ஆணவக்கொலை முயற்சி அபாயம்: காப்பாற்றப்பட்டார் பிரியங்கா!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிரியங்கா – கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, பஞ்சப்பட்டி அருகே கொடிக்கம்புதூரைச் சேர்ந்த தலித் இளைஞர் மு.வினோத் ஆகிய இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இதையறிந்த பிரியங்காவின் பெற்றோர் பிரியங்காவை வீட்டுக்குள் பூட்டி, கட்டிவைத்து கடுமையாக தாக்கினர். இதில் பிரியங்காவிற்கு தலை, கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது அவருக்கு கட்டாயத் திருமணம் செய்ய ஏற்பாடு நடப்பதாகவும், இதற்கு சம்மதிக்க மறுத்தால், ஆணவக்கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரியங்காவுக்கு தெரிய வந்தது.
பதறிப்போன பிரியங்கா இது குறித்த தகவலை ரகசியமாக வினோத்துக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவித்தார்.
அந்த குறுஞ்செய்தியோடு, “ஆணவக்கொலை செய்யப்பட இருக்கும் இந்த பெண்ணை காப்பாற்றுங்கள்” என்ற தலைப்பில் ‘ஹீரோ நியூஸ் ஆன்லைன் டாட்காம்’ அவசர செய்தி வெளியிட்டது.
இதுபோல் ஊடக நண்பர்களும், சமூகவலைத்தள பதிவர்களும் செய்தியை பரவவிட்டதன் விளைவாக, பிரியங்கா மீட்கப்பட்டு, ஆணவக்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டார் என்பது மகிழ்ச்சியான செய்தி.
இது குறித்து மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் மா.பா.மணிகண்டன் கூறியிருப்பதாவது:
மகிழ்ச்சியான செய்தி. சகோதரி பிரியங்காவை வீட்டுக்காவலில் இருந்து மீட்டெடுத்தாகி விட்டது.
வினோத்தோடு தான் வாழ்வேன் என்று காவல் நிலையத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் பிரியஙகா.
வழக்கறிஞரின் பாதுகாப்போடு புதுக்கோட்டை திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் தோழர் கார்த்திகேயன் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார்
பிரியங்காவை காப்பாற்ற தன்முனைப்போடு செயல்பட்ட தோழர்.எவிடென்ஸ் கதிர், துரை குணா, பெரியார்-அம்பேத்கர் மக்கள் கழகம் மற்றும் தோழமை அமைப்பு தோழர்கள், முகநூல், வாட்ஸ்-அப் நண்பர்கள். பத்திரிகை, தொலைக்காட்சி, ஊடக நண்பர்கள், .காவல் துறையினர் மற்றும் எங்களோடு களத்தில் நின்ற அத்தனை தோழர்களுக்கும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பா.ம.மகிழ்நன் தன் பதிவில், “வினோத்தை பிரியங்கா திருமணம் முடிப்பதற்கு, பிரியங்காவின் குடும்பத்தினர் எதிர்த்ததற்கு முக்கியமான காரணம், Msc IT படித்திருந்தாலும், அவர் புதிரை வண்ணார் சமூகத்தை சார்ந்தவர் என்பதுதான்.
சாதி என்னும் அழுக்கை தூக்கி சுமக்கும் பிரியங்காவின் தந்தை துரைராசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆலங்குடி வட்டம், மாங்காடு கிராம கிளை செயலாளர்.
இந்த செய்தி பரவலான உடனே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், துரைராசு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சாதி எதிர்ப்பு மரபை தங்களதாக வரித்துக் கொள்ள்லாம்.
ஆனால், நடவடிக்கை எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மெத்தன போக்கை அன்றி வேறெதையும் இதிலிருந்து புரிந்துகொள்ள முடியவில்லை.
‘சாதிலாம் ஒரு பிரச்சினையா பாஸ்….? நமக்கு தேர்தல் முக்கியம்…. சட்டமன்றம் முக்கியம்… நாடாளுமன்றம் முக்கியம்…. அப்புறம், குறிப்பா விஜயகாந்த் முக்கியம்” என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.