நிமிடங்கள் மட்டுமே வரும் மறைந்த இயக்குனர் மகேந்திரனும் ஈர்க்கிறார்கள்.

படத்தின் இயக்குனர் முகில் செல்லப்பன் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சிரத்தை காட்டியிருக்கலாம். காட்சிகளை கற்பனை வளத்துடன் புதுவிதமாகவும், நகைச்சுவை காட்சிகளை சிரிக்கும் விதமாகவும் அமைத்திருந்தால் படம் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்திருக்கும்.

தவிர, காவல் நிலைய லாக்கப் மரணங்களுக்கும், காவல்துறையின் சித்ரவதைகளுக்கும் எதிரான கண்டனக் குரல்களை எழுப்பும் ‘ஜெய் பீம்’, ‘விசாரணை’ போன்ற வெற்றிப்படங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கும் இந்த வேளையில், அந்த சட்டவிரோத செயல்களை  நியாயப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு ‘போலீஸ் ஸ்டோரி’ படம் ரசிகர்கள் மத்தியில் எப்படி எடுபடும்? என்ற கேள்வியும் எழுகிறது.

டி.இமானின் இசையில் ‘உதிரா உதிரா’ பாடல் ரசித்துக் கேட்கும் ரகம். பின்னணி இசை ஓ.கே.ரகம்.

கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவு ஒரு வணிகப்படத்துக்குத் தேவையான நேர்த்தியுடன் சிறப்பாக இருக்கிறது.

‘பொன் மாணிக்கவேல்’ – புதிய மொந்தை, பழைய கள்!

.