கொரோனாவில் இருந்து காப்பாற்றி கரை சேர்த்தது சித்த மருத்துவம்: மரணத்தோடு போராடிய தமிழருவி மணியன் வாக்குமூலம்

கொரோனா தமிழகத்தில் வேகமாகப் பரவத் தொடங்கியதும் 2020 மார்ச் முதல் ஓராண்டு நான் வீட்டைவிட்டு வெளிவராமல் மிகுந்த பாதுகாப்புடன் இருந்தேன். நிறைய நூல்களை வாசிப்பதில் என் நேரம் பயனுள்ள முறையில் செலவழிந்தது.

இந்த ஆண்டு ஜனவரி மாத முடிவில் கொரோனாவின் தீவிரம் குறைந்திருந்த நிலையில் ஈரோடு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றேன். கும்பகர்ணன் போருக்குப் புறப்பட்டபோது ‘விதி பிடர் பிடித்து உந்த நின்றது’ என்பான் கம்பன். என்னையும் விதி ஈரோடு நோக்கிப் பிடர் பிடித்து இழுத்ததை அப்போது நான் அறியவில்லை.

ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்த அரங்கில் நான் பேசி முடித்ததும் பலர் என்னுடன் செல்ஃபி எடுத்தனர். நான் முகக் கவசமின்றிக் காட்சி தரவேண்டுமென்று வற்புறுத்தினர். மறுக்க முடியாத நிலையில் நான் அதற்கு மனமின்றி இணங்க நேர்ந்தது. அதற்காக நான் கொடுத்த விலை மிக அதிகம். வீடு திரும்பியதும் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை உணர முடிந்தது.

இதயஅறுவை சிகிச்சையும் வால்வு மாற்றமும் செய்துகொண்ட என் மனைவிக்கும் என்னால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பொருளாதார வசதியற்ற நாங்கள் ஓர் அரசு மருத்துவமனையைத் தஞ்சமடைந்தோம்.

பரிசோதனைக்குப் பின்பு எங்களுக்கு ஆரம்ப நிலையில்தான் பாதிப்பு என்று சொல்லி, சில மாத்திரைகளை வழங்கி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அவர்கள் பரிந்துரையை வேதமாக ஏற்றுப் பத்து நாட்கள் இருந்ததில் நோய் முற்றிவிட்டது. இதைக் கேள்விப்பட்ட சித்த மருத்துவர் வீரபாபு என்னை வீட்டிற்கு வந்து சந்தித்தார்.

அவருடைய உழைப்பாளி மருத்துவ மனையில் சிகிச்சை பெறும்படி வற்புறுத்தி அழைத்துச் சென்றார். அரை மனதுடன் நான் என் மனைவியுடன் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு இசைந்தேன்.

சி.டி. ஸ்கேன் எடுத்ததில் என் நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது தெரிந்தது. நிமோனியா காய்ச்சல் என்னை மரணத்தின் விளிம்புவரை கொண்டு சென்றது.

உடல் முழுவதும் வெப்பத்தால் பற்றி எரிந்தது. தலையில் நெருப்புச் சட்டியைச் சுமப்பதுபோல் இருந்தது. செவிமடல்களில் தாங்க முடியாத வெப்பம் வீசியது. மூக்கில் ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில் 13 நாட்கள் மரணத்தோடு போராடினேன். நோயில் விழுந்து பாயில் படுத்துச் சாவில் முடிவதுதான் எனக்கான விதி என்றுணர்ந்தேன்.

மரணம் என் கண் முன்னால் நிதர்சனமாக நிழலாடியது. யாரையும் களப் பலியாக்க விரும்பாமல் தேர்தல் களத்திலிருந்து ரஜினி விலகி நின்றது எவ்வளவு விவேகமான முடிவு என்பது தெளிவாகப் புரிந்தது. அவர் மீது அன்றுவரை எனக்கிருந்த ஆழ்ந்த வருத்தமும் அகன்றது.

நான் பிழைக்க முடியும் என்ற நம்பிக்கையை முற்றாக இழந்துவிட்டேன். என் மனைவிக்குக் கொரோனா ஆரம்ப நிலையில் இருந்ததால் நான்கு நாட்களில் பூரண நலமடைந்து வீடு திரும்பிவிட்டது ஓரளவு ஆறுதலாய் அமைந்தது.

நான் நிச்சயம் கொரோனாவின் கொடிய பிடியிலிருந்து மீண்டுவிடுவேன் என்று நம்பிக்கையளித்த மருத்துவர் வீரபாபு இரவு பகல் பாராமல் எனக்கு உரிய சிகிச்சையை வழங்கி வந்தார். அவருக்கு வாய்த்த செவிலியர் அனைவரும் அற்புதமானவர்கள். நோயுற்ற குழந்தையை ஒரு தாய் பராமரிப்பது போல் என்னை அவர்கள் பராமரித்தனர்.

