நெடுநல்வாடை – விமர்சனம்
வயலையும் உழைப்பையும் நம்பி வாழும் ஈர மனசுக்காரர் செல்லையா (‘பூ’ ராம்). கணவனால் கைவிடப்பட்ட நிலையில் தன் மகன், மகளோடு தந்தை செல்லையாவைத் தேடி வந்துவிடுகிறார் அவரது மகள். சொத்தில் பங்கு கொடுக்க நேரும் என தங்கை மீதும் அவளது குழந்தைகள் மீதும் வெறுப்பை உமிழ்கிறான் செல்லையாவின் மகன் கொம்பையா (மைம் கோபி). மகனின் எதிர்ப்பை மீறி மகளையும் பேரன் இளங்கோ (எல் விஸ் அலெக்ஸாண்டர்)வையும், பேத்தியையும் வைத்துக் காப்பாற்றுகிறார் செல்லையா.
தன்னை சொந்தக் காலில் நிற்கவைத்து அழகு பார்ப்பது தான் தாத்தாவின் ஒரே லட்சியம் என்பதை உணர்ந்து அதற்கேற்றபடி உழைக்கிறான் இளங்கோ. ஆனால் சிறுவயதில் அவனுடன் படித்த அமுதாவுடனான (அஞ்சலி நாயர்) காதலும் அதற்கு வரும் எதிர்ப்புகளும் அவனது முன்னேற்றப் பாதையில் தடைக் கற்களாகின்றன. தாய்மாமனின் வெறுப்பு, தாத்தாவின் தவிப்புக்கு மத்தியில் காதல் ஒரு கேடா என விலகிச் செல்பவனை, அமுதாவின் களங்கமற்ற அன்பு வெல்ல முனைகிறது. இளங்கோ அமுதா காதல் என்னவானது? தாத்தா செல்லையாவின் கனவை, பேரன் இளங்கோ நிறைவேற்றினானா என்பதை இயல்பாக சொல்கிறது ‘நெடுநல்வாடை’.
தென் மாவட்டத்து கிராமத்தைச் சேர்ந்த முதல் தலைமுறைப் பட்டதாரி இளைஞர்களின் வாழ்வை கிட்டத்தட்ட உண்மைக்கு நெருக்கமாகச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் செல்வக்கண்ணன். கூடவே தாத்தா – பேரன் என்ற இணையை வைத்து உணர்வுபூர்வமான காட்சிகளை மிகையில்லாமல் இயல்பாக தந்திருக்கிறார். பொதுவாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களில் கொட்டிக் கிடக்கும் அமெச்சூர்த்தனம் இந்தப் படத்தில் மிகக் குறைவு. வசனங்களில் நெல்லை வட்டார வழக்கை கச்சிதமாகக் கொண்டுவந்திருக்கிறார்கள். எல்லா வார்த்தைகளுக்கும் பின் ஒரு ‘லே’ சேர்த்துக் கொண்டால் நெல்லை வழக்கு ஆகிவிடும் என்று இதுவரை காட்டி வந்த தமிழ் சினிமாவில் ‘கோட்டி’, ‘ஓர்மை’ உள்ளிட்ட எண்ணற்ற நெல்லை வட்டார வார்த்தைகளை அனைத்து கதாபாத்திரங்களும் பேசுவதைக் கேட்கவே இனிமையாக இருக்கிறது.
கூடப்பிறந்தவனின் வெறுப்புத் தீயில் முகம் வாடும்போதெல்லாம், ஒரு தாய்க்கோழியைப்போல மகளை தன் பாச றெக்கைகளுக்குள் பொத்திவைத்து காக்கும் பாசத் தந்தையாக வாழ்ந்திருக்கிறார் ‘பூ’ ராம். வெறுப்பை உமிழ்ந்து கொண்டே இருக்கும் தாய் மாமனை சண்டையில் எப்படி நான் ஜெயிப்பது என 10 வயதுப் பேரன் கேட்கும்போது, “நீ நல்லபடியா படிச்சு முடிச்சு, பெரிய உத்தியோகத்துக்குப் போய், அம்மாவையும் தங்கச்சியையும் நல்லபடியா பார்த்துக்கிட்டின்னா, மாமன் தன்னால தோத்துருவான்” என வாழ்க்கையின் உண்மையான வெற்றியைச் சொல்லித்தரும் தாத்தாவாக, “பொம்பளப் பிள்ளைய தவிட்டுக்கா வாங்கிட்டு வந்தேன்? நான் பெத்தப் புள்ள, என் பேரன் பேத்திங்கள நான்தானே பார்த்தாகணும். பொண்ணுன்னா சொத்துல பங்கில்லையா?” என பெண்ணுக்கான சொத்துரிமைக்கும் மதிப்பு கொடுக்கும் பொறுப்புள்ள தந்தையாக ‘பூ’ ராமின் செல்லையா கதாபாத்திரம் தமிழ் கிராமிய வாழ்வு முழுமையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு அடுத்த இடத்தில் துடுக்கும் துணிவும் மிக்க பெண்ணாக, தான் ஏற்ற அமுதா கதாபாத்திரத்தை மிக அருமையாக மாற்றிக் காட்டியிருக்கும் அஞ்சலி நாயரை மனதார பாராட்ட வேண்டும். “நான் சிரிக்க ஆரம்பிச்சதே அவளைப் பார்த்துதான்” என்று தாத்தாவிடம் உருகும் கதை யின் நாயகனாக இளங்கோவும் கவர்கிறார்.
அண்ணன் கொம்பையாவாக வரும் மைம் கோபி, மருதