“உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் குழப்பமான காலம்” – பிரஷாந்த் பூஷண்

(பிரஷாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தின் சீனியர் வழக்கறிஞர்களில் ஒருவர். பொது நல வழக்குகள் பலவற்றை எடுத்துக் கொண்டு ஆஜராகி வாதிட்டு வரும் சட்டப் போராளியும் கூட. தற்போது பதவிக் காலம் முடிந்து போகும் தலைமை நீதிபதி போப்டே குறித்து சென்ற வார ஹிண்டுவில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதனை அவருடைய அனுமதி பெற்று இங்கே மொழி பெயர்த்து இருக்கிறேன்.)

                     .உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் குழப்பமான காலம்

                                 =======================================

.கடந்த நான்கு தலைமை நீதிபதிகளின் கீழ் உச்ச நீதிமன்றம் முன்னெப்போதும் காணாத வீழ்ச்சியை கண்டு கொண்டிருக்கிறது. முன்பு தன்னாட்சி கொண்டு நீதியின் காவலனாக விளங்கிய மன்றம் கொஞ்சம் கொஞ்சமாக அரசின் ஆயுதமாக மாறி விட்டிருக்கிறது. அயோத்தியா, ரஃபேல் போன்ற தீர்ப்புகளை வழங்கிய முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பணிக்காலம் முடிந்து ராஜ்ய சபை உறுப்பினர் ஆன பின்னர், ‘அப்பாடா, உள்ளதிலேயே மோசமான காலம் முடிவடைந்தது,’ என்று பெருமூச்சு விட்டோம். அவருக்குப் பின் பொறுப்பேற்றுக் கொண்ட எஸ் ஏ போப்டே உச்ச நீதிமன்றத்தை, அது கிடந்த ஆழத்தில் இருந்து தூக்கி நிமிர்த்துவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவரது பதினெட்டு மாத பதவிக்காலம் நீதி பரிபாலனத்தில் இருந்த ஒவ்வொரு பிரச்சினையையும் மேலும் அவலமாக மாற்றியது. நீதிமன்றத்தை நிர்வகிப்பது, வழக்குகளை பெஞ்சுகளுக்கு பகிர்ந்து வழங்குவது, அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வழக்குகளை விசாரிப்பது, விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரங்கள் சம்பந்தமான விஷயத்தில் முடிவுகள் எடுப்பது, சாசனத்தை மீறிய கொள்கை மற்றும் அரசு ஆணைகளை கட்டுப்படுத்துவது என்று எல்லாவற்றிலும் சரிந்திருக்கிறோம்.

அவரது காலம் நவம்பர் 2019ல் அதி முக்கிய வழக்குகளுடன் துவங்கியது. கஷ்மீரில் செக்சன் 370ஐ நீக்கியது சம்பந்தமாக 100 வழக்குகளுக்கும் மேல் பதிவாகி இருந்தன. போப்டே பதவி ஏற்ற உடனேயே சிஏஏ சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்தும் பல்வேறு பெட்டிஷன்கள் பதிவாகின. நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. ஜாமியா பல்கலைக் கழக வளாகத்தில் போலீஸ் புகுந்து மாணவர்களை அடித்தது; ஜேஎன்யூவில் குண்டர் படை புகுந்து மாணவர்களை, ஆசிரியர்களை போலீஸ் கண் முனனேயே வெளுத்தது போன்றவை அரங்கேறின. அதன் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மதக்கலவரத்தை தில்லி எதிர்கொண்டது. பின்னர் அந்தக் காலவரத்தையே சாக்காக வைத்து தில்லி போலீஸ் மாணவர்களையும், இளைய சமூகப் போராளிகளையும் கைது செய்து உள்ளே தள்ளியது.

இது தவிர தேர்தல் பாண்ட்கள், ரோகிங்ய அகதிகள் போன்ற சில முக்கிய வழக்குகளும் உச்ச நீதிமன்றத்திடம் வந்தன. கலவரம் நடந்த ஒரே மாதத்தில் கோவிட் இந்தியாவை தாக்கியது. தேசமெங்கும் நடந்த லாக்டவுன் உச்ச நீதிமன்றத்தையும் பூட்டிப் போட்டது – புலம் பெயர் தொழிலாளர்கள் இந்தியாவின் நகரங்களை விட்டு ஓடத்துவங்கினார்கள்.

