”ஜெய் ஸ்ரீராம்” கொலைகளும், பருவநிலை மாற்றமும்
பருவநிலை மாற்றத்தைப் பற்றிய எந்தவொரு உரையாடலும் சரியாக ஐந்து நிமிடங்களுக்குப் பின் ஒரு ஜோக்கை எதிர்பார்க்கிறது. எப்படியேனும் உரையாடலின் திசையை மாற்றும் முனைப்பு இருந்துகொண்டே இருக்கிறது. ஏன் அத்தனை சங்கடம் என தெரியவில்லை. திசை திரும்பாமல் ’பருவநிலை மாற்ற சிக்கல்களைப் பற்றி தெரியுமா’ என அழுத்தமாகக் கேட்டால் மட்டும் ‘ஆங்.. கேள்விப்பட்டிருக்கேன்… நீங்கல்லாம் கூட எழுதுவீங்களே!’ என பதில்கள். சாதி பேசுவதில் தீவிரம் காட்டுகிறோம். திமுக, அதிமுக அரசியல் வெல்ல சர்க்கரை. வேலை, காதல் முதலிய தனிப்பட்ட பிரச்சினைகள் அவற்றை உருவாக்கும் சமூகக் காரணிகள் பொருட்படுத்தாமலே கூட நேரவிரயமாக்கும் அளவுக்கு அலசி ஆராயப்படுகிறது.
வெறும் முப்பதே வருடங்களில் நிகழவிருக்கும் மனித மற்றும் உயிர் சூழல் அழிவைப் பற்றி பேச பெரும் தயக்கம் இருக்கிறது. இதில் சோகம் என்னவென்றால், நாம் பேசும் காவி அரசியல், சாதிப் பிரிவினை, காதல் பிரச்சினை என எல்லாமுமே பருவநிலை மாற்றம் கொடுக்கும் பிரச்சினைகளால் வேறு வடிவங்களை எடுக்கப் போகின்றன. எடுத்துக்கொண்டும் இருக்கின்றன.
எளிய உதாரணம் ஒன்று சொல்கிறேன். ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்லச் சொல்லி நிகழ்த்தப்படும் கொலைகளுக்கு பின் பருவநிலை மாற்றம் பெரும் பங்கு வகிக்கிறது என சொன்னால் நம்புவீர்களா?
மொட்டைத்தலை, முழங்கால் கதை ஞாபகத்துக்கு வரலாம். காவி பயங்கரவாதம்தான் நேரடியான காரணம் என்றாலும் மறைமுக காரணமாக வளர்ந்து வருவது பருவநிலை மாற்றம் என்கிற சிக்கல். சிரிய போர், Arab Spring எனப்படும் புரட்சி, அகதிகள் பிரச்சினை, ட்ரம்ப் கட்டும் சுவர் பிரச்சினை என உலகில் நடந்துவரும் பல விஷயங்களுக்கு பருவநிலை மாற்றம் அடிப்படை காரணமாக அவதானிக்கப்பட்டு வருகிறது. ஐநாவின் அறிக்கையில் பருவநிலை மாற்றம் சமூக ஒழுங்கின்மையையும் உள்நாட்டு கலவரங்களையும் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மழையும் விளைச்சலும் தண்ணீரும் இல்லாத கிராமப்புற மற்றும் பிற இடங்களில் வாழும் மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்தால் என்னவாகும் என்பதை நாம் யோசிக்கிறோமா? ஆட்சியில் இருப்பவர்கள் யோசிக்கிறார்களா? இல்லை, ஏதேனும் கட்சியாவது யோசிக்கிறதா? முதலாளித்துவத்தின் கடிகார முள்ளை விரட்டும் வேலைகளில் ஏற்கனவே நகரத்து மக்கள் தங்களை இழந்துகொண்டிருக்கும் வேளையில், அங்கெல்லாம் இன்னும் பெரும் பகுதி மக்கள்தொகை இடம்பெயர்ந்து வருமெனில் என்ன நடக்கும்?
இடம்பெயர்ந்து வரும் வேலையற்றோரின் வேலைகள் என்னவாக இருக்கும்?
தனக்கு வேலைகள் கிடைப்பதற்கும் வாழ்வாதாரம் கிடைப்பதற்கும் எதையும் செய்யும் நிலைக்கு இடம்பெயர்பவன் தள்ளப்படுவான். பாஜக போன்ற கட்சி அந்த நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். அவனுக்கு எதிரி ஒரு இஸ்லாமியன், ஒரு கம்யூனிஸ்ட் என எதையேனும் சொல்லி தன் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ளும். அவனும் ஒரு நல்ல நாளில் எவனையாவது அடித்து உட்கார வைத்து, ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்லச் சொல்வான்.
