கர்ணன் – விமர்சனம்

கர்ணன்…

சுமார்.

மாரி செல்வராஜ் சில வலுவான காட்சிகளை வைத்திருக்கிறார். கொடியங்குளத்தில் நடந்த போலீஸ் அராஜகங்கள்தாம் மையச்சரடு. அது பற்றியும் அப்பகுதி மக்களின் பண்பாட்டு விஷயங்களையும் ஆவணப்படுத்துகிறார்.

கொஞ்சம் நிஜ வரலாற்றைப் பார்ப்போம். கொடியங்குளம் பள்ளர்கள் வாழும் கிராமம். 1995-ன் போது தமிழக டிஜிபியாக இருந்த வைகுந்த் 1999-ல் ஃப்ரண்ட்லைன் இதழுக்குக் கொடுத்த பேட்டியில் போலீஸ் மிக மோசமாக அத்துமீறியது என கொடியங்குளத்துக்கு நேரடியாகப் போய்க் கண்டு ஆய்வு செய்த அடிப்படையில் சொல்கிறார்: “They had indulged in mindless violence against hapless Dalits of the village – men, women and children. The police had ransacked their houses, damaged their television sets, ripped open the rice bags and thrown the rice on the streets. Worse and still more inhuman was their act of pouring diesel in the drinking water well. The police had also torn to pieces the university degree certificates of the boys and girls of the village. The villagers started wailing and weeping and what I witnessed shook me to the bones. Never in my career spanning over 30 years have I witnessed such a totally inhuman act on the part of my own police.” (ஆனால் அன்றைய அதிமுக அரசு இதை விசாரிக்க அமைத்த கோமதிநாயகம் கமிஷன், போலீஸ் இதில் நியாயமாகவே நடந்து கொண்டது என்றது. அந்த விசாரணைக்கு அக்கிராம மக்கள் ஒத்துழைக்கவில்லை.)

1995-ல் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளைச் சுற்றிய பல கிராமங்களில் பள்ளர், தேவர் இடையே கலவரங்கள் நடந்தன. (காரணம் வீரசிகாமணி என்ற கிராமத்தில் சில கல்லூரி மாணவர்களுக்கும் பேருந்து ஓட்டுநருக்குமான வாய்த்தகராறு.) அதன் உச்சமாய் நிகழ்ந்ததே கொடியங்குளம் போலீஸ் அராஜகம். (அந்தப் பகுதிகளில் காவல் துறையில் அதிகமும் பணியில் இருப்பது தேவர் சமூகத்தினரே.)

ஆக, அது கருப்பு வெள்ளையாய்ச் சொல்ல முடியாத தொடர் நிகழ்வுகளின் தொகுப்பு. படம் அவற்றை எளிமைப்படுத்தி பேருந்துப் பிரச்சனையையும் போலீஸ் அராஜகத்தையும் மட்டும் கதைக்கு எடுத்துக் கொள்கிறது. வெகுஜன சினிமாவின் எல்லை என்பதால் அதில் ஒன்றும் தவறில்லை. இது நேரடி வரலாற்றுத் தரவாய்க் கொள்ளத் தக்கதல்ல என்பதை மட்டும் இங்கு அடிக்கோடிடுகிறேன். (அசுரன் போகிற போக்கில் கீழ்வெண்மணி சம்பவத்தைக் கதையில் எடுத்தாண்டதைப் போல இதையும் நாம் பார்க்க இடமுண்டு.) கர்ணன் என்கிற மசாலா படத்தை நாம் கொடியங்குளம் நிகழ்வோடு நேரடியாகத் தொடர்புபடுத்தாமல் அதைத் தழுவிய ஒரு கற்பனைக் கதை என்று பார்ப்பதே நல்லது. ஒரு தனிமனிதனின் வீரத்தில் அநியாயம் அழிவதைக் காட்டும் படத்தை அப்படித்தானே சொல்ல முடியும்! அதுபோக பல மிகைகள் படத்தில் உண்டு. அவ்வகையில் இது கலை முலாம் பூசப்பட்ட ஓர் எம்ஜிஆர் படம்தான். (ஒரு சம்பவம் இப்படி நடந்து முடிந்திருக்கலாமே என்ற ஆதங்கம்தான் நாயக மையப் படங்கள் என்று கவித்துவமாகவும் இதைச் சொல்லலாம். மாற்றுவரலாறுகள் கூட அப்படித்தான்!)