உச்ச நீதிமன்றம் போன்ற ஒரு அரசியல் சாசன நீதிமன்றம் இப்படிப்பட்ட சவால்களை நேருக்கு நேர் சந்தித்திருக்க வேண்டும். இங்கேதான் அவர்களின் சுதந்திரம் மற்றும் தலைமை நீதிபதியின் வலிமை பரிசோதனைக்கு உள்ளாகி இருக்கிறது – தேசத்தின் மாபெரும் அமைப்பின் தலைவராக எந்த வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும்? அவற்றை எப்படி பல்வேறு பெஞ்சுகளுக்கு பகிர்ந்தளித்திருக்க வேண்டும்? எப்படிப்பட்ட தலைமைப் பண்பை இதர நீதிபதிகளுக்கு காட்டி இருக்க வேண்டும்?

ஆனால் என்ன நடந்தது?

வரலாற்றையே புரட்டிப் போட்ட ஜம்மு & கஷ்மீர் மற்றும் சிஏஏ சம்பந்தப்பட்ட வழக்குகளை தனது பதவிக்காலம் முழுவதும் ஒரு முறை கூட அவர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. தேர்தல் பாண்ட்கள் நாட்டின் ஜனநாயக நடைமுறையையே மாற்றி விடும் சக்தி கொண்ட முக்கிய பிரச்சினை. அதையும் அவர் விசாரிக்கவே இல்லை. சரி, முழுமையாக விசாரித்து முடிக்கும் வரை தேர்தல் பாண்ட்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கோரிய பல்வேறு கோரிக்கைகள் கூட உச்ச நீதிமன்றத்தின் முன் இருந்தன. அவற்றையாவது எடுத்துக் கொண்டிருக்கலாம். அவை கூட எதுவும் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. கடைசியில் அவை மொத்தத்தையும் ஒரே அடியாக தள்ளுபடி செய்தார். இந்த பாண்ட்கள் பல வருடமாக நடைமுறையில் இருக்கின்றன. எனவே அவற்றை நிறுத்த முடியாது என்பதுதான் அதற்கு அவர் கொடுத்த காரணம்!

போலவே ரோகிங்கய அகதிகள் பிரச்சினை ஒரு முறை கூட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற அரசின் முடிவை எதிர்த்து போடப்பட்ட பெட்டிஷன் அலட்சியமாக தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த முடிவு பன்னாட்டு சட்ட திட்டங்களுக்கு எதிரானது என்பது மட்டுமல்ல; அவர்கள் திரும்பிப் போவது அவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதற்கு சமம் என்பது கூட நீதிமன்றத்துக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை.

போப்டேயின் பதவிக்காலத்தில் உச்ச நீதிமன்றம் பெரும்பாலும் மூடியே கிடந்தது. விளைவாக சுமார் 25 சதம் வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட்டன. ஏற்கனவே தேங்கிக் கிடக்கும் வழக்குகளுடன் இந்தப் பிரச்சினையும் சேர்த்து கொண்டது. நிறைய ஆட்கொணர்வு வழக்குகள் பற்பல மாதங்கள் விசாரிக்கப்படாமலேயே வைத்து, பின்னர் மொத்தமாக தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த மனுக்களின் பின்னுள்ள முக்கிய பிரச்சினைகள் கவனிக்கப்படாமலேயே காணாமல் போயின.

சென்ற ஆண்டின் நாடு தழுவிய லாக் டவுனின்பொழுது தேசம் இதுவரை கண்டிராத புலம் பெயர் தொழிலாளர் சிக்கலை எதிர்கொண்டது; நகரங்களில் இருந்து கொத்துக் கொத்தாக தங்கள் ஊர்களுக்குத் திரும்பினார்கள். வாழ்வாதாரம், வருமானம் ஆகியவற்றை இழந்து நின்றார்கள். போக்குவரத்து வசதிகள் எதுவுமின்றி ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தே தங்கள் கிராமங்களுக்கு பயணித்தார்கள். அவர்களுக்கு உணவு, நிதி உதவி, மற்றும் போக்குவரத்து வழங்குவது குறித்த வழக்கு தலைமை நீதிபதியின் பெஞ்சினால் ஆரம்பத்தில் விசாரிக்கப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக, எந்தப் பயனுள்ள உத்தரவும் தலைமை நீதிபதியிடம் இருந்து அந்த வழக்கில் வரவில்லை. அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் அரசின் முடிவுகளில் கூட தலையிட விரும்பவில்லை, என்று சொல்லி விட்டார். கூடவே ஆச்சரியமான ஒரு வரியும் அவரிடம் இருந்து வந்தது. ‘அவர்களுக்குத் தான் ஆங்காங்கே உணவு வழங்குகிறார்களே, பின்னர் அவர்களுக்கு எதற்கு நிதி உதவி?’ என்று கேட்டார். ஏழைகள், விளிம்பு நிலை மக்களின் மீதான உச்ச நீதிமன்றத்தின் அலட்சியம் மற்றும் மனிதாபிமானமின்மை அதை விடக் கீழாக அதற்கு முன் போனதில்லை.

குடிமக்களின் உரிமைகளை பேணிக்காக்க வேண்டிய தலைமை நீதிபதி போப்டே கேரள ஊடகவியலாளர் சித்திக் காப்பான் ஆட் கொணர்வு வழக்கில் ‘பிரிவு 32ன் கீழ் பெட்டிஷன்கள் போடுவதை நீதிமன்றம் தவிர்க்க முனைந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். (சாசனப் பிரிவு 32 தேச மக்களுக்கு அடிப்படை உரிமைகளை உறுதி செய்கிறது.) சித்திக் காப்பான் ஹத்ரஸ் வழக்கை ரிப்போர்ட் செய்ய முனைந்து உத்திரப் பிரதேசத்தில் கைதாகி இருப்பவர். அவரை சிறைப்படுத்தியதற்கு எதிரான பெட்டிஷன் இன்று வரை பல்வேறு ஒத்திவைப்புகளுக்கு ஆளாகிக் கொண்டு இருக்கிறது.

விவசாயிகள் போராட்ட வழக்கில், தலைமை நீதிபதியே தன்னிச்சையாக ஒரு கமிட்டி அமைத்து அது பிரச்சினைகளை பரிசீலித்து விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டார். ஆனால் அந்தக் கமிட்டியில் இருந்த எல்லாருமே வெளிப்படையாக வேளாண் சட்டங்களை ஆதரித்து நிலைப்பாடு எடுத்திருந்தவர்கள். அவர்களின் அரசியல் நடுநிலைமையும் கூட சந்தேகத்துக்குரியதான ஒன்றாக இருந்தது.

நீதி பரிபாலனம் தவிர நீதிமன்ற நியமனங்களும் தலைமை நீதிபதியின் முக்கிய பொறுப்புகளுள் ஒன்று. இதிலும் தனது கொலேஜியத்தை உடன் அரவணைத்து செல்லத் தவறி இருக்கிறார். அவர் பதவிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு நியமனம் கூட நடக்கவில்லை. உயர் நீதிமன்றங்களில் கூட மிகக் குறைவான நியமானங்களே நடந்தன. கொலேஜியம் பரிந்துரைத்த நியமனங்களைக் கூட செய்ய அரசுகளுக்கு அவர் உத்தரவிடவில்லை. குறிப்பிடப்பட்ட நியமனங்கள் எதையும் செய்யாமலே அரசுகள் காலம் கடத்தி வந்ததையும் கூட கண்டு கொள்ளவில்லை.

