நதிகளை இணைக்க முடியாது என்று யாராவது ரஜினியிடம் தெரிவியுங்கள்!

நதிகளை இணைக்க முடியாது என்று யாராவது திரு.ரஜினிகாந்திடம் தெரிவியுங்கள்.

இணைக்கப்பட்டுள்ள கட்டுரை இது குறித்து விரிவாக பேசுகிறது.

ஏன் முடியாது அல்லது தேவையற்றது என்று விவாதிக்க விரும்பினால் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

(பா.ஜ.க, அ.தி.மு.க மற்றும் தி.மு.க கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையில் இது குறித்து குறிப்பிட்டிருப்பது ஏமாற்றமே….)

சுந்தர்ராஜன்

பூவுலகின் நண்பர்கள்

                                 #   #    #     #    #

நதிநீர் இணைப்பு என்னும் கவர்ச்சிகர வாக்குறுதி: சூழியலைப் பாதிக்குமா? தண்ணீர் பற்றாக்குறைக்கு மாற்றா?

தண்ணீர்  பற்றாக்குறை மக்களைக் கூடுதலாக  நெருக்கும் போதெல்லாம்  நதிநீர் இணைப்பு பற்றிய குரல்கள் பரவலாக ஒலித்துக் கொண்டிருக்கும்.

அரசியல் கட்சிகளும் அவ்வப்போது நதிநீர் இணைப்பு குறித்த அறிவிப்பை முன் வைப்பார்கள். வருகின்ற  நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவின்  தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு பற்றிய வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

’நதிநீர் இணைப்பு’ என்பது இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள்முன் வைக்கப்படும் கவர்ச்சிகரமான வாக்குறுதி. ’நதிநீர் இணைப்பு’ குறித்த வலியுறுத்தல்கள் எழும்போதெல்லாம்  அதனுடன்  இந்தத் திட்டத்தினால் சூழியல் சார்ந்த சீர்கேடுகளும் உண்டாகுமா என்ற விவாதங்களும் எழுப்பப்படும்.

சூழல் சார்ந்த பிரச்சினைகள் இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் எதிர் கொண்டுவரும் வேளையில், நதிநீர் இணைப்பு  குறித்த விவாதங்கள் மீண்டும் அழுத்தமாகவும், வலுவாகவும் எழுப்பப்பட வேண்டும் என்பதற்காகவே நதிநீர் இணைப்பு சார்ந்த இந்தப் பதிவை பதிவு செய்ய இருக்கிறேன்.

’நதிநீர் இணைப்பு’  சூழியலில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் நதிநீர் இணைப்பு தவிர்த்து தண்ணீர்  பஞ்சத்தைத் தீர்ப்பதற்கு மாற்று வழிகள் நிறைய உள்ளன என்பதையும் நம் முன் விரிவாக விளக்குகிறார் பூவுலகு நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சூழியல் செயற்பாட்டாளர், சுந்தரராஜன்.

நதிகளை தொந்தரவு செய்யாதீர்கள்

”நதிநீர் இணைப்பை தத்துவார்த்த ரீதியில் பார்த்தோம் என்றால்,  நதி ஒன்றும் குழாய் கிடையாது. வலதுப்பக்கம் திருப்பு, இடப்பக்கம்  திருப்பு என்று சொல்வதற்கு. நதியை யாரும் இங்கு முதலீடு செய்யவில்லை. நதி என்பது கடலில் கலக்கும்படியான சூழலைத்தான் இயற்கை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உலகில் உயிரினங்கள் வாழ வேண்டும் என்றால் நதி கடலில் கலந்துதான் ஆக வேண்டும். இயற்கை எப்போதும் தேவையில்லாத செயலைச் செய்யாது. இயற்கையின் எல்லா செயலுக்கும் அர்த்தம் உண்டு. நதி கடலில் கலக்கின்றது என்றால் அதற்கான தேவை இருக்கிறது. அது நமக்கான தேவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நதிநீர் இணைப்பை அரசியல் ரீதியாக எடுத்துக் கொண்டால் தமிழ்நாட்டுக்கு காவிரி என்பது நீர் வழிப் பாதைக்குரிய உரிமை.

அப்படி என்றால் சர்வதேச நீரியல் பங்கீடு உரிமை என்பது இரு நாடுகளுக்கு இடையே, இரண்டு பகுதிகளுக்கு இடையே நீரைப் பங்கீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கென்று விதிகளைப் பின்பற்ற வேண்டும். இதன் அடிப்படையில்தான் இந்தியாவும் பாகிஸ்தானும், இந்தியாவும் சீனாவும் நீரைப் பங்கீட்டுக் கொண்டுள்ளன.

