மெய் – விமர்சனம்
லாபவெறியில் வணிகமயமாகிப் போன இன்றைய மருத்துவத் துறையின் கோர முகத்தை வெளிச்சம் போட்டு காட்ட வந்திருக்கிறது ‘மெய்’
நிக்கி சுந்தரம் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வருகிறார். தந்தையின் நண்பரான ஜார்ஜ் வீட்டில் தங்கி அவரது மெடிக்கல் ஷாப்பில் உதவியாக இருந்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் மெடிக்கல் ரெப். பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட ஐஸ்வர்யா விபத்தில் அடிபட்ட சார்லியை காப்பாற்ற நிக்கி காரில் பயணிக்கிறார். இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டு பின்னர் அது காதலாகிறது.
இன்னொரு பக்கம் உடல் உறுப்புகளுக்காக நபர்களை கடத்தி கொல்லும் மாபியா செயல்படுகிறது. சார்லியின் மகள் மர்மமான முறையில் காணாமல் போகிறார். நிக்கியின் நண்பரை கொல்லும் அந்த மருத்துவ மாபியா அந்த பழியை நிக்கி மீது போடுகிறது. இந்த மர்மங்களின் பின்னணியை நிக்கி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நண்பர்கள் உதவியுடன் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. அன்றாடம் நாம் படிக்கும், கடந்துசெல்லும் மருத்துவ குற்ற சம்பவங்களை இணைத்து விறுவிறுப்பான படத்தை இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் கொடுத்துள்ளார்.
நிக்கி சுந்தரம் தானே தயாரிப்பாளராக இருந்தாலும் கூட தனக்கு பொருத்தமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து சபாஷ் வாங்குகிறார். படத்தின் எந்த காட்சியிலும் அவர் நாயகனாக தெரியாமல் கதையின் முக்கிய கதாபாத்திரமாகவே தெரிகிறார். கதைக்கு முக்கியத்துவம் தரும் கதாநாயகர்கள் வரிசையில் இணைந்த நிக்கி சுந்தரத்துக்கு பாராட்டுகள். அமெரிக்காவில் இருந்து வந்து இந்தியாவின் நிலையை பார்த்து வருத்தப்படும்போதும், தன்மீது விழுந்த பழியை துடைக்கவும் நண்பனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடும்போதும் கவர்கிறார். இதேபோல் சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் முன்னணி கதாநாயகன் ஆகிவிடலாம்.
அதற்கான திறமை பளிச்சிடுகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத மெடிகல் ரெப் பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ். உதவும் மனப்பான்மை, மேனேஜரிடம் சிக்கி பொய் பேசுவது, நிக்கிக்கு உதவுவது என்று சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். கிஷோர், சார்லி, ஈ.ராம்தாஸ் மூவருமே தங்களது குணச்சித்திர நடிப்பால் படத்தை தாங்கி பிடித்துள்ளனர். டைகர் தங்கதுரை, மதன் கோபால், ஜார்ஜ் கூட்டணி படத்தின் முதல் பாதியை கலகலப்பாக நகர்த்துகிறது. அஜய் கோஷ், அரோல் சங்கர், அபிஷேக் கூட்டணி இயல்பான வில்லத்தனத்தை காட்டி இருக்கிறார்கள். பிருத்வி குமாரின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம்.
இதுபோன்ற திரில்லர் படங்களுக்கு பின்னணி இசை மிகவும் முக்கியம். அனில் ஜான்சன் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். மோகனின் ஒளிப்பதிவு திகில் கூட்டுகிறது. பிரீத்தி மோகனின் படத்தொகுப்பு கச்சிதம். மருத்துவ துறையில் முக்கியமாக உடல் உறுப்பு தானம் விஷயத்தில் நடக்கும் குற்றங்களை பின்னணிகளுடன் தெளிவாக விளக்கி உள்ளது மெய்.
படம் பேசும் கருத்தும் மிகவும் முக்கியமானதும் அவசியமனாதும் கூட. உண்மை சம்பவங்களை கோர்த்து விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படமாக்கிய எஸ்.ஏ.பாஸ்கரனுக்கு பாராட்டுகள். அவருக்கு துணையாக இருந்து கதை, வசனம் எழுதிய செந்தா முருகேசனுக்கும் பாராட்டுகள். இரண்டாம் பாதி முழுக்கவே கிளைமாக்ஸ் போல விறுவிறுப்பாக செல்கிறது.
’மெய்’ – மருத்துவத் துறையின் மறுபக்கம்.