நீதிபதிகள் மீதான புகார்களிலும் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு தலைமை நீதிபதிக்கு இருந்தது. ஒரு மாநில முதல்வரே அந்த மாநிலத்தின் நீதிபதி ஒருவர் குறித்து ஆவணங்களுடன் கொடுத்த புகார் விசாரிக்கப்படவே இல்லை. ஆறு மாதங்களுக்கும் மேல் அந்தப் புகார் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விபரமே யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. அது குறித்து வேறு எந்தக் கமிஷனும் கூட நியமிக்கப்பட்டதாகவும், அவர்கள் விசாரித்து ஏதாவது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

அதே போன்ற வெளிப்படைத்தன்மை அற்ற நிலைதான் இன்னொரு வழக்கிலும் இருந்தது. உச்ச நீதிமன்றத்தின் பெண் ஊழியர் ஒருவர் போப்டேவுக்கு முந்தைய தலைமை நீதிபதி மேல் பாலியல் அச்சுறுத்தல் புகார் ஒன்று கொடுத்திருந்தார். அந்தப் புகாரை போப்டே தானே விசாரித்து அந்தக் குற்றச்சாத்துக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று தானே தள்ளுபடியும் செய்து விட்டார். அப்படி தள்ளுபடி செய்த அறிக்கை மற்றும் அதன் விபரங்கள் யாரிடமும் பகிரப்படவில்லை. புகார் கொடுத்த அந்தப் பெண்ணிடம் கூட அதன் பிரதி வழங்கப்படவில்லை.

முன்னாள் தலைமை நீதிபதி போப்டேவின் பதவிக்காலத்தில் ஒரே ஒரு நல்ல விஷயமாவது சொல்வதற்கு இருக்காதா என்று தேடிப் பார்க்கிறேன். மேற்கு வங்கத்தில் மரங்களை வெட்டுவது குறித்த ஒரு வழக்கில் நிபுணர் குழு ஒன்றை நியமித்து அது குறித்து தீவிரமாக ஆராய உத்தரவிட்டு இருந்தார். இது மட்டும்தான் நினைவுக்கு வருகிறது என்பது எத்தனை பெரிய சோகம்? மீதி அனைத்து விஷயங்களிலும் அவர் குறித்து ஏமாற்றமே மிஞ்சி நிற்கிறது. முக்கிய பிரச்சினைகளில் ஒன்று அமைதியாக இருந்திருக்கிறார்; அல்லது அரசு தன்னிஷ்டத்துக்கு நடந்து கொள்ள உதவி இருந்திருக்கிறார்; அல்லது கடுமையான வார்த்தைகளில் பேசி இருக்கிறார். கூடவே முக்கியமான வழக்குகளை நிலுவையில் வைத்து விட்டுப் போயிருக்கிறார். நாட்டின் விளிம்பு நிலை மக்களை நிராதாரவாக தவிக்க விட்டிருக்கிறார்.

அப்படிப்பட்ட தலைமை நீதிபதி போப்டேவை வழியனுப்பும் இந்த நேரம் உச்ச நீதிமன்றம் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தேசத்தின் அதி சக்திவாய்ந்த நீதிமன்றம், பல்வேறு உலக நாடுகளுக்கு ஆதர்சமாக விளங்கிய ஒரு மன்றம் இப்போது எப்படி இருக்கிறது என்று பரிசீலனை செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்து கொள்வார்கள் என்று நம்புவோம். செய்து, அதன் மூலம் வரும் ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் தனது பெருமையையும் சுதந்திரத்தையும் மீட்டெடுத்து அரசியல் சாசனத்தை நிலை நிறுத்தும் இரும்புக் கோட்டையாக மறுபடி உருவெடுக்கும், இந்தியாவின் ஜனநாயகத்தை, மனித உரிமைகளை, இந்தியாவின் சட்ட மாட்சிமையை கட்டிக் காக்கும் என்று நம்புவோம்.

..(ஒரிஜினல் ஆங்கிலக் கட்டுரையின் லின்க் – https://epaper.thehindu.com/Home/ShareArticle?OrgId=G9G8GSN9J.1&imageview=0&fbclid=IwAR2IFExuyXeyclhHWYPO2y-PCgNR5QyHzmKpKohFVNibajFUxgiA3oS7FPE

SRIDHAR SUBRAMANIAM