அதிமுக அரசின் பாட புத்தக அட்டை படத்தில் பாரதிக்கு காவி தலைப்பாகை!
பள்ளி மாணவர்களுக்கென அதிமுக அரசு புதிய பாட புத்தகங்களைத் தயாரித்துள்ளது. இந்த புதிய புத்தகங்களை நேற்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விக் கழக தலைவர் வளர்மதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் பிளஸ்-2 பொதுத்தமிழ் பாடபுத்தகத்தின் அட்டையில் ஆட்சேபத்திற்கு உரிய படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அட்டையில் இந்து கோயில் படமும், பாரதியார் காவி நிற தலைப்பாகை அணிந்திருப்பது போன்ற படமும் இருக்கின்றன.
இது பற்றி திமுக முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும்போது, “பாரதியாரை யாராவது காவி தலைப்பாகையுடன் பார்த்திருக்கிறார்களா? பாட புத்தகம் மூலம் காவியை திணிக்கும் செயலாக இதை பார்க்க முடிகிறது. மாணவர்கள் மத்தியில் பாரதியாரை பற்றி வேறு கோணத்திலான சிந்தனையை உருவாக்குவதற்கான முயற்சி நடந்துள்ளது” என்று கூறினார்.
அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது, “பாரதியார் காவி தலைப்பாகையுடன் இருப்பதை இப்போது தான் முதன்முதலாக பார்க்கிறேன். நான் நீண்ட காலமாக மாணவர்களுக்கு தமிழ் பாடம் கற்றுக் கொடுத்து வருகிறேன். அவர் காவி தலைப்பாகை அணிந்த படத்தை நான் இதுவரை பார்த்தது இல்லை. அவர் எப்போதுமே வெள்ளை தலைப்பாகை அணியும் வழக்கத்தை கொண்டிருந்தார்” என்று கூறினார்.
மேலும் ஒரு தமிழாசிரியர் கூறும்போது, ”இதன் அட்டை படத்தில் இந்து கோவில் படத்தை அச்சிட்டு இருக்கிறார்கள். இது இந்துக்கள் மட்டும் தான் தமிழுக்கு பாடுபட்டவர்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
கிறிஸ்தவர்களாக இருந்த வீரமாமுனிவர், ஜி.யூ. போப் போன்றவர்கள் தமிழுக்காக பாடுபட்டு இருக்கிறார்கள். அதேபோல முஸ்லிமான உமறுபுலவரும் தமிழக்கு அரும்பாடுபட்டவர்களில் ஒருவர்” என்று கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டு சேர்ந்துள்ள அதிமுகவின் அரசு இப்படியெல்லாம் அருவருப்பாக செயல்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ”பன்றியோடு சேர்ந்த கன்றும் பீ தின்னும்” என்று நம் முன்னோர்கள் ஏற்கெனவே சொல்லி வைத்திருக்கிறார்களே…!