”உங்கள் மரணம் எப்படி நேரப் போகிறது என்கிற விஷயம் தெரிய வந்திருக்கிறது!” – (பகுதி 1)
ஒரு சின்ன விஷயம்.
உங்களின் மரணம் எப்படி நேரப்போகிறது என்கிற விஷயம் தெரிய வந்திருக்கிறது.
காலநிலை மாற்றம்!
வேடிக்கையாக இருக்கலாம். நமக்கு இருக்கும் பிரச்சினைகளில் காலநிலை மாற்றம் ஒரு பிரச்சினையாக தெரியாமலும் இருக்கலாம்.
உண்மையும் அப்படித்தான்.
கண் முன்னே பட்டவர்த்தனமாக நின்றிருக்கும். சாவகாசமாக வேறு வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கையில் சடாரென வீழ்த்தி கிடத்தும்.
சமீபகாலமாக உலகச் செய்திகளென பார்த்தால் நாம் அதிகம் கேட்கும் வார்த்தைகள், Climate Change! தமிழில் ’காலநிலை மாற்றம்’ என மொழிபெயர்க்கலாம். ஆனால் தமிழக செய்திகளில் அந்த வார்த்தைகள் இடம்பெறுவதே இல்லை.
முன்னேறிய நாடுகளில் காலநிலை மாற்றம் பற்றிய விவாதங்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன. காலநிலை மாற்றத்தை கொள்கையளவில் அரசுகள் ஏற்க பல போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மறுபக்கத்தில் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வேறு பிரச்சினைகள் பேசப்படுகின்றன.
பல ரூபங்களில் தன்னுடைய இருப்பை காலநிலை மாற்றம் தொடர்ந்து அறிவித்தாலும், தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளில் ஒன்றாக காலநிலை மாற்றம் இடம்பெறவில்லை. தமிழக அரசின் கட்டமைப்புகளிலும் அரசியலிலும் காலநிலை மாற்றம் பற்றிய புரிதலின்மையே எங்கும் வீற்றிருக்கிறது.
எந்தவொரு பிரச்சினையும் அதன் முழுமை உணரப்படாமல், தீர்க்கப்பட முயற்சிக்கும்போது, அப்பிரச்சினை வளரும் சாத்தியமே அதிகம் உண்டு. காலநிலை மாற்றம் பற்றிய புரிதலை நம் அரசுகளும் கட்சிகளும் கட்சித் தலைமைகளும் கொள்ள வேண்டும் என்பதற்கான முயற்சியே இந்த பதிவேடு.
காலநிலை மாற்றத்தில் அப்படியென்ன பெரிய பிரச்சினை இருக்கிறது?
சுருக்கமாக சொல்வதெனில், அடுத்த பதினைந்து வருடங்களில் நாம் அனைவரும் அழியத் தொடங்கவிருக்கிறோம்.
முதல் பார்வைக்கு ஒரு ஹாலிவுட் படத்துக்கான கதைக்கரு போல் தோன்றும் இதுவே இன்று ஒட்டுமொத்த மனித குலமும் வெவ்வேறு வடிவங்களில் சந்தித்துக் கொண்டிருக்கும் சிக்கல்களுக்கான ஆதார பிரச்சினை.
ஒரே நாளில் பெய்யும் மழை, வறட்சி கொடுக்கும் மழையின்மை, உணவுப் பற்றாக்குறை, தண்ணீர் பஞ்சம் என பல்வேறு விஷயங்களை ஏதோவொரு காலகட்டத்தில் இதற்கு முன் நாம் சந்தித்திருக்கலாம். இனி அடிக்கடி நாம் அவற்றை சந்திக்கவிருக்கிறோம். இதுவரை மனித குலம் எந்த வகையில் இயற்கைக்கு பழகியிருந்ததோ அத்தகைய இயற்கையை நாம் இனி காணப் போவதில்லை.
இனி வரும் வாழ்க்கைகளும் சமூகநிலைகளும் எந்தவித முன் அனுமானத்துக்கும் உட்படாதவையாக இருக்கப் போகின்றன. காரணம், காலநிலை மாற்றம்!
எதிர்பாராதவைகளை மட்டுமே எதிர்பார்க்கும் காலத்துக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம். கண்ணை கட்டி காட்டில் விட்டவனின் நிலை. காட்டில் விட்டவன் யாரென்று கேட்டால், நாம் என்பதே பதில்!
