லாபம் – விமர்சனம்

தன் சொந்த கிராமத்தில் இருந்து 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேற்றப்பட்ட பக்கிரிசாமி (விஜய்சேதுபதி) ஒரு நாடோடிபோல ஊர்திரும்புகிறார். வந்தவர், தான் கற்றுக்கொண்டுவந்த நவீன உத்திகளை வைத்து, கூட்டுப் பண்ணை விவசாயம் செய்து லாபம் ஈட்டலாம் என்கிறார். இதற்காக கிராம மக்களையும், அவர்களிடம் இருக்கும் நிலங்களையும் ஒன்றுதிரட்டுகிறார். ஆனால், அதே நிலங்களை வைத்து ‘பயோடீசல்’ தொழிற்சாலை அமைத்து, அந்த மண்ணின் விவசாயத்தை அழிக்க நினைக்கிறார் தொழிலதிபர் ஜெகபதி பாபு. கூட்டுப் பண்ணை விவசாயமா, பயோடீசல் ஆலையா, அந்த மக்களுக்கு எது லாபமாக அமைந்தது, யாருடைய கை ஓங்கியது என்பது கதை.

சிறந்த கதை, கதைக் களம் இருந்தும், திரைக்கதையானது கதாநாயகனுக்கான ஹீரோயிசத்தை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்தப்போய், இரண்டாம் பாதி முழுவதும் அவிழ்த்துவிடப்பட்ட ஜல்லிகட்டு காளைபோல எங்கெங்கோ சுற்றித் திரிகிறது. இதனால், பார்வையாளர்களின் பொறுமையை படம் பெரிதும் சோதிக்கிறது. ஆனால், உதிரி உதிரியாக தனது பொதுவுடமைப் பிரச்சாரத்தை வளமைபோல் அழகான, எளிமையான காட்சிகள் வழியாக முன்வைத்திருக்கிறார் தோழர், அமரர் எஸ்.பி.ஜனநாதன்.

விவசாயத் தொழிலின் பிரச்சினைகளை முன்வைத்து சமீபகாலமாக வெளிவரும் திரைப்படங்களில் இத்தொழிலின் உள்முரண்கள் படைப்பாளிகளால் சரிவர புரிந்துகொள்ளப்படவில்லை.

‘லாபம்’ இந்த படங்களில் இருந்து விலகி நின்று, விவசாயம் குறித்து முற்றிலும் புதிய பார்வையை முன்வைக்கிறது.

விவசாயம் எவ்வளவு லாபகரமான தொழில் என்ற அடிப்படையான புரிதலை எளிய திரைமொழி வழியாக எடுத்துக்காட்டியிருக்கிறது. கிராம மக்களை சர்க்கரை ஆலைக்கு அழைத்துச் சென்று உண்மை நிலையை வெளிச்சம்போட்டுக் காட்டும் கதாநாயகனை தமிழ் சினிமா முதல்முறையாகப் பார்க்கிறது. ‘லாபம்’ என்பதற்கு, குழந்தைக்கும் புரியும் வண்ணம் எளிய விளக்கத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் ஜனநாதனின் மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரிய இழப்பு என்பதை இப்படம் உணர்த்துகிறது.

விஜய்சேதுபதியின் நடிப்பில் ‘அளவுக்கு மீறிய’ நம்பிக்கை தெரிகிறது.தோற்றத்திலும் பெரிதாக அவர் கவனம் செலுத்தவில்லை. நாயகியானஸ்ருதிஹாசனுக்கு சற்று வித்தியாசமான கதாபாத்திரம். ஆனால், திருப்பத்தை ஏற்படுத்தும் எதையும் அவர்செய்யவில்லை. துணை நடிகர்களும் மனதில் நிற்கவில்லை. டி.இமான் இசையில் பாடல்களை ரசிக்கலாம். பின்னணி இசையிலும் அவர் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. படமாக திரை அனுபவத்தை தராமல் போனாலும், ‘கருத்தாக்க’ ரீதியில் பார்வையாளர்களுக்கு புதிய தரிசனமாகிறது ‘லாபம்’.