மணியாச்சி காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரி பொடியங்குளம் கிராம ஆட்களை அடிக்கும் காட்சியில் அடி வாங்குபவர்கள் பின் அம்பேத்கர் படம், அதிகாரிக்குப் பின் நேதாஜி படம். மிக எளிமையாக இரண்டு தரப்பின் அடையாளத்தையும், அரசியலையும் சொல்லி விடுகிறார் மாரி செல்வராஜ். அதேபோல் தலித்கள் படிக்க முயற்சிப்பது முதல் விளையாட்டுப் போட்டியில் ஜெயிப்பது வரை எல்லாவற்றையுமே பிற்படுத்தப்பட்ட சமூகம் எரிச்சலோடே அணுகுவதைச் சுட்டுகிறார். போலீஸ் நிலைய வன்முறை, கிராமத்தில் புகுந்த போலீஸ் வன்முறை இரண்டுமே நம் மனதைத் தொந்தரவூட்டக்கூடிய காட்சிகள்.

காலா, அசுரன் போல் இதிலும் தேவர் X அரக்கர் என்ற இருமை வருகிறது – அவற்றை விடச் சிறப்பாக என்பேன். கண்ணபிரானுக்கு எதிரே கர்ணனும் துரியோதனனும் நிற்கின்றனர். பேருந்தை நொறுக்கிய சட்டம் ஒழுங்குப் பிரச்சனை கூட அந்தப் போலீஸ் அதிகாரிக்குப் பெரிய விஷயம் இல்லை. ஆனால் தலித்களின் கம்பீரப் பெயர்களும், அவர்களின் தலப்பாக் கட்டும், அவர்கள் அவரைத் தொட்டுப் பேசுவதும் சகிக்கவியலா அகங்காரத்தை அளிக்கிறது. அதைவிட முக்கியமாக இரண்டு தரப்பின் தந்தையர் பெயர்களைச் சொல்வதன் மூலம் (கந்தையன் – மாடசாமி) முன்பு இரு சாதிகளுமே கை கட்டி அடிமைகளாகத்தானே இருந்தன என்பதையும் சுட்டிக் காட்டுகிறார் மாரி செல்வராஜ். இவை எல்லாமே நன்று.

இம்மானுவேல் சேகரன் ஓவியம் ஒரு வீட்டுச் சுவரில் தலையின்றி வரையப்பட்டுப் பின் படத்தின் இறுதியில் லாலின் முகத்தை அதில் இணைத்து நிறைவு செய்யப்படுகிறது. சாதிக் கலவரத்தில் உயிர் நீத்த ஒவ்வொருவரும் இம்மானுவேல் சேகரன்தான் என்று சொல்ல வருகிறாரோ மாரி செல்வராஜ்! ஆரம்பத்தில் வலிப்பு வந்து சாலையில் கிடக்கும் பெண் இறந்து போவதைக் காட்டியிருப்பதும் நன்று. கர்ணன், இன்னொரு கர்ணனான தளபதி ரஜினி படம் போட்ட பனியன் அணிந்து வருவது போன்ற புன்னகை தரும் இடங்களுண்டு. படத்தில் எனக்கு மிகப் பிடித்த காட்சி லால் ஒரு கிழவியிடம் 10 ரூபாய் திருடும் இடம். அத்தனை பிரமாதமான ஒரு காதல் காட்சி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிலும் வந்திருக்கிறதா!

அப்புறம் படத்தில் என்ன பிரச்சனை?