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரத்தில் நிக்கோலஸ் ஸ்லோன் என்பவர் வசித்து வருகிறார். கடல் சார்ந்த பேரிடர் காப்பு நடவடிக்கைகளில் அனுபவம் பெற்றவர். ஐம்பது வயதை தாண்டியவர். ஸ்லோன் வசித்து வந்த கேப் டவுன் நகரத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்யவென ஆலோசித்த ஸ்லோனுக்கு ஒரு திட்டம் உதித்தது. அதாவது அண்டார்டிகா பகுதியில் இருந்து ஒரு பனிக்கட்டியை கட்டி இழுத்து வந்து கேப் டவுன் அருகே நிறுத்தி மக்களின் தண்ணீர் தேவையை போக்குவதென ஒரு திட்டம்.
படு பைத்தியக்காரத்தனமான திட்டமாக தெரிகிறது இல்லையா?
திட்டமே பைத்தியக்காரத்தனமாக தெரிந்தால், அத்தகைய திட்டத்தை யோசிக்குமளவுக்கு தூண்டிய தண்ணீர் பற்றாக்குறை எவ்வளவு கொடுமையானதாக இருந்திருக்கும்?
40 லட்சம் மக்களை கொண்டிருக்கும் கேப் டவுன் நகரம் 2015ம் ஆண்டு தொடங்கி 2017ம் ஆண்டு வரை, மூன்று தொடர் வருடங்களுக்கு கடும் வறட்சியை சந்தித்தது. மழை பொய்த்திருந்தது. 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் நகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த நீர் நிலைகளின் கொள்ளளவு தரை தட்டியிருந்தது.
அதிகார கட்டமைப்பின் வசமிருந்த நீர் சேமிப்பு தீர்ந்து போன முதல் நகரமாக மாறும் கட்டத்தை கேப் டவுன் நகரம் நெருங்கியிருந்தது. நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாளொன்றுக்கு 50 லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுவதென முடிவானது. குளியல், உணவு தயாரிப்பு, துவைத்தல், பாத்திரம் கழுவுதல் மற்றும் குடிக்கவென மொத்த குடும்பத்துக்கும் ஐம்பது லிட்டர்தான் ஒரு நாளுக்கான தண்ணீர்.
ஒரு வருடத்துக்கு பிறகு நிலைமை கொஞ்சம் சரியானது. தேவையான அளவுக்கு இல்லையென்றாலும் மோசமாக இல்லாத அளவுக்கு மழை பொழிந்தது.
அன்றாட தண்ணீர் பயன்பாடு 50-லிருந்து 70 லிட்டருக்கு உயர்த்தப்பட்டது.
‘நிலைமை சரியானது’ என்கிற நிலையே அவ்வளவாகத்தான் இருந்தது. வேகமாக குளித்து, குளியலில் வடிந்த நீரை மீண்டும் சேகரித்து பயன்படுத்தும் நிலை. பணக்காரன் – ஏழை என்ற பேதமெல்லாம் இல்லை. எல்லா மக்களையும் சரி நிகர் சமத்துவத்துடன் பாரபட்சமே இல்லாமல் வறட்சி பாதித்தது.
விளைச்சல் பொய்த்தது. விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரங்களை காக்க, அவர்கள் வளர்த்த கால்நடைகளையே கொன்றனர். 30000க்கும் மேலான வேலைகள் பறிபோயின. பனிக்கட்டி இழுத்து வரும் திட்டத்தை ஸ்லோனுக்கு தோன்ற வைத்தது இந்த சூழல்தான்.
ஸ்லோனின் திட்டத்துக்கான செலவு மட்டும் 1400 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டது. இழுத்து வரவிருக்கும் பனிக்கட்டியின் எடை 10 கோடி டன். ஏதோவொரு நம்பிக்கையில் இத்திட்டத்தை செயல்படுத்தும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார் ஸ்லோன்.
நிக் ஸ்லோனை பொறுத்தவரை ‘அபரிமிதமான தண்ணீர் புழங்கியிருந்த கேப் டவுனுக்கு திரும்ப செல்ல முடியாது. கடந்த 20 வருடங்களில் மட்டும் 40% மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது. இனியும் அதிகரிக்கவே செய்யும். கூடவே வறட்சியும் அதிகரிக்கும்’ என சொல்லும் ஸ்லோன் “குழாய்களில் தண்ணீர் வரவில்லை என்றால், முதல் நாள் மக்கள் வரிசைகளில் நிற்கலாம். இரண்டாம் நாளும் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், கொலைகள் விழத் தொடங்கும்” என்றார்.
கேப் டவுன் நகரம் ஒரு உதாரணம் மட்டுமே. ஸ்லோன் சொன்னதில் துளி கூட பொய் இல்லை என்பதை நம் தமிழகம் சில மாதங்களுக்கு முன் கூட நிரூபித்தது.
