மராட்டியத்தில் குடியரசு தலைவர் ஆட்சி! பாஜக ஆட்சி அமையும் வரை நீடிக்கும்!!

சமீபத்தில் மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி – சிவசேனா கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. எனினும், பாஜக – சிவசேனா இடையே, ‘எந்த கட்சிக்கு முதல்வர் பதவி’ என்பது உள்ளிட்ட அதிகாரப் பகிர்வில் உடன்பாடு ஏற்படாததால் அங்கு ஆட்சி அமைக்க முடியாமல் இழுபறி நீடித்தது.

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் கோஷியாரி அழைப்பு விடுத்து, 48 மணி நேரம் கெடு கொடுத்தார். ஆனால் தங்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்கப் போவதில்லை என பாஜக தெரிவித்துவிட்டது.

இதையடுத்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனா ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதா என கேட்டு ஆளுநர் கோஷியாரி அக்கட்சிக்கு 24 மணி நேரம் கெடு கொடுத்தார். தங்களுக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கேட்ட சிவசேனாவின் கோரிக்கையை அவர் நிராகரித்துவிட்டு, மூன்றாவது பெரிய கட்சியான சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதா என கேட்டு அக்கட்சிக்கு இன்று (12-11-2019) இரவு 8.30 மணி வரை கெடு கொடுத்தார்.

ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்த காலக்கெடு முடிவதற்கு முன்பாகவே, மோடி – அமித்ஷா கொடுத்த அழுத்தம் காரணமாக, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார்.

இதன்பின், ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் ஆளுநரின் பரிந்துரையை ஏற்று மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டு, அது தொடர்பான கோப்பு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமித்ஷாவின் உள்துறை அமைச்சகம், ”மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி 6 மாதகாலம் அமலில் இருக்கும். இந்த 6 மாதத்தில் எந்த கட்சிக்காவது பெரும்பான்மை பலம் ஏற்பட்டுவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்படும்” என்று கூறியுள்ளது.

இதன் பொருள் இது தான்: “பாஜக இனிவரும் நாட்களில் குதிரை பேரம், பதவி பேரம் செய்து, ஆட்சி அமைக்கத் தேவையான அளவு பலத்தைப் பெருக்கிக்கொள்ளும். அதுவரை குடியரசுத் தலைவர் ஆட்சி நீடிக்கும்!”