இந்த விதியின்படி நதி எந்தப் பகுதியில் போய் கடலில் கலக்கிறதோ அவர்களுக்குத்தான் முதல் உரிமை. அப்படி என்றால் காவிரி தமிழ்நாட்டை வந்தடைந்து தானே கடலில் கலக்கிறது. அப்படி என்றால் காவிரியில் நமக்குதான் முதல் உரிமை இருக்கிறது.

இவ்வாறு முதல் உரிமை உள்ள காவிரியிலிருந்தே நமக்கான தண்ணீரை சட்ட ரீதியாகப் போராட்டம் நடத்தியும் இன்னும் பெற முடியவில்லை. அப்படி இருக்கையில் உரிமையே இல்லாத கங்கையிலும், கோதாவரியிலும் நாம் எப்படி உரிமை கொண்டாட முடியும்.

அதுமட்டுமில்லாது இந்த நதிநீர் இணைப்பு பற்றிய குரல் பெரும்பாலும் தமிழ்நாட்டில்தான் அதிகமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.  தமிழ் நாட்டில்  நதிநீர் இணைப்பைப் பற்றி பேசும் பிற தலைவர்கள் அதனை மற்ற மாநிலங்களில் பேச மாட்டார்கள். எனவே இது அரசியல் ரீதியாகவும் தோல்வி அடைந்திருக்கிறது.

நீரியல் பார்வையில் எடுத்துக் கொள்வோம். இவர்கள் கூறுவதுபோல நதிகளை இணைக்க வேண்டும் என்றால்,  16 தீபகற்ப நதிகளையும், 14 இமயமலை நதிகளையும் ஒன்றோடொன்று இணைத்து கங்கையையும், காவிரியையும் ஓரிடத்தில் இணைக்க வேண்டும். இதுதான் நதிநீர் இணைப்பின் ஒட்டுமொத்த திட்டம்.

இந்தத் திட்டத்தின் கீழ் முதலில் இணைக்க திட்டமிட்டதுதான் கென் மற்றும் பெட்வா நதிகள். இந்த இரு நதிகளும் விந்திய மலையில் தோன்றுகின்றன. இவ்வாறு தோற்றம் ஒரே பகுதியில் தொடங்கும் இந்த நதிகளுக்கு வெள்ளம் வந்தாலும், வறட்சி ஏற்பட்டாலும் ஒரே நேரத்தில்தான் ஏற்படும். இதில் எங்கிருந்து உபரி நீரை மற்றொரு நதிக்குக் கொண்டு செல்ல முடியும்?

மத்திய நீர்வள  ஆணையம் என்ன கூறுகிறது என்றால், இந்தியாவில் ஓடக் கூடிய நதிகளில், பிரம்ம புத்திராவைத் தவிர வேறு எங்கையும் உபரி நீர் இல்லை என்று கூறுகிறார்கள். இதேபோல்தான்  ஷர்தா – யமுனா நதியும். இவை இரண்டும் இமயமலையின் பக்கத்தில் தோன்றுகின்றன. இதில் ஷர்தா ஓடி ஒரு இடத்தில் யமுனையுடன் சேர்கிறது. இவையும் கென் – பெட்டுவா நதிகளைப் போன்றதுதான்.

அடுத்தது கடல் மட்டத்திலிருந்து தக்காணப் பீடபூமி  கங்கை சமவெளிப் பகுதிகளைவிட அதிகமாக உயரத்தில் இருக்கின்றது. இதில் கங்கையை தக்காண பீடபூமிக்கு  பம்ப் செய்துதான் கொண்டு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதற்கு அதிக அளவிலான மின்சாரம் தேவைப்படும். இது பின்னடைவு தானே.

இந்தியாவில் பெய்கிற மழையில் 50% வெறும் 100 மணி நேரத்தில் பெய்துவிடுகிறது. அப்படி இருக்கும்போது பிரம்மபுத்திரத்தில் வெள்ளம் ஓடி வரும்போது, அசாமில் தேஜ்பூரில் அருகில் அதன் அகலம் மட்டும் 3.5 கிலோ மீட்டர் அதைவிட இன்னொரு மடங்கு தாண்டி வெள்ளம் வரும். இந்தத் தண்ணீரை நீங்கள் எப்படி திருப்பி விட முடியும்.

