மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம்: 4 பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் விசாரணை

சென்னை ஐஐடி பெண்கள் விடுதியில் கேரளாவைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக 4 பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் பாத்திமா லத்தீப் (வயது 20). இவர் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு எம்.ஏ மானுடவியல் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி இரவு தனது அறைக்குள் சென்றவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மாணவியை, அவரின் தாய் செல்போனில் நீண்ட நேரம் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் பதட்டம் அடைந்தவர், 9ஆம் தேதி காலையில் பக்கத்து அறையில் உள்ள மாணவியை தொடர்புகொண்டு விவரத்தை கூறியுள்ளார்.

அந்த மாணவி பாத்திமாவின் அறைக்குச் சென்று பார்த்தபோது, கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் கல்லூரி நிர்வாகத்தினர் கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்க, போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மாணவி பாத்திமா தூக்கில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கோட்டூர்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், கேரள முதல்வர் பினராயி விஜயனை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து, தனது மகளின் மரணம் குறித்து நேர்மையான விசாரணை நடத்த உதவ வேண்டும் என்று மனு கொடுத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாத்திமா நன்றாக படிக்கும் மாணவி. அவர் சரியாக படிக்கவில்லை என்று தற்கொலை செய்து கொண்டதாக கூறுவது முட்டாள்தனமானது.

தமிழக போலீஸார், என் மகளின் மரணத்துக்கான உண்மையான காரணத்தை மறைக்கப் பார்க்கின்றனர். அவளின் செல்போனையும் கொடுக்க மறுக்கின்றனர். எங்கள் மகளின் மரணம் குறித்து நேர்மையான விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமருக்கும், தமிழக முதல்வருக்கும் அப்துல் லத்தீப் புகார் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து மாணவி பாத்திமாவின் மரணம் குறித்து கோட்டூர்புரம் போலீஸார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். நேற்று 4 பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் விசாரணை நடத்தினர். தடயவியல் துறையினரின் சோதனையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், “மாணவியின் தற்கொலைக்கு பேராசிரியர்களே காரணம். பேராசிரியர்கள் மனஉளைச்சல் ஏற்படுத்தியதால்தான் தற்கொலை செய்துகொள்வதாக மாணவியே தனது செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். மாணவியின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும்”’ என்று கோரி ‘கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பினர் சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தின் நுழைவு வாயிலில் நேற்று போராட்டம் நடத்தினர்.