பெரிய சுவாரஸ்யங்களற்ற திரைக்கதை. இதே சிக்கல் பரியேறும் பெருமாள் படத்திலும் இருந்தது. இதில் மையப் பிரச்சனையே இடைவேளையின் போதுதான் நடக்கிறது. அதுவரை பேருந்து நில்லாத கிராமம் என்பதைச் சுற்றியே நகர்கிறது. இடையே கொஞ்சம் காதல், கொஞ்சம் சாதியம், கொஞ்சம் அமானுஷ்யம் என. கால் கட்டிய கழுதை, அம்மன் முகமிட்ட பெண், தலையற்ற (புத்தர்?) சிலை, குதிரை, வாள் எனப் பல குறியீடுகள் உண்டு. ஆனால் அவை நல்ல visual-கள் என்ற அளவிலேயே நின்று விடுகின்றன. அந்தக் காட்சிகள் படத்தின் பேசுபொருளை, கலாப்பூர்வத்தை எந்த வகையிலும் உயர்த்தவில்லை. ஒரு சாவு நடக்கும் அதே நேரம் ஒரு குழந்தை பிறக்கிறது போன்ற பார்த்துச் சலித்த காட்சிகளுமுண்டு.

ஏற்கனவே சுட்டிக்காட்டியது போல் 1995-ல் நடந்த கொடியங்குளம் கலவரம் படத்தில் ஏன் 1997-ல் நடப்பதாகக் காட்டப்படுகிறது என்பது புரியவில்லை. 1995-ல் அதிமுக ஆட்சி; 1997-ல் திமுக ஆட்சி. இது ஏதோ தெரியாமல் செய்யப்பட்டதாகத் தோன்றவில்லை. படத்தில் போலீஸ் அதிகாரி தமிழகமெங்கும் பேருந்துகளை ஒட்டி பிரச்சனை போய்க் கொண்டிருக்கிறது என்கிறார். அது 1997-ல் நடந்த போக்குவரத்துக் கழக பெயர் மாற்றப் பிரச்சனையையே குறிக்கிறது. கலைஞர் விருதுநகரில் வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகத்தை அமைத்தார் – முக்குலத்தோர் அப்பெயர் தாங்கிய பேருந்துகளில் பயணிக்க மாட்டோம் என அறிவித்தனர். தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள், கலவரங்கள் நடந்தன. அதுவும் பள்ளர் Vs தேவர் பிரச்சனைதான். ஆக மாரி செல்வராஜ் எதனாலோ ப்ரக்ஞைப்பூர்வமாகவே 1995-க்குப் பதிலாக 1997-ம் ஆண்டு என்பதைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். (திமுக ஆட்சியில் தலித்களுக்கு எதிரான போலீஸ் அராஜகங்கள் நிகழாது என்பதல்ல நான் சொல்ல வருவது – தாமிரபரணி என்னை மன்னிக்காது.)

எல்லாவற்றுக்கும் மேல் கபாலி, காலா, அசுரன் போல் சாதியத்துக்குத் தீர்வாய் வன்முறையை முன்வைக்கிறது. போலீஸைக் கழுத்தறுத்துப் போட்டால் ஊருக்குப் பேருந்து நிறுத்தம் வந்து விடும், தலித்களின் கல்வித் தடை ஒழிந்து விடும் என்பது போல் ஒற்றைப் படையான கருத்தாக்கத்தைப் பார்வையாளன் அடையும் ஆபத்து இப்படத்தில் நிரம்ப இருக்கிறது.

இன்னொரு விஷயம். தலித்களின் மீதான வன்முறைகளை எதிர்கொள்ளுதல் பற்றி மாரி செல்வராஜின் நிலைப்பாடுதான் என்ன என்ற குழப்பமும் வருகிறது. பரியேறும் பெருமாள் பேசிய சாத்வீக முறைக்கு நேரெதிரான பாதையை இப்படம் பேசுகிறது. அதனாலேயே ரஞ்சித் படங்களிலிருந்து விலகி நின்ற அவர் இப்போது அதிலேயே ஐக்கியமாகி விட்டார்.

பரியேறும் பெருமாள் போல் இதுவும் கண் மண் தெரியாமல் சமூகவலைதளங்களில் கொண்டாடப்படும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனந்த விகடன் 75 மார்க் தந்தாலும் தருவார்கள். மாரி செல்வராஜுக்கு அதற்காக வாழ்த்துக்கள்

.பார்க்கலாம் – அனைத்துப் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தம் சமூகம் தலித்களுக்கு இழைத்த, இழைத்துக் கொண்டிருக்கும் அநீதிகளைத் தலைகுனிந்து பார்த்துக் குற்றவுணர்ச்சி கொள்ளவேனும்.

Saravanakarthikeyan Chinnadurai