நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்

படத்தின் நாயகர்களாக இருக்கும் ரியோ மற்றும் ஆர்.ஜே.விக்னேஷும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் யூடியூப்பில் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான பண உதவி உள்ளிட்ட பலவற்றை அண்ணனாக இருக்கும் அரவிந்த் செய்து வருகிறார்.

ஒரு நாள் மாலில் பிராங்க் வீடியோ மூலம் மிகவும் செல்வந்தராக இருக்கும் ராதாரவி மற்றும் நாயகி ஷிரின் ஆகியோரை கலாய்க்கிறார்கள். இதில் ஷிரின் ரியோவை அடித்து விடுகிறார். ராதாரவி மன்னித்து இவர்களை அனுப்பி விடுகிறார்.

சில நாட்களில் ராதாரவி, ரியோ மற்றும் ஆர்.ஜே.விக்னேஷை அழைத்து, எதற்காக இதுபோன்று செய்கிறீர்கள் என்று கேட்க, அதற்கு அவர்கள் எங்களுக்கு அதிகமாக பணம் வேண்டும். அதற்காகத்தான் இப்படி செய்கிறோம் என்று சொல்கிறார்கள்.

உங்களுக்கு தேவையான பணத்தை நான் தருகிறேன். ஆனால், நான் சொல்லும் மூன்று சவால்களை செய்தால் தான் தருவேன் என்று கூறுகிறார் ராதாரவி.

இறுதியில் ரியோ ராதாரவி சொன்ன சவால்களை ஏற்றாரா? ராதாரவி சொன்ன சவால்கள் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

சின்னத்திரையில் கலக்கி வந்த ரியோ இப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் அவருக்கு நல்ல ஓப்பனிங்காக அமைந்திருக்கிறது. படம் முழுவதும் இளமை துள்ளலுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவருடன் ஆர்.ஜே.விக்னேஷ் செய்யும் லூட்டிகள் ரசிகர்களை திருப்திபடுத்தி இருக்கிறது. ஹீரோவுக்கு இணையாக அவரும் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அரசியல்வாதியாக வரும் நாஞ்சில் சம்பத் சமகால அரசியல் அவலங்களை அள்ளி அவிழ்த்து விடுகிறார். தனக்கே உரிய பாணியில் நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார் ராதாரவி.

கதாநாயகியாக வரும் ஷிரின் பத்திரிகை நிரூபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். அண்ணனாக வரும் அரவிந்த், வீட்டு ஓனராக வரும் மயில்சாமி, பிஜிலி ரமேஷ் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.

அரசியல் சூழ்நிலையை கலாய்த்து காமெடியுடன் இயக்கி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன். கதாபாத்திரங்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். பொது இடத்தில் நடக்கும் தவறுகளை தைரியமாக தட்டி கேட்க வேண்டும் என்ற கருத்தை சொன்ன இயக்குனருக்கு பெரிய கைத்தட்டல். ஆனால், கதைக்களம் சற்று அழுத்தம் இல்லாதது போல் இருக்கிறது.

கனாவை தொடர்ந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். சினிமாவில் சாதிக்கவேண்டும் என போராடுபவர்களுக்கு இப்படத்தின் மூலம் ஒரு வாய்ப்பினை உருவாக்கி தந்துள்ளார்.

ஷபீரின் இசையும், யு.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ கலகலப்பான ராஜா!