விவசாயிகள் மீது பெப்சி தொடுத்த போர்! பெப்சி பொருட்களை புறக்கணிப்போம்!!

குசராத் மாநிலம் அகமதாபாத் நீதிமன்றத்தில், சபர்கந்தா பகுதியில் உள்ள நான்கு விவசாயிகள் மீது பெப்சி கம்பெனி வழக்கு தொடுத்துள்ளது.

“பெப்சி நிறுவனம் Lays லேஸ் என்ற பிராண்ட் சிப்ஸ்க்கு பயன்படுத்தும் FC5, FL- 2027 என்ற ரக உருளைக்கிழங்கை நான்கு விவசாயிகள் கள்ளத்தனமாக பயிர் செய்கிறார்கள் ; எனவே ஒவ்வொருவரும் ரூ.1.05 கோடி நட்ட ஈடு தர வேண்டும் ” என்பது வழக்காகும்.

துப்பறியும் நிபுணர்களை வைத்து விவசாயிகளை நேரில் சந்தித்து பேசுவதை வீடியோ செய்து வழக்கு போட்டுள்ளது. இந்திய விவசாயிகளை துப்பறியும் நிலைமையில் அமெரிக்க பெப்சி உள்ளது! ?

இதனால், பெப்சிகோ PepsiCo கம்பெனிக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு உருவாகியுள்ளது; பெப்சி லேஸ் சிப்ஸ் மற்றும் குளிர்பானங்களை புறக்கணிக்க இயக்கம் வலுப் பெற்றுள்ளது.

தங்களுடைய ரக உருளைக் கிழங்கை தங்களுக்கே தர வேண்டும் ; வேறு யாருக்கும் விற்கூடாது எனவும், கோர்ட்டுக்கு வெளியில் பேசி தீர்த்துக் கொள்ளலாம் எனவும் தற்போது பேரமும் நடக்கிறது ; ஜூன் 12 வழக்கு விசாரணைக்கு மீண்டும் வருகிறது.

அமெரிக்காவின் பெப்சி கம்பெனியானது, குளிர் பானங்கள் மற்றும் நொறுக்கு தீனிகள் உலக விற்பனையில் ஜாம்பவான் ஆகும்.

Lays chips /லேஸ் சிப்ஸ் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் கொடி கட்டி பறக்கிறது ; சிப்ஸை தயாரிக்க ஆண்டிற்கு தேவைப்படும் சுமார் 1 இலட்சம் டன் உருளைக் கிழங்குகளை இந்தியாவில் பஞ்சாப், குசராத், உபி, பீகார், மே.வங்காளம், மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் 24,000 விவசாயிகள் உற்பத்தி செய்து தருகின்றனர்.

2002 ல் துவங்கி, ஒப்பந்த விவசாயம் Contract farming என்ற முறையில் உருளை, பாசுமதி அரிசி எனப் பலவற்றையும் விவசாயிகளிடமிருந்து உற்பத்தி செய்து வாங்குகிறது. விவசாயிகளுக்கு தான் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கு சந்தையுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு மேல், “ஒப்பந்த விவசாயம்” பெரியளவு இலாபகரமான விவசாயமும் இல்லை.

பெப்சி போன்ற பன்னாட்டு கம்பெனிகள், விவசாயிகளிடம் முன்கூட்டியே தங்களுக்கு தேவையான உருளை ரகத்தின் விதைகளை வழங்கி விடுகின்றன. அதற்கான விலையை, உற்பத்தி செய்து தரவேண்டிய size தரம், உற்பத்தி இலக்கு (Price, Quality & Quantity) ஆகியவை மீது ஒப்பந்தம் செய்து விடுகின்றன.

உருளைக் கிழங்கு சைஸ் குறைந்தால் அல்லது பெரிதானால் விலை குறைந்துவிடும்; பச்சைக் கலர் வந்துவிட்டால், அறுக்கும் போது அடிபட்டால் அந்த கிழங்குகளை பெப்சி எடுக்காது.

மலிவான விலைக்கு உருளை தருவதற்காக அதிக உரம் பயன்படுத்த பட்டு விவசாய மண் கெடுகிறது ; தொடர்ந்து ஒரே பயிரை (சுழற்சி இல்லாமல்) பயிரிடுவதால் சுற்று சூழல் பிரச்சினையும் ஏற்படுகிறது.

சிப்ஸ் விற்பனையில் கொள்ளை இலாபம் சம்பாதிக்க, அற்பசொற்ப விலையில் விவசாயிகளிடம் உருளை கிழங்கை வாங்குவதும் இல்லாமல், விவசாயியின் பயிர் செய்யும் உரிமை மீதும் போர் தொடுத்துள்ளது, பெப்சி PepsiCo நிறுவனம்.

PPV & FR Act 2001 தாவர ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைகள் சட்டம் 2001 ( Protection of Plant varieties and Farmer’s Rights Act 2001) பிரிவு 64 ன் அடிப்படையில் தங்களுடைய ரகத்தை பயிர் செய்ய கூடாது என்கிறது, பெப்சிகோ நிறுவனம்.

ஆனால், அதே சட்டத்தின் பிரிவு 39 ன் அடிப்படையில் “…. இந்த சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட ஒரு பயிர் ரகம் உள்ளிட்டு, ஒரு விவசாயி தனது வேளாண் உற்பத்தி பொருட்களை பாதுகாக்க, பயன்படுத்த, விதைக்க, மீண்டும் விதைக்க, பரிமாறிக் கொள்ள அல்லது விற்பனை செய்ய ” அனுமதிக்கப்படுகிறார். அதாவது, #விவசாயியின்_உரிமைகள் என்பதன் கீழ் வந்து விடுகிறது. ஆனால், பெப்சி நிறுவனம் மிரட்டிப் பார்க்கிறது.

#நிலம்_எனது_உரிமை #விதை_எனது_உரிமை எனப் போராடும் நிலை உருவாகியுள்ளது.

காண்ட்ராக்ட் விவசாயத்தில் உள்ள பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்திய சட்டம், நீதி ஒரு பிடியளவு வாய்ப்பு வழங்கினால் கூட, #விதைகளின்_மீதான_சுயாதிபத்தியத்தை #உணவு_பாதுகாப்பை_விவசாயத்தை_இழந்திடுவோம்!

விவசாயிகள் உரிமைகளுக்காக நாடு முழுவதும் எழுந்து நிற்க வேண்டும்!

1) பெப்சி பொருட்களை புறக்கணிப்போம் !

2) பெப்சிகோ நிறுவனமே !

நிபந்தனை இல்லாமல் வழக்குகளை வாபஸ் வாங்கு! விவசாயிகளிடம் மன்னிப்புக் கேள்!

#பெப்சியே_நாட்டை_விட்டு_வெளியேறு!

CHANDRA MOHAN