இன்னும் தெளிவாக பேசுவோம்.
இத்தனை பெரிய polarizing அரசியலை செய்துகொண்டிருக்கும் பாஜகவுக்கு ஆதரவு கிடைப்பது எப்படி என நினைக்கிறீர்கள். படித்தவனும் தன்னுடைய சாதி, மத பெருமைகளுக்கு ஏற்ப கருத்துகளை விதைத்து பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதற்கு காரணம் என்ன? அட… வோட்டு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்துதான் ஆட்சியில் பாஜக அமர்ந்திருக்கிறது என்பது தெளிவாக தெரிந்தும் ஏதும் நடக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
மக்களை அழுத்தும் பிரச்சினை வேறு வகைகளில் இருப்பதே காரணம்!
தேவைக்கு மட்டுமான உற்பத்தி, மனித வாழ்வின் பூரணம் போன்ற விஷயங்களை வலியுறுத்திய மார்க்சியம் எல்லா விதங்களிலும் முடக்கப்பட்டது. உற்பத்தியை கட்டுப்படுத்தும் நிர்வாகமோ அறிவோ எந்த கட்சிக்கும் இல்லை. ஆட்சிக்கும் இல்லை. மனித வாழ்வின் முழுமையை பேசுபவர்களும் அதிகாரத்தில் இருக்கவே இல்லை. விளைவு?
சமூகம் ஒரு பெரும் பிளவுக்கு உட்பட்டுக்கொண்டிருக்கிறது.
பருவநிலை மாற்றம் என்பது வெறுமனே அதீத மழை, புயல், பூகம்பம், வெள்ளம், வெயில் என்றெல்லாம் நம் தலைகளில் விடியப் போவதில்லை. பொருளாதார பிரச்சினையாகளாகவே விடிய இருக்கிறது.
பருவநிலை மாற்றம் என்கிற கண்ணாடியை அணிந்துகொண்டு பாருங்கள். சமூகப் பிரச்சினைகள் வேறு வடிவங்களில் தெரியும். உண்மையான காரணங்கள் புரியும்.
இனியும் திருமணம், குழந்தை, குடும்பம், காதல், தனிமை ஆகிய கற்பிதங்களுக்கு ஒரே அர்த்தங்கள் இருக்கப் போவதில்லை.
சாதிப்பிரச்சினையை தண்ணீர் பற்றாக்குறையுடனும் பஞ்சத்தோடும் ஒப்பிட்டு பாருங்கள். எதிர்பார்த்திராத தன்மைகளில் அப்பிரச்சினை வெளிப்படும்.
தஞ்சை பாலைவனமாக்கப்படுவது யதேச்சையான நிகழ்வு அல்ல. முதலாளிகளுக்கான ஆதரவு நிலை மட்டுமேயும் அல்ல. அங்கிருக்கும் மக்கள் பஞ்சம் பிழைக்க இடம்பெயர்ந்து ஏதோ ஒரு ஊருக்கு இடம்பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களில் வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கப்போகிறது. அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பற்றிய கவலை அரசுகளுக்கு இருக்காது. ஏனெனில் அவர்களை அப்படி ஆக்குவதே அரசுகள்தாம். ஆனால் அக்கவலை நமக்கு இருக்க வேண்டும்.
பருவநிலை மாற்றத்தை பற்றிய உரையாடலை முன்னெடுக்காவிட்டால், உங்கள் காதலர் இடம்பெயரும் காரணம் என்னவென தெரியாமலே நீங்கள் வதைபடுவீர்கள். ஏன் வேலை பறிபோகிறது என்பது புரியாமலேயே பணத்துக்கு திண்டாடுவீர்கள். ஏன் ஓட்டு போடுகிறோமென (தேர்தல் எனவொன்று இனி நடந்தால்) தெரியாமலேயே ஓட்டுப் போடுவீர்கள். ஏன் ஒருவனை வெட்டுகிறோம் என்கிற உண்மையான காரணமே புரியாமல் ஒருவரை வெட்டுவீர்கள். உங்களை யார் இயக்குகிறார்கள் என்பதே தெரியாமல் இயங்குவீர்கள். அந்த இயக்கம் ஒருநாள் உங்களையே மறுதலிக்கும்!
RAJASANGEETHAN