பொருளாதாரப் பாதையில் எடுத்து கொண்டால் இந்தத் திட்டத்துக்கு இன்றைக்கு போடப்பட்டுள்ள நிதி மதிப்பீடு 15 லட்சம் கோடி. மேலும் இந்தத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புப் படைகள் போல், மத்திய தண்ணீர் மேலாண்மைப் படைகளை நியமிக்க வேண்டும். இவர்களுக்கு கீழேதான் இந்த நதிகளும், கால்வாய்களும், அணைகளும் இருக்கும். அப்போதுதான் மாநிலங்களுக்கிடையேயான மோதலைத் தடுக்க முடியும். இதற்கும் பெரும் தொகையைச் செலவிட வேண்டிய நிலை ஏற்படும். மேலும் நதிநீர் இணைப்புக்கு கட்டப்போகும் அணைகள், கால்வாய்களைப் பராமரிக்க வருடத்திற்கு 1 லிருந்து 2 லட்சம் கோடி செலவிட வேண்டி இருக்கும்.

இவ்வளவு பெரும் தொகையை ஏன் செலவிட வேண்டும்? நதிநீர் இணைப்புக்காக செலவிடப்படும் தொகையில் 10% இருந்தாலே இந்தியா முழுவதும் உள்நீர் நிலைகளைத் தூர்வாரி, நதிகளைச் சுத்தப்படுத்தி நீரைப் பெறலாம்.

சமூகவியல் பார்வையில் எடுத்துக் கொண்டால், கிட்டத்தட்ட 2 லட்சம் மக்கள் அவர்களது பூர்வீக இடங்களிருந்து இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும். இந்தியா சுதந்திரமடைந்து தற்போது வரை பெரிய பெரிய திட்டங்களுக்காக கடந்த 50 வருடங்களில் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடி பேர். இந்த 2 கோடி பேரில் ஒருத்தருக்கு கூட நாம் முறையான நிவாரணத்தையோ, மாற்று இடங்களையோ அளிக்கவில்லை.

இந்த நிலையில் நதிநீர் திட்டத்திற்காக வெளியேற்றப்படுவர்களின் நிலை என்ன? அதுமட்டுமில்லாது இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் அதிகப்படியான வனவிலங்கு சரணாலயங்கள் மூழ்கக்கூடும். கிராமம் கிராமமாக மக்கள் வெளியேறுவார்கள்.

இறுதியாக சூழியல் பார்வைக்கு வருவோம். இதுதான் இங்கு அவசியமாக விவாதிக்கப்பட வேண்டியது. ஒரு நதி கடலில் சென்று கலந்தால்தான் அந்தக் கடலோடு உப்புத் தன்மை ஒரே சீராக இருக்கும். அந்த உப்புத் தன்மை ஒரே சீராக இருந்தால்தான் அந்த நீர் ஆவியாகி மேகமாகி நமக்கும் மழையை அளிக்கும். இவ்வாறு இருக்கையில்  நதிநீர் கடலில் கலக்கவில்லை என்றால் கடலின் உப்புத் தன்மை மாறக் கூடும். இதனால் மழைப் பொழிவு பாதிக்கக் கூடும்.  எங்கெங்கே எல்லாம் நதி கடலில் கலக்கிறதோ அந்தப் பகுதியை கழிமுகப் பகுதி என்று கூறுவோம்.

இந்தப் பகுதிகள் மீன் உற்பத்திக்கு மிக முக்கியமான இடங்கள். இந்தப் பகுதி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நதி நீர் கடலில் போய்தான் கலந்தாக வேண்டும் அப்போதுதான் உற்பத்தி நடக்கும். கடலில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத சின்னச் சின்ன உயிரினங்கள் எல்லாம்  கடலில் கலக்கும் நன்னீர் கொண்டு வரும் கழிவுகளைத்தான் உணவாக உட்கொள்கின்றன.  இந்தச் சின்ன நுண்ணியிரிகள்தான்  சின்ன மீனுக்கு உணவு.  இந்தச் சின்ன மீன் தான் பெரிய மீனுக்கு உணவு. இந்த பெரிய மீன் தான்  நமக்கான உணவு. இது ஒரு சுழற்சி முறை.

இவ்வாறு நமக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்றால் நதி நீர் கடலில் கலந்துதான் ஆக வேண்டும்.

நமக்கான ஆக்சிஜனை 70% கடல்தான் தருகிறது. கடலில் இருக்கும் சின்னச் சின்ன உயிரினங்கள் உணவு தயாரிக்கும் முறையில் நமக்கான ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. அவ்வாறு இருக்கையில் இவற்றுக்கு சேரும் நன்னீரை நாம் தடுத்தால் இதில் நமக்குக் கிடைக்கும் ஆக்சிஜன் அளவில் மாற்றம் உண்டாகலாம்.

