“என் கணவர் திரும்பி வருவார்னு நானும், என் மகனும் காத்துக்கிட்டு இருக்கோம்!” – முகிலன் மனைவி

சூழலியல் போராளியான முகிலன் காணாமல் போய் இன்றுடன் 70 நாள்கள் நிறைவடைந்திருக்கின்றன. `முகிலன் எங்கே?’ எனச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்த இணையவாசிகளை மக்களவைத் தேர்தல், ஐ.பி.எல். கிரிக்கெட் போன்ற அலைகள் அடித்துச்சென்று விட்டன. தற்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் ஆடியோ விவகாரம் குறித்த ஆராய்ச்சியில் சமூக வலைதளவாசிகள் மூழ்கியிருக்கிறார்கள். அவர்களைக் குறைசொல்வதற்கும் இல்லை. இங்கே எந்தப் பிரச்னையும், சம்பவமும் அதிகபட்சம் இரண்டு நாள்களுக்கு மேலே பேசுபொருளாவதில்லை. ஆனால், முகிலன் எங்கே எனத் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, ஓவியங்கள் வரையப்பட்டன. அந்த ஓவியங்களை பலர் தங்களின் செல்போன்களில் முகப்புப் படங்களாக வைத்திருந்தார்கள்.

அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்கள், முகிலன் பற்றிக் கேள்வி எழுப்பினார்கள். முகிலன் எங்கே என்கிற ஆதங்கம் வெறும் சமூக வலைதளங்களுடன் நின்றுவிடாமல் பொதுமக்களை வீதியில் இறங்கி கண்டனக் குரல் எழுப்பச் செய்தது. தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது, மனித உரிமை ஆர்வலர்கள், ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்கள். இத்தகைய அதிர்வலைகள் அனைத்தும் முகிலன் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டதும் அடங்கிப்போனது. அவரை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தேடி வருகிறார்கள் என்று சொல்லப்பட்டது. தற்போது அந்தப் பரபரப்பு கொஞ்சம் கொஞ்சமாகத் தேயத் தொடங்கி, `அப்படி ஒருத்தர் இருந்தார்’ என்கிற மனநிலையை நோக்கி அனைவரும் நகரத் தொடங்கியிருக்கிறோம். அதே மனநிலையில் நாம் இருந்துவிடலாம். ஆனால், முகிலனின் மனைவி, `தன் கணவர் திரும்பி வருவாரா?’ என்கிற ஏக்கத்திலும். சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் அலைக்கழிப்பிலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். முகிலன் பற்றிப் பேசுவது குறைந்துள்ள சூழலில் அவர் மனைவி பூங்கொடியிடம் பேசினோம். முகிலன் பெயரைச் சொன்னதுமே அவரின் குரல் உடையத் தொடங்குகிறது.

“என் கணவரைப் பற்றி போலீஸாரிடம் கேக்கும்போதெல்லாம் விசாரிச்சுட்டு இருக்கோம்னுதான் சொல்றாங்க. ஒண்ணு மட்டும் உறுதியாச் சொல்லமுடியும். என்னோட கணவரைக் கடத்திட்டுப் போனவங்க, அவரை எங்க வெச்சிருக்காங்கன்னு சி.பி.சி.ஐ.டி-யினருக்குத் தெரியும். அவங்க அவரை வெளியில கொண்டுவர பயப்படுறாங்க. ஏன்னா, என் கணவரை அடைச்சு வெச்சு இருக்கறவங்க, ரொம்பப் பெரிய முதலாளியான ஸ்டெர்லைட் நிறுவனத்தைச் சேர்ந்தவங்களாத்தான் இருப்பாங்க. காவல்துறையினரின் உதவியோடு இதைச் செஞ்சு இருக்காங்க. அவர் வெளிய வந்தார்னா பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஸ்டெர்லைட் ஆலையின் வர்த்தகத்தை எதிர்த்து, மீண்டும் குரல் கொடுப்பாரு. அதனாலேயே அவரைக் கடத்தியிருக்காங்க. அவரை வெளியில் கொண்டுவந்தா, போலீஸாரோட உயிருக்கும், அவங்க குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்படும்னு நினைக்கிறாங்க.

அதனால்தான், என் கணவர் தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்டவங்ககிட்ட விசாரணைன்னு நெருங்கறதுக்கே யோசிக்கிறாங்க. ஆனா, ஏற்கெனவே கணவரைத் தொலைச்சுட்டு தேடுற எங்கிட்டவந்து, அப்பப்போ விசாரணைன்னு சொல்லி என்னை ரொம்பச் சோர்வடையச் செய்றாங்க. விசாரணைக்கு முன் அனுமதிகூட கேக்காம வந்து என்னை விசாரிக்கிறாங்க. என் கணவர் வீடு திரும்பறதுக்கு எந்தவிதத்திலும் தடையா இருக்கக் கூடாதுங்கறதால நான் எல்லாத்தையும் சகிச்சுகிட்டு இருக்கேன். “என் கணவரை அவங்க ஏதாச்சும் பண்ணி இருக்கலாம், இவ்ளோ நாள் எப்படி கிடைக்காம இருப்பார்” னு சிலர் சொல்றாங்க. அவர் இருக்காரு. உயிரோடத்தான் இருக்காரு. வீட்டுக்கு மீண்டும் திரும்பி வருவாருன்னு நான் நம்பறேன்.. என் மகனும் அவருக்காகக் காத்துட்டு இருக்கான்” என்ற பூங்கொடியால் அதற்குமேல் பேச்சைத் தொடர இயலவில்லை.

பொதுவாகவே ஒரு வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்குச் செல்கிறது என்றால் அந்தவழக்கு பொதுமக்களின் கண்காணிப்பிலிருந்து விலகிவிடும். முகிலன் விஷயத்திலும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. நாள்கள் செல்லச் செல்ல, இனி முகிலன் பற்றிய செய்திகள் முற்றிலும் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. முகிலன் மக்கள் மத்தியில் முற்றிலும் மறக்கடிக்கப்பட வேண்டும் என்பதைத்தான், ஒருவேளை அதிகாரவர்க்கம் எதிர்பார்க்கிறதோ என்னவோ!

நன்றி : விகடன்