என்றென்றைக்கும் நின்றெரியும் செஞ்சுடர் – சோவியத் யூனியன்!

அன்பே சிவம் படத்தில் ஒரு வசனம் உண்டு.

“அதான் சோவியத் யூனியன் உடைஞ்சு போச்சுல்ல.. அப்போ கம்யூனிசம் இல்லைன்னுதான அர்த்தம்.. அப்புறம் ஏன் அதைப் பத்தியே பேசறீங்க?”

“மிஸ்டர் ரோமியோ.. தாஜ்மகால் இடிஞ்சு போச்சுன்னு வச்சுக்கோங்க.. நீங்கல்லாம் லவ் பண்றது நிறுத்திவீங்களா?”

முதலில் கேட்கப்படும் கேள்வியை பல இடங்களில் நீங்கள் கேட்டிருக்கலாம். ‘சோவியத் யூனியன்தான் உடைந்து விட்டதே, பிறகு ஏன் கம்யூனிசம்’ என. தர்க்கப்பூர்வமாக சரி என்பதைப் போலவே தோன்றக் கூடிய கேள்வி. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் கேள்விப்பட்ட முதல் பைனரிக் கேள்வி இதுதான். இன்று நிறைய பைனரிக் கேள்விகள் தினுசு தினுசாக வந்து விட்டன.

சோவியத் யூனியன் செய்த சாதனைகள் பல. நிறைய முன் முயற்சிகளை எடுத்து அந்த நாடு வெற்றி கண்டு, உலக நாடுகளுக்கு வழி காட்டியது. தொழிற்சங்கங்கள் அரசியலாகுதல், தொழிலாளர் நலன், முதன்முதலாக சுகாதாரத்துக்கென ஓர் அமைச்சகம், எட்டு மணி நேர வேலை, ஓட்டுரிமை, பிரசவகால விடுமுறை, கிராமம்தோறும் மருத்துவம், ஆரம்ப சுகாதார மையம் எனப் பற்பல விஷயங்களை உலகிலேயே முதன்முதலாக முன்னெடுத்த நாடு சோவியத் யூனியன். அந்த நாடு உருவாக்கிய உதாரணத்துடன் போட்டி போட வேண்டிய கட்டாயம் வந்த பிறகுதான் பிற நாடுகளிலும் சுகாதாரம், கல்வி முதலிய துறைகளில் நலத்திட்டங்களும் ஓட்டுரிமை, தொழிற்சங்க உரிமை, எட்டு மணி நேர வேலை, மகப்பேறு விடுமுறை, ஓய்வூதியம், ஊதிய உயர்வு எனப் பல விஷயங்களும் நேர்ந்தன.

சோவியத் யூனியன் உடைந்ததால் கம்யூனிசம் தோற்றது எனக் கொண்டால் சோவியத் யூனியனை பார்த்து பிற நாடுகளில் கொண்டு வந்த நலன்கள் எல்லாமும் 90களிலேயே இல்லாமல் போயிருக்கும். பறிக்கப்பட்டிருக்கும். ஆனால் நடக்கவில்லை. அப்படி செய்ய எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியையும் வெகுண்டெழும் மக்கள் நிறுத்துகின்றனர். காரணம் ஒன்றுதான்:

‘யாரோ பத்து நாட்டை அடிச்சு சோவியத் யூனியன் வல்லரசு ஆகல. சோவியத் யூனியன் அடிச்ச பத்து நாடுமே வல்லரசுதான்!’

எனவேதான் இன்று வரை அமெரிக்கப் படங்களில் சோவியத் யூனியன் வில்லனாகிறது. அமெரிக்கா அதிபர்களுக்கு ரஷ்யா எதிரியாக தெரிகிறது. பல நாடுகளில் பல கோடி பேரை வைத்து இயங்கும் பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு ஊரில் சில நூறு தொழிலாளர்கள் வைக்கும் தொழிற்சங்கம் கூட பதட்டத்தைத் தருகிறது. மிகச் சிறியவை என எள்ளி நகைக்கப்படும் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்றாலே ஆளும் வர்க்கம் அலறுகிறது.

சோவியத் யூனியன் உடையவில்லை. என்றென்றைக்கும் நின்றெரியும் செஞ்சுடர் அது.

உழைப்பவன் மேலே ஏறி வந்து அதிகாரம் பற்றினால் உலகம் என்னவாக மாறும் என்பதை உலகுக்கு காண்பித்த நாள் இன்று.

Rajasangeethan

(லெனின் தலைமையில் கம்யூனிஸ்டுகள் ரஷ்ய ஆட்சியைக் கைப்பற்றிய ’நவம்பர்புரட்சி’ தினம் இன்று)