கேப் டவுன் நகரம் ஒரு உதாரணம் மட்டுமே. ஸ்லோன் சொன்னதில் துளி கூட பொய் இல்லை என்பதை நம் தமிழகம் சில மாதங்களுக்கு முன் கூட நிரூபித்தது.
2019ம் வருடத்தின் தொடக்கம் கடுமையான தண்ணீர் பஞ்சத்துடன் தமிழகத்துக்கு தொடங்கியது. சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் வறட்சி இருப்பதாக அரசு அறிவித்தது. காரணம், 2018ம் ஆண்டின் வட கிழக்கு பருவ மழையின் அளவு குறைந்ததே. இதில் சூட்சுமம் என்னவென்றால் 17 மாவட்டங்களில் பருவமழையின் அளவு குறைந்திருந்ததால் வறட்சி. மீதமுள்ள 7 மாவட்டங்களில் சரியான அளவுக்கு பருவமழை பெய்திருந்த போதும் வறட்சி.
வருடத்துக்கு வர வேண்டிய மழை குறைந்து போயிருந்ததே காரணம்!
பருவமழை பொய்த்தாலும் சரி, பெய்தாலும் சரி குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் வகையில் தமிழகத்தின் மழை வரத்து நுட்பமாக அமைந்துள்ளது. இந்த நுட்பத்துடன் காலநிலை மாற்றம் சேருகையில் விளைவு பன்மடங்கு சேதத்தை உருவாக்குகிறது.
ஹாலிவுட் சினிமா நடிகர் லியோனார்ட் டி காப்ரியோ தன்னுடைய இணையப் பக்கத்தில், சென்னையில் நிலவிய பஞ்சத்தை குறிப்பிட்டிருந்தார். நியூ யார்க் டைம்ஸ், பிபிசி என உலக ஊடகங்கள் பல சென்னையை பற்றி பேசின. போரூர் ஏரி சில மாதங்களில் காய்ந்து வறண்ட செயற்கைக்கோள் காணொளி அதிகமாக பகிரப்பட்டது. அமெரிக்க நாட்டின் செனட்டரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான பெர்னி சாண்டர்ஸ்ஸும் சென்னையை பற்றி தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
”காலநிலை மாற்றத்தை பற்றி அணுகுவதில் சமரசமே இருக்கக்கூடாது என்பதற்கு இதுவே காரணம். புதைபடிம எரிபொருள் வணிகத்தின் லாபவெறியால் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இது சர்வதேச நெருக்கடி”
சென்னை மெட்ரோ நகரமாக இருப்பதால், அங்கு குடிநீர் பஞ்சம் என்பது சுலபமாக உலகச்செய்தி ஆக முடிந்தது. ஆனால் பிற ஊர்களில் நிலைமை ஊடகங்கள் அறியாதது. தஞ்சாவூரில் குடிநீர் தேக்கத் தொட்டியிலிருந்து அதிக நீர் எடுத்த குடும்பத்தை தட்டி கேட்டதற்காக ஆனந்த் பாபு என்பவர் அடித்தே கொலை செய்யப்பட்டார்.
உலகின் பல நாடுகளை போல தமிழகத்துக்கும் காலநிலை மாற்றம் புதிதொன்றுமில்லை. கடந்த சில வருடங்களாகவே காலநிலை மாற்றம் தன்னை அறிவித்துக் கொண்டே இருக்கிறது. நாம்தான் பொருட்படுத்த மறுக்கிறோம்.
2009ம் ஆண்டு கோபன்ஹேகன் நகரத்தில் ஐநா மன்றம் காலநிலை மாற்றத்துக்கான மாநாட்டை கூட்டியது. முக்கியமான ஆய்வறிக்கை ஒன்று மாநாட்டில் வெளியிடப்பட்டது. நூறு சர்வதேச அறிவியலாளர்கள் சேர்ந்து ஆய்வு செய்து தயாரித்த அறிக்கை. தமிழகத்தை பொருட்படுத்தும் சேதி ஒன்றும் அதிலிருந்தது.
2100ம் ஆண்டில் கடல் மட்டம் 1.4 மீட்டர்கள் அதிகரித்திருக்கும் என்றது அறிக்கை. அதாவது 4 அடிகள்!
கடல் மட்டம் நான்கடி உயர்ந்தால் 2100ம் ஆண்டில் மாலத்தீவு இல்லாமல் போகலாம் என ஐநா கூறியது. கடலோர நகரங்களான மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகியவையும் இந்த நூற்றாண்டின் இறுதியில் கடலுக்கடியில் சென்றிருக்கலாம் என்கிறது ஆய்வு.
