“உதாரண புருஷராக வாழ்ந்து வரும் சூர்யாவுக்கு நன்றிகள்; ‘ஜெய் பீம்’ பெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்!”
நடிகர் சூரியாவின் புதிய படம் ‘ஜெய் பீம்’ அமேசான் பிரைம்மில் வெளியாகி இருக்கிறது. தொண்ணூறுகளில் இருளர் சமூகத்தினர் காவல் துறையால் எதிர்கொண்ட அடக்குமுறைகள் குறித்த உண்மைக் கதையை படம் பேசுகிறது. பாதிக்கப்பட்ட பழங்குடி சமூகத்தினருக்காக நீதி கேட்கும் வழக்கறிஞராக சூரியா நடித்திருக்கிறார்.
பதிவின் விஷயம் அதுவல்ல. இந்தப் படத்தில் தான் பெற்ற வருமானத்தில் இருந்து ஒரு கோடியை, இருளர் கல்வி நிதிக்கு சூரியா நன்கொடையாக அளித்திருக்கிறார். நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இதற்கான காசோலையை வழங்கி இருக்கிறார்.
இந்த செய்தியைப் பார்த்தபொழுது, இதேபோல சென்ற வருடமும் ஏதோ செய்தது நினைவுக்கு வந்து கூகுள் செய்தேன். ‘Suriya donates’ என்று போட்டாலே தொடர்ந்து பல்வேறு செய்திகள் விழுகின்றன. அவரது முந்தைய படம் ‘சூரரைப் போற்று’ வெளியானபொழுது தனது வருமானத்தில் 1.5 கோடியை லாக்டவுன் காரணமாக பிழைப்பை இழந்த திரைத்துறை ஊழியர் சங்கத்துக்கு நன்கொடையாக வழங்கி இருக்கிறார். கூடவே ‘சூரரைப் போற்று’ படத்தின் லாபத்தில் இருந்தும் 5 கோடியை கோவிட் நிவாரணத்துக்கு வழங்கி இருக்கிறார். (அது அவரது சொந்த நிறுவனம் தயாரித்த படம்.) இரண்டாம் அலையின்பொழுது முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை கேட்டு ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததும் முதல் ஆளாக அவரும் அவர் சகோதரர் கார்த்தியும் இணைந்து ஒரு கோடி வழங்கினார்கள்.
இது தவிர, அவர் சேவை நிறுவனம் அகரம் மூலம் கல்விக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என்பதும் நமக்கெல்லாம் தெரியும்.
சமீப காலமாக தனது படங்களின் மூலமும் சமூக நீதிக்கான குரலை எழுப்பி வருவதை முனைந்து செய்கிறார். கூடவே, நிஜ வாழ்விலும் நீட் போன்ற சென்ஸிட்டிவ் விஷயங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் வசம் நின்று தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி வருகிறார். இந்த நிலைப்பாடுகளின் காரணமாக தனது தொழில் பாதிக்கப்படுமா என்பதைக் கூட அவர் யோசிப்பதாகத் தெரியவில்லை.
நடிகராக தனக்கு சமூகத்தில் கிடைத்திருக்கும் பிம்பத்தை சிந்தனாவாத ரீதியிலும், தனக்குக் கிடைத்த வணிக வெற்றியை வளர்ச்சிப் பணிகளுக்கு வழங்குவதன் மூலமும் தொடர்ந்து உதாரண புருஷராக வாழ்ந்து வரும் சூரியாவுக்கு நன்றிகள் பல. உங்கள் புதிய படம் ‘ஜெய் பீம்’ பெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்.
Sridhar Subramaniam
(முகநூல் பதிவு)