மருத்துவர் வீரபாபுவும், திருமதி வசந்தாவின் தலைமையில் இயங்கும் செவிலியர்களும் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவையால் இரண்டு வாரங்களுக்குப் பின்பு நிமோனியா காய்ச்சல் தணிந்தது.

அதற்குப்பின் தொடர்ந்த சிகிச்சையால் நான் பூரணமாக நலம் பெற்றேன். என்னைச் சாவின் கொடிய பிடியிலிருந்து காப்பாற்றிக் கரை சேர்த்தது சித்த மருத்துவம்தான்.

ஆனால் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஓமியோபதி ஆகியவற்றிற்கு அரசின் ஒத்துழைப்பு இல்லை என்பதுதான் அவலம்.

சென்ற ஆண்டு ஆங்கில மருத்துவத்துடன் சித்த, ஆயுர்வேத, ஓமியோபதி மருத்துவத்தையும் கொடிய கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்த முயன்ற சுகாதாரத் துறை, இப்போது வெறும் அலோபதியை மட்டுமே நம்பியிருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

என்னைப் போன்ற வலிமையான பொருளாதாரப் பின்புலம் இல்லாதவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து இலட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டியழுவதற்கு இயலுமா?

அரசு மருத்துவமனைகளை விட்டால் வேறு போக்கிடம் இல்லாத என்னைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு வரம் போல் வாய்த்திருப்பதுதான் வீரபாபு போன்றவர்களின் மருத்துவமனைகள். என் மனைவிக்கும் மகளுக்கும் நான்கு நாட்களும், எனக்கு ஒரு மாதமும் சிகிச்சையளித்ததுடன் மூன்று வேளையும் தரமான உணவும் வழங்கிய வீரபாபு என்னிடமிருந்து ஒரேயொரு ரூபாயையும் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.

நான் மிகவும் வற்புறுத்தி அற்பமான தொகையை அவரது மேசைமீது வைத்துவிட்டு வீடு திரும்பினேன்.

எனக்கு ஏற்படும் இழப்புகளையும் வலிகளையும் பிறரிடம் எப்போதும் நான் வெளிப்படுத்துவதில்லை. அதனால்தான் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம்வரை சென்று திரும்பியதைச் செய்தியாக்கவில்லை.

இப்போது ஒரு சமூக நோக்கத்திற்காகவே எனக்கு நேர்ந்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இன்று காட்டுத்தீயைப் போல் கொரோனா பரவிவரும் நிலையில் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் போதிய இடமில்லாத சூழலில் நம் மண் சார்ந்த சிகிச்சைகளின் பக்கம் அரசு முகம் திருப்ப வேண்டும். இனி வருங்காலங்களில் சித்த, ஆயுர்வேத மருத்துவம் பல்கிப் பெருக அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சி உடனடியாக சித்த மருத்துவமனைகளின் சேவையைப் பெருமளவில் பயன்படுத்த முன் வரவேண்டும். என் உயிரை மீட்டுத் தந்த வீரபாபுவின் சித்த மருத்துவமனைதான் அப்துல் கலாம் அவர்களின் ஆலோசகராக விளங்கிய மக்கள் நீதி மையத் துணைத் தலைவர் பொன்ராஜ் அவர்களின் உயிரையும் காப்பாற்றியது.

நிறைவாக நான் கூற விரும்புவது…. ஆரம்ப நிலையில் கவனிக்கத் தவறினால் கொரோனா நம்மைக் கொன்றுவிடும்.

வீடு திரும்பி ஒரு மாதமாகியும் நான் இன்னும் பழைய உடல் நிலையைப் பெறவில்லை. தளர்ச்சியிலிருந்து இன்னும் முற்றாக விடுபடவில்லை. வருமுன் காப்பதே விவேகம். தடுப்பூசியைப் பயன்படுத்தத் தயங்காதீர்கள். முகக் கவசம் அணியாமல் எங்கும் போகாதீர்கள். சமூக இடைவெளி மிகவும் முக்கியம். யாரோடும் செல்ஃபி எடுக்க முயலாதீர்கள். ஒவ்வொரு நாளும் வீட்டில் ஆவி பிடிக்கத் தவறாதீர்கள். அவசியமின்றி வெளியில் செல்லாதீர்கள்.

இன்று கொரோனா இவ்வளவு வேகமாகப் பரவியதற்கு அரசியல்வாதிகள் நடத்திய தேர்தல் பரப்புரைகளே முக்கிய காரணம் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். மக்கள் நலனுக்காக எந்த அரசியல் கட்சியும், தலைவர்களும் இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறது கொரோனா.

நமக்கு நாமின்றி நல்ல துணை யாருமில்லை.

தமிழருவி மணியன்