அனபெல் சேதுபதி – விமர்சனம்
நடிப்பு: விஜய் சேதுபதி, டாப்சி பன்னு, ஜார்ஜ் மரியன், மதுமிதா, சுப்பு பஞ்சு அருணாசலம், யோகி பாபு, சேத்தன், ராதிகா, தேவதர்ஷினி, சுரேகா வாணி, ஜெகபதிபாபு, ராஜந்திரபிரசாத்
இயக்கம்: தீபக் சுந்தர்ராஜன்
தயாரிப்பு: சுதன் சுந்தரம், ஜி.ஜெயராம்
இசை: கிருஷ்ண கிஷோர்
ஒளிப்பதிவு: ஜார்ஜ் கௌதம்;
பேயையும் நகைச்சுவையையும் கலந்து ‘திகில் காமெடி’ ரகத்தில் பல நூறுகோடி திரைப்படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. அந்த ரகத்தில் வெளிவந்திருக்கும் இன்னுமொரு படம் தான் ‘அனபெல் சேதுபதி’.
1940களின் முற்பாதியில், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், உள்நாட்டு மன்னரான வீரசேதுபதியால் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை. தற்காலத்தில் அந்த அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் வசிக்கின்றன. அங்கு பௌர்ணமி தினத்தன்று யார் தங்கினாலும் இறந்து, அவர்களும் ஆவியாகிவிடுவார்கள். அந்த அரண்மனையில் நாயகி டாப்சியும், அவரது குடும்பத்தினரும் வந்து தங்குகிறார்கள். அதன்பின் வரும் பௌர்ணமி தினத்தில் டாப்ஸியும், அவரது குடும்பத்தினரும் என்ன ஆனார்கள்? அரண்மனையில் வசிக்கும் பேய்கள் ஏன் வெளியேற முடியவில்லை? அரண்மனையில் புதைந்திருக்கும் மர்மங்கள் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் பாதியில், ஃபிளாஷ்பேக்கில் 1940களில் வாழ்ந்த மன்னர் வீரசேதுபதியாக குறைவான காட்சிகள் தான் வருகிறார். எல்லாப் படங்களைப் போலவே இந்தப் படத்திலும் அலட்சியமாகவே வந்துபோகிறார். சில காட்சிகளில் மட்டுமே சற்று பரவாயில்லை ரகம்
டாப்ஸி சமகாலத்தில் ருத்ரா என்ற பெண்ணாகவும், ஃபிளாஷ்பேக்கில் அனபெல் சேதுபதி என்ற ஆங்கிலேயப் பெண்ணாகவும் வருகிறார். ஒரே சமயத்தில் பேய்கள் மத்தியில் பேயாகவும், மானுடர் மத்தியில் மானுடராகவும் காட்சியளிக்கும் விதமாய் அவருடைய பாத்திரம் சுவாரஸ்யமாக படைக்கப்பட்டிருக்கிறது. எனினும் அவரது நடிப்புக்கு தீனி போடும் அளவிற்கு எந்த காட்சியும் வலுவாக இல்லாதது வருத்தம்.
ராதிகா, ராஜேந்திர பிரசாத், சேத்தன், தேவதர்ஷினி என நல்ல நடிகர்கள் இருந்தாலும் அதிகம் ஜொலிக்கவில்லை. வழக்கமான வில்லனாக வந்து சென்றிருக்கிறார் ஜெகபதி பாபு. யோகி பாபுவின் காமெடி ஆங்காங்கே கைக்கொடுத்து இருக்கிறது.
‘அனபெல் சேதுபதி’ – பெருமூச்சு!