இந்த பூமியின் புவியீர்ப்பு விசை சூரியனின் புவியீர்ப்பு விசையைவிட அதிகம். அப்படி இருக்கையில் ஏன் சூரியன் பூமியை இழுக்காமல் இருக்கிறது. ஏன் என்றால் பூமி 1 லட்சத்து 7 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் தன்னையும் சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுகிறது.  இந்த வேகத்தில் பூமி சுற்ற கடலில் உள்ள நீரோட்டங்கள்தான் முக்கியக் காரணம். இந்த நீரோட்டங்கள் சீராக இருக்க வேண்டும் என்றால் நதி நீர் கடலில் கலந்தாக வேண்டும்.

நமது அரசு  கிருஷ்ணாவை கோதாவரியையும் இணைத்தோம் என்கிறார்கள். ஆனால் கோதாவரி கடந்து வரும் விதர்பாவில் தானே விவசாயிகளின் தற்கொலைகள் நடக்கிறது உபரிநீர் கிடைத்தால் எப்படி தற்கொலைகள் நடக்கும்.

கடந்த சென்னை வெள்ளத்தில் மட்டும் 3 நாளில் சுமார் 320 டிஎம்சி தண்ணீர்  கடலில் கலந்திருக்கிறது. இதில் சென்னையோட ஓராண்டு தண்ணீர் தேவை வெறும் 10 டி எம்சிதான். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில்  நாம் அழித்தது போக மீதம் 4,000 நீர் நிலைகள் உள்ளன. இந்த 4,000 நீர் நிலைகளை சரியாக துர்வாரி நாம் வைத்திருந்தாலே தோராயமாக நாம் 80 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இது சென்னையின் 8 ஆண்டு தண்ணீர்  தேவையைப் பூர்த்தி செய்யும்.

இந்தியாவின்  தண்ணீர் மனிதர் என்று சொல்லப்படும் ராஜேந்திர சிங் ராஜஸ்தானில் 400 மில்லி மீட்டர் பெய்த மழையை வைத்து 1600 கிராமங்களுக்கு தண்ணீர் தருகிறார். சென்னையில் சராசரியாக 1200 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. நிச்சயமாக நம்மால் தண்ணீரைத் தடையின்றி தர முடியும். உலகில் பிற எந்த நகரங்களுக்கும் இல்லாத சிறப்பு சென்னைக்கு உள்ளது. சென்னையில் மட்டுமே நான்கு நதிகள் உள்ளன. வடசென்னைக்கு கொற்றலை ஆறு என்கிற கொசஸ்தலை ஆறு, மத்திய சென்னைக்கு கூவம், தென் சென்னைக்கு அடையாறு, அதற்கு கீழே கோவளமும், பாலாறும் இருக்கின்றன.

இந்த நான்கு நதிகளையும் இணைக்கக் கூடியதாக பக்கிங்காம் கால்வாய் இருக்கிறது. மேலும் 18 பெரிய கால்வாய்களும்,  540 சிறிய ஓடைகளும் இருந்தன.  மழை பெய்யும்போது இந்த சின்ன ஓடை பெரிய ஓடையில் நீரைச் சேர்க்கும். பெரிய ஓடையிலிருந்து நீர் நதிக்குச் செல்ல இறுதியில் நதி நீர் கடலில் கலக்கும். ஆனால் நாம் எல்லாவற்றையும் அழித்துவிட்டோம்.

எனவே பல நீர் நிலைகளை மீட்டுருவாக்கம் செய்து,  நீர் நிலைகளைத் தூர்வாரினாலே  நமக்குத் தேவையான நீர் கிடைத்துவிடும். எனவே நதிகளைத் தொந்தரவு செய்யாதீர்கள்” என்கிறார் சுந்தரரராஜன்.

நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்புக் குரல்கள் வலுவாக இருக்கும் அதே  நேரத்தில் அத்திட்டத்திற்கு  ஆதரவுக் குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களில் ஒருவர்தான் பொன்ராஜ். நதி நீர் இணைப்பு சார்ந்து ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதிய பொன்ராஜிடம் பேசினோம்.

நதிநீர் இணைப்பு தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும்

”சீனா தனது நதிநீர் இணைப்புத் திட்டத்தை 2002-ல் ஆரம்பித்து 2015-ல் முடித்திருக்கிறது. இதன் மூலம் சீனர்கள் வறட்சியான பகுதிக்கு தண்ணீரைக் கொண்டு சென்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை கே. எல். ராகுல் நதிநீர் இணைப்புத் திட்டத்தைக் கொடுத்தார். கேப்டன் தஸ்துர் என்பவர் கான்பூர் கால்வாய் திட்டத்தைக் கொடுத்தார். இந்த இரு திட்டங்களுமே மேலிருந்து கீழாக நதிகளை இணைக்கக் கூடியவை. இந்தியாவில் மொத்தம் 84 அணைகள் இருக்கின்றன. 84 அணைகளின் தண்ணீர் கொள்ளளவு  152 பில்லியன் கியூபிக் மீட்டர்.

