ருத்ரமாதேவி – விமர்சனம்

13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, தான் எழுதி வைத்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பயணக் குறிப்புகளால் வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட இத்தாலிய யாத்திரீகர் மார்க்கோ போலோ, தனது நாட்டு அரசவையில், தென்னிந்தியாவில் தானறிந்த ருத்ரமாதேவி என்ற அரசியின் வாழ்க்கைக் கதையை விவரிக்கத் தொடங்குவதில் இருந்து படம் ஆரம்பமாகிறது.

தென்னிந்தியாவில் இருக்கிறது காக்திய நாடு. இதை ஆளும் அரசனான கணபதிதேவனுக்கு குழந்தை இல்லை. பல வருடங்களுக்குப் பின்னர் அவனது மனைவியான பட்டத்து ராணி கர்ப்பம் தரிக்கிறாள். தனக்குப்பின் நாடாளுவதற்காக ராணிக்கு ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்று அரசனும், அவனது அரசவையினரும், நாட்டு மக்களும் விரும்புகிறார்கள். ஆனால், அவர்களுக்கு விருப்பத்துக்கு மாறாக பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள் ராணி.

பிறந்தது ஆண் குழந்தை இல்லை என்று தெரிந்தால், எதிர்காலத்தில் தங்களை ஆள ஓர் அரசன் இல்லை என்று நாட்டு மக்கள் ஏமாற்றம் அடைவார்கள்; ஆண் வாரிசு இல்லாத அரச சிம்மாசனத்தை அபகரிக்க அரசனின் பங்காளிகளே முயற்சி செய்வார்கள்; அதோடு, எதிரி நாடான தேவகிரியின் அரசன் படையெடுத்து வந்து இந்த நாட்டை தன்னுடைய நாட்டோடு இணைத்துக்கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது. இக்காரணங்களால் தனது பிரதம அமைச்சரின் அறிவுரைப்படி, உண்மையை மறைத்து, தனக்கு ஆண் குழந்தைதான் பிறந்திருக்கிறது என்று அறிவித்துவிடுகிறான் அரசன்.

பிறந்த பெண் குழந்தைக்கு ‘ருத்ரமாதேவன்’ என ஆண் பெயர் சூட்டி, ஆண் உடை அணிவித்து, வளர்த்து, ஓர் இளவரசனுக்கு தேவையான குதிரையேற்றம், வாள் சண்டை உள்ளிட்ட போர் பயிற்சி அனைத்தையும் கற்றுக்கொடுக்கிறார்கள்.

ருத்ரமாதேவன் தானொரு பெண் என்பதை அறிந்து, பெண்மையை உணரும்போது எத்தகைய சிக்கல்களை எதிர்கொள்கிறாள்? அரசனின் வாரிசு ஆண் இல்லை, பெண் என தெரிய வரும்போது அரசனின் பங்காளிகளும், எதிரி நாட்டு அரசனும் என்ன செய்கிறார்கள்? தனது நாட்டின் அரசுரிமையையும், இறையாண்மையையும் பாதுகாக்க ருத்ரமாதேவன் என்ற ருத்ரமாதேவி நிகழ்த்தும் வீரம் செறிந்த சாகசங்கள் என்ன? என்பது மீதிக்கதை.

படத்தில் ருத்ரமாதேவியாக அனுஷ்கா தூள் கிளப்பியிருக்கிறார். பாடல்களில் அழகாகவும் சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமாகவும் இருவேறு பரிமாணங்களை காட்டியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அனுஷ்காவின் சாகசம் அரங்கத்தில் கைதட்டல்களை அள்ளுகிறது.

அல்லு அர்ஜுனின் கதாபாத்திரம் நன்றாக வடிவமைத்திருக்கிறது. அவரது நடிப்பும் ஆளுமையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. குறிப்பாக அவரது அறிமுக காட்சி அருமை. இறுக்கமான முகத்துடன் அவர் செய்யும் காமெடியும்  ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.

ராணா, பிரகாஷ்ராஜ், கிருஷ்ணமா ராஜு, நித்யாமேனன், கேத்ரின் தெரசா என அனைவரும் பாத்திரம் உணர்ந்து, கச்சிதமாய் நடிப்பை வெளிப்படுத்தி பளிச்சிடுகிறார்கள்.

படத்தின் காட்சிகளுக்கு நிறையவே செலவு செய்திருக்கிறார்கள். VFXக்கு மெனக்கெட்டு இருக்கிறார்கள். ஆடை அணிகலன்கள் தேர்வு, போர்க் கருவிகள், அரண்மனை அரங்குகள் என அனைத்தும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

அஜயன் வின்சென்டின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. இளையராஜா பாடலிசையில் சுமாராகவும் பின்னணி இசையில் உயிர்ப்புடனும் தெரிகிறார்.

இது தனது கனவுப்படம் என்பதால் இயக்குனர் குணசேகர். கடினமாக உழைத்திருக்கிறார். ஒரு பெண் நாடாளலாமா? என்ற கேள்வி எழுகையில், ஏன்… கூடாதா? என முன்வைக்கப்படும் எதிர்வாதங்களில் வசனம் அனலாய் தெறிப்பது சிறப்பு.

‘ருத்ரமாதேவி’ – தன்னிகரற்ற ஆளுமை!