ஏன் கடல் மட்டம் உயர்கிறது?
கடல் பரப்பில் வெப்பம் அதிகரிப்பதாலும் பனிப்பாறைகள் உருகுவதாலும்.
1870ம் ஆண்டில் இருந்து கடல் மட்டம் ஆண்டுக்கு 1.7 மிமீ உயர்ந்து வந்தது. கடந்த சில பத்தாண்டுகளாக அந்த அளவு ஆண்டொன்றுக்கு 2.5 மிமீ என மாறியிருக்கிறது.
கோபன்ஹேகன் நகர மாநாட்டில் மாலத்தீவின் ஜனாதிபதி, ’எந்த மாற்றமும் இல்லாமல் நிலைமை அப்படியே இருக்குமானால், நாங்கள் வாழ முடியாது. நாங்கள் இறந்துவிடுவோம். எங்கள் நாடு காணாமல் போகும்’ என பேசுமளவுக்கு நிலைமை இருக்கிறது.
தமிழகத்தில் இருந்து மாலத்தீவு ஒன்றும் அதிக தொலைவில் இல்லை. நாம் இருக்கும் அதே இந்தியப் பெருங்கடலில்தான் மாலத்தீவும் இருக்கிறது. தமிழகத்தின் தெற்கு முனையில் இருந்து 300 கிலோமீட்டர்களில் இருக்கும் அண்டை வீடு!
நான்கடிக்கு கடல் மட்டம் உயரும் என கூறிய ஆய்வில் இன்னொரு முக்கிய விஷயம் ஒன்றும் இருக்கிறது.
2100-ம் ஆண்டுக்குள் நான்கடி கடல் மட்ட உயர்வு என்பது 2009ம் ஆண்டின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 2007ம் ஆண்டில் கணிக்கப்பட்டதைவிட இரண்டு மடங்கு அதிகம். அதாவது 2007ம் ஆண்டில் கணிக்கப்பட்டதை காட்டிலும் மிக வேகமாக புவி வெப்பமடைந்து வருகிறது.
2007லிருந்து 2009ம் ஆண்டில் இரண்டு மடங்கான வேகத்தை அளவாக கொண்டு கணக்கிட்டால், 2100ம் ஆண்டு என்பது போய் இன்னும் நெருக்கத்துக்கு வருகிறது நமக்கான காலக்கெடு!
வானிலை அல்லது காலநிலை பெரியதாக தமிழகத்தை எப்போது பாதித்தது என சற்று யோசித்து பார்த்தால், முதல் நினைவு 2015ம் ஆண்டை தோண்டி கொண்டு வரும்.
2015-ம் ஆண்டின் சென்னை மழையை யாராலும் மறந்துவிட முடியாது. பல துர்கனவுகளை கொடுத்த காலகட்டம் அது. அரசல்லாத தன்னார்வலர்களின் பணியை மெச்சும் நிகழ்வாக தொடர்ந்து நினைவூட்டப்படும் நிகழ்ச்சி!
அதே சென்னை மழை மேலும் இரண்டு விஷயங்களையும் இன்றைய சூழலில் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. காலநிலை மாற்றத்தின் விளைவு என்னவாக இருக்குமென்பது முதலாவது. காலநிலை மாற்றம் குறித்த புரிதலும் தயாரிப்பும் அரச மட்டத்தில் எப்படி இருக்கிறது என்பது இரண்டாவது.
இரண்டுமே மக்களுக்கு எதிராகவே இருக்கிறது.
டிசம்பர் 1ம் தேதி, ஒரே நாள். 494 மிமீ மழை கொட்டி தீர்த்தது. நூற்றாண்டில் இல்லாத மழை. குறைந்தபட்சம் அப்போது அப்படித்தான் சொல்லப்பட்டது.
30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அடிப்படை வசதிகளை கூட தொலைத்து தெருவில் நின்றனர். அடுத்த நாளே சென்னை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டது. நவம்பர் மாதத்திலேயே வட கிழக்கு பருவ மழையின் மொத்த வரத்தும் கொட்டப்பட்டு விட்டது. அதற்கு பிற்பாடும் நேர்ந்த டிசம்பர் 1ம் தேதி மழையை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
‘நூற்றாண்டு காணாத’, ‘வரலாறு காணாத’, ‘யாரும் எதிர்பார்த்திராத’ போன்ற வார்த்தைகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் நிலவிய தமிழகத்தின் காலநிலைகள் வழங்கத் தொடங்கின.
(இன்னும் வரும்)
ராஜசங்கீதன்
Courtesy: Poovulagu.org