இந்தியாவிலுள்ள ஒட்டு மொத்த நதிகளை இணைத்தாலே இதே அளவைத்தான் சேமிக்க முடியும். ஆண்டுதோறும் கடலுக்குச் செல்லக்கூடிய வெள்ள நீரின் அளவு 1200 பில்லியன் கியூபிக் மீட்டர்.

இந்த வெள்ள  நீரைப்  பயன்படுத்துவதற்கு கேப்டன் தஸ்தூர் சொன்ன திட்டத்தினாலும், கே. எல். ராகுல் சொன்ன திட்டத்தினாலும் முடியாது. ஆனால் இதனை நீர்வழிச் சாலை மூலமாக இணைக்கலாம்.

இதில் தென்னிந்திய நதிகளை இணைக்கும்போது மலைகளையும் இணைக்கலாம். மலைகளிலுள்ள வடிநிலங்களையும்  இணைக்கலாம். இவ்வாறு இணைத்தால் 250 அடி உயரத்தில் ஒரு பெரும் நீர்வழிச்சாலையாக உருவாக்கப்படும்.

இவ்வாறு இருந்தால் எந்த சுற்றுச்சூழலும் பாதிக்காது. மலைகளில் பில்லர் மற்றும் சுரங்கங்கள் அமைத்து  நாம் தொடரலாம்.

இந்த தென்னக நதிநீர் இணைப்பைச் செய்தாலே கிட்டத்தட்ட 3,000லிருந்து 4,000 டிஎம்சி தண்ணீர் தென்னிந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்களுக்கும் சரிசமமாகக் கிடைக்கும்.

இவ்வாறு வெள்ளத்துக்குச் செல்லும் நீரில் 60 சதவீதத்தை நாம் சேமித்தாலே ஐந்து மாநிலங்களிலும் வறட்சி ஏற்படாது. குடிநீரும் கிடைக்கும், மின்சாரமும் கிடைக்கும். வேலை வாய்ப்பும் உண்டாகும்.  இது வடஇந்தியாவுக்கும் பொருந்தும். இதைக் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளில் செய்து முடிக்கலாம். இது நிச்சயமாக தண்ணீர் தேவைக்கான சரியான மாற்றாக இருக்கும்.

ஆனால் திமுக, அதிமுக கட்சியினர்  வெறும் கண் துடைப்புக்காகவே  நதிநீர் இணைப்புத் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் வைத்துள்ளனர். இவர்கள் நதிநீர் இணைப்புக்கு அழுத்தமாகக் குரலும் கொடுத்ததில்லை. அதற்கான திட்டமும் அவர்களிடம். காங்கிரஸும், பாஜகவும் இவர்களது பாதையிலிருந்து விலகி நிற்கின்றன.இவர்கள் எல்லாம் நதிகளை இணைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது.

ஆனால் நதிகளை இணைத்து விவசாயம் சார்ந்த பொருளாதராத்தைக் கட்டமைத்தால் மட்டுமே 10% பொருளாதார வளர்ச்சியை இந்தியா முன்னெடுக்க முடியும்” என்று பொன்ராஜ் தெரிவித்தார்.

நதிநீர் இணைப்பு என்பதை தற்காலத்தில் நிலவும் சூழல்களை வைத்து கண்ணை மூடிக்கொண்டு அணுகாமல்,  எதிர்காலத்துக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் இந்தத் திட்டம் கை கொடுக்குமா? என்பதை இதற்காக குரல் கொடுக்கும் அரசும் சரி, அரசியல் தலைவர்களும்  ஆராய வேண்டும்.

பருவ நிலை மாற்றத்தாலும், காடுகளுக்கு எதிரான மனிதனின் செயல்பாடுகளாலும்  எதிர்காலத்தில் இமயமலையிலிருந்து உற்பத்தியாகும் ஆறுகளில் வறட்சி ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இதனை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முடிந்த அளவு நதிகளில் ஓடும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, மழைக்காலங்களில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் செய்தது போல் ஏரி, குளம், குட்டை போன்றவற்றைத் தூர்வாரி நமக்கான தண்ணீரைப் பெற முயல்வோம்.

இந்து குணசேகர்

Courtesy: tamil.thehindu.com