சூரரைப் போற்று – விமர்சனம்

அறிவியல் – தொழில்நுட்பத்தின் பயன்கள் அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பது மனிதநேய மாந்தர்களின் பெருங்கனவாகும். அந்த வகையில், ஏழை எளிய மக்களுக்கும் வானளாவிய வானூர்திப் பயணம் வசப்பட வேண்டும் என்ற பெருங்கனவுடன் பெருமுயற்சிகளில் ஈடுபட்டு நிஜ வாழ்க்கையில் சாதித்துக் காட்டிய ’ஏர் டெக்கான்’ விமான நிறுவனத்தின் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சில உண்மைச் சம்பவங்கள் மற்றும்  அவர் எழுதிய ‘சிம்பிள் ஃப்ளை’ என்ற நூல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும், நிறைய கற்பனை கலந்தும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

சூர்யா நடிப்பில், தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், ‘கோவிட் 19’ காலகட்டம் என்பதால் திரையரங்குக்கு வர இயலாமல் நேரடியாக ‘அமேசான் பிரைம்’ ஓ.டி.டி.பிளாட்பார்மில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே தற்போது வெளியாகியிருக்கிறது. இதன் நிஜ ஹீரோவான கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் இப்படத்தைப் பார்த்துவிட்டு, Sorarai potru ..Heavily fictionalised but outstanding in capturing the true essence of the story of my book. A real roller coaster. Yes watched it last night. Couldn’t help laughing and crying on many family scenes that brought memories” என்று நெகிழ்ச்சியுடன் பாராட்டி ட்வீட் செய்திருப்பது இப்படத்துக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய கவுரவம் ஆகும்.

கதை என்னவென்றால், மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்தவர் பூ ராமு (ஆறுவிரல் வாத்தியார்). இவரது மனைவி ஊர்வசி. இத்தம்பதியரின் மகன் சூர்யா (நெடுமாறன் ராஜாங்கம்).

அரசுக்கு மனு எழுதிப் போட்டு மின்சார வசதி உள்ளிட்ட கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உதவுகிறார் பூ ராமு. அவரின் அறவழியால் சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்த முடியவில்லை. ஆனால், கிடுகிடு போராட்டத்தால் அதிர்வலையை ஏற்படுத்துகிறார் அவரின் மகன் சூர்யா. இது தந்தைக்குப் பிடிக்காமல் போகிறது. இதனால் மோதல் வலுக்க, சூர்யா தேசிய பாதுகாப்பு அகாடமியில் விமானப் படை அதிகாரியாகத் தேர்வாகிச் செல்கிறார்.

ஒரு கட்டத்தில் தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாதபோது அவசரமாக ஊருக்கு வர நினைக்கிறார் சூர்யா. விமானப் படையில் பணிபுரிந்தபோதும் அவரிடம் அதிகப் பணமில்லாத காரணத்தினால் விமானத்தில் வர முடியாமல் போகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வர முடியாததால் அவரது தந்தையின் இறுதிச் சடங்கில்கூட அவரால் கலந்தகொள்ள முடியவில்லை.

இதனால் விரக்தி அடையும் சூர்யா, பணக்காரர்கள் மட்டும் பறக்கும் விமானத்தில் தன்னைப் போன்று இருக்கும் ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், விமானத்தில் பறப்பதை பெருங்கனவாகக் கொண்டிருக்கும் கிராமத்து மக்கள் ஆகியோரின் கனவை நிறைவேற்ற குறைந்த விலையில் விமான சேவை தொடங்க முயற்சி செய்கிறார்.

சூர்யாவின் திட்டத்தை தெரிந்துகொண்ட மற்றொரு விமான நிறுவன தொழிலதிபரான பரேஷ் ராவல் சூழ்ச்சிகள் செய்து சூர்யாவுக்கு முட்டுக்கட்டை போடுகிறார். இறுதியாக அந்த சூழ்ச்சிகளை சூர்யா எப்படி வென்று தன் லட்சியத்தை அடைகிறார் என்பதே கதை.

