”மதுவந்தி போன்ற சிலரின் ஆதிக்க பேச்சுகளால் இவரது சமூகத்தினர் அனைவருக்குமே கெட்ட பெயர்!” – பட்டுக்கோட்டை பிரபாகர்
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரின் பாலியல் குற்றம் தொடர்பாக மதுவந்தி அவர்களின் கருத்தை இப்போதுதான் பார்த்தேன்.
பல முரண்கள் இருக்கின்றன.
எனக்கோ என் தந்தைக்கோ பள்ளி நிர்வாகத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார். அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி மட்டுமே நான் என்கிறார். அடுத்த நிமிடமே இந்தப் புகார் எனக்கும், என் தந்தைக்கும் வந்தது, அவர் பள்ளியின் ஒரு ட்ரஸ்டி என்பதால் உடன் நடவடிக்கை எடுக்கச் சொல்லி நிர்வாகத்திற்கு மெயில் அனுப்பினார் என்கிறார்.
அந்த ஆசிரியரை இடை நீக்கம் செய்திருப்பது சரியான நடவடிக்கை என்கிறார். சட்டப்பூர்வமான நடவடிக்கை அவசியம் என்பதைப் பற்றி பேசவே இல்லை.
பிறகு சம்மந்தமே இல்லாமல் வம்ச விருத்திக்கு மட்டும் பிராமணப் பெண்கள் தேவைப்படுகிறார்கள் என்று யாரையோ தரமற்று சாடுகிறார்.
தவிரவும் தொடர்ச்சியாக அவரின் பழைய யூ டியூப் பேட்டிகளையும் இப்போதுதான் பார்த்தேன். ஒரு பேட்டியில் பிராமணர்கள் மற்றவர்களை விடவும் அறிவில் சிறந்தவர்கள் என்கிறார். அவரின் அறியாமையையும், தலைக்கனத்தையும் நினைத்து சிரிப்புதான் வருகிறது. அவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் அலட்சிய மனப்பான்மையும், மமதையும், ஆதிக்க மனப்பான்மையும், ஜாதிப் பெருமையும் மேலோங்கி இருக்கிறது.
நான் பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும், எழுத்துத் துறையிலும், பத்திரிகைத் துறையிலும் சினிமாத் துறையிலும் நிறைய பிராமண நண்பர்களுடன் மிகவும் நெருக்கமாக நட்புடன் பழகி வந்திருக்கிறேன். அவர்களில் எவருமே இப்படியெல்லாம் ஜாதிப் பெருமை பேசுபவர்கள் கிடையாது.
இவரைப் போன்ற சிலரின் ஆதிக்கப் பேச்சுகள் இவரது சமூகத்தினர் அனைவருக்குமே கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறது.
–பட்டுக்கோட்டை பிரபாகர், எழுத்தாளர்