சுட்டுப் பிடிக்க உத்தரவு – விமர்சனம்
விக்ராந்த், சுசீந்திரன் இருவரும் மேலும் இருவருடனும் சேர்ந்து ஒரு வங்கியை துப்பாக்கி முனையில் கொள்ளை அடிப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. பொதுமக்களையும் காவல்துறை அதிகாரிகளையும் சுட்டுவிட்டு அவர்கள் தப்பிக்கிறார்கள். அவர்களை பிடிக்கும் பொறுப்பை காவல் அதிகாரி மிஷ்கின் எடுத்துக்கொள்கிறார்.
மிஷ்கினின் துப்பாக்கிக்கு ஒரு கொள்ளையன் பலியாக மீதி 3 பேரும் தப்பிக்கிறார்கள். தப்பித்து செல்லும்போது ஒரு குடியிருப்பு பகுதியில் நடக்கும் விபத்தால் அந்த குடியிருப்பு பகுதிக்குள் சிக்கி கொள்கிறார்கள்.
அந்த ஒட்டுமொத்த குடியிருப்பையுமே அலர்ட்டாக்கி அந்த கொள்ளையர்களை பிடிக்க மிஷ்கின் உத்தரவிடுகிறார். அந்த குடியிருப்பு பகுதியில் தீவிரவாதிகளும் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் அன்றைக்கு ஒரு மிகப்பெரிய குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிடுகிறார்கள்.
இறுதியில் மிஷ்கின் தலைமையிலான காவல் குழு கொள்ளையர்களான விக்ராந்த், சுசீந்திரன் இருவரையும் பிடித்தார்களா? குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
பாடல்களோ, காதல் காட்சிகளோ, தனியாக நகைச்சுவை காட்சிகளோ இல்லாமல் பரபரப்பான திரைக்கதையை மட்டுமே நம்பி படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குனர் ராம்பிரகாஷ். முதல் காட்சியிலேயே படம் வேகம் எடுக்கிறது. ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த வேகம் குறைந்து விடுகிறது
விக்ராந்த் வழக்கம்போல் சிறப்பாகவே நடித்து இருக்கிறார். மகளிடம் உணர்வுபூர்வமாக சைகை மொழியில் பேசும்போதும் சண்டைக்காட்சிகளிலும் தனது உடல்மொழியால் கவர்கிறார். சுசீந்திரன் முழு நேர நடிகராக மாறி இருக்கிறார். ஆனால் அவர் காட்சிகளில் நம்பகத்தன்மையே இல்லை.
மிஷ்கின் போலீஸ் அதிகாரி வேடத்துக்கு சரியான தேர்வு. தனது முத்திரை நடிப்பால் கவர்கிறார். அவர் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின்றன. அதுல்யா, ரித்தீஷ் இருவரும் காமெடி என்ற பெயரில் ஏதேதோ செய்து கடுப்பாக்குகிறார்கள். பேபி மானஸ்வி சிறப்பான நடிப்பு.
சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவும் ஜேக்ஸ் பிஜாயின் படத்தை விறுவிறுப்பாக்க முயற்சித்துள்ளது. ராமாராவின் படத்தொகுப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
கடைசி 10 நிமிடங்களில் வரும் டுவிஸ்டை நம்பி ராம்பிரகாஷ் கதையை எழுதி இருக்கிறார். பரபரப்பான திரைக்கதை இருந்தாலும் நம்பகத்தன்மை இல்லாத கதையால் படம் ஒரு கட்டத்தில் சலிப்படைய செய்து விடுகிறது. அந்த டுவிஸ்டையும் ஏற்கனவே யூகிக்க முடிவது பலவீனம். எனவே வித்தியாசமான முயற்சியாக மட்டுமே பார்க்க முடிகிறது.
மொத்தத்தில் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ சரியாக சுடவில்லை.