0a1c

இக்கதையில் நாயகனாக நடித்திருக்கும் சூர்யாவை முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் பார்க்க முடிகிறது. நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். கோபம், விரக்தி, வெறுப்பு, இயலாமை, வலி என நடிப்பில் தடம் பதித்திருக்கிறார். தந்தையை பார்க்க வர வேண்டும் என்பதற்காக விமான நிலையத்தில் பணம் கேட்கும் காட்சியில் இவரின் நடிப்பு அபாரம். ஊருக்கு வந்தவுடன் தாயை சந்திக்கும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார். ஏர்போர்ஸ் ஆபிசராக இருக்கும்போது கம்பீரமாகவும், காதல் மனைவியுடன் இருக்கும்போது புத்துணர்ச்சியாகவும் நடித்திருக்கிறார். ’சூரரைப்போற்று’ சூர்யாவின் கரியரில் மிக முக்கியமான படம் என்றால் அது மிகையாகாது.

நாயகியாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி, முதல் படம் என்று தெரியாத அளவிற்கு முதிர்ச்சியான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் கர்ப்பம் என்பதை சூர்யாவிடம் வேறுமாதிரியாகச் சொல்ல, “ஏண்டீ, நீ சாதாரண பெண் போல பேசவே மாட்டியா?” என கேட்க வைத்து ரசிக்க வைக்கிறார். என்னதான் கணவர் விமான நிறுவனம் ஆரம்பிக்க நினைத்தாலும் தனக்கு ஒரு பிசினஸ் வேண்டும் என பொம்மி பேக்கரி ஆரம்பித்து அதை விளம்பரப்படுத்தும் காட்சியில் சபாஷ் போட வைக்கிறார்.

படத்தில் பங்குபெற்றுள்ள ஏனைய கேரக்டர்களில் பூ ராமு, ஊர்வசி, காளிவெங்கட்,, மோகன்பாபு, பரேஷ் ராவல், கருணாஸ் உள்ளிட்டோர் தத்தமது பாத்திரங்களை உணர்ந்து நடித்து ரசிக்க வைக்கிறார்கள்.

’இறுதிச் சுற்று’ படத்தில் நம்மை ஈர்த்த இயக்குனர் சுதா கொங்கரா இதிலும் அதை தக்க வைத்துள்ளார். பொதுவாக உண்மைக் கதைகளைப் படமாக எடுக்கும்போது அவை டாக்குமெண்ட்ரி போல் ஆகிவிடும் ஆபத்து உண்டு. ஆனால் அதுபோல் இல்லாமல் இதில் தேவையான கமர்சியலைக் கலந்து சுவாரஸ்யமாகத் தந்திருக்கிறார் சுதா கொங்கரா. பாராட்டுகள்.

நிகேத் பொம்மியின் கேமரா மேஜிக் நிகழ்த்தியுள்ளது. டெல்லி, மதுரை, விமானங்களின் ஓட்டம் என்று சுற்றிச் சுழன்று விதவிதமான கோணங்களில் ஈர்க்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் ’பருந்தாகுது ஊர்க்குருவி’ என்ற மாறா தீம் செம்ம. ’காட்டுப்பயலே’ காதலின் ராகம் என்றால், ’மண்ணுருண்ட மேல’ தத்துவத்தில் ததும்பி நிற்கிறது. ஏகாதசியின் பாடல் வரிகளும், செந்தில் கணேஷின் குரலும் ’மண்ணுருண்ட மேல’ பாடலுக்கு இன்னும் அதிக அர்த்தங்களைக் கொடுத்துள்ளன. கதையோட்டத்துக்குத் தகுந்தபடி பின்னணி இசையில் பிரகாசிக்கிறார் ஜி.வி.

“நீ ஒரு சொகுசுக்காரன்; நான் ஒரு சோசலிஸ்ட்” என்று இப்படத்தில் ஒரு வசனம் வருகிறது. உச்சக்கட்ட காட்சியொன்றில் வரும் இந்த வசனத்துக்கு படத்தின் கதைக்கரு, காட்சியமைப்புகள், கதைமாந்தர் உறவுகள் கட்டமைக்கப்பட்ட விதம் நியாயம் செய்கிறது.

’சூரரைப் போற்று’ – அவசியம் பார்த்து, ரசித்து, கொண்டாடப்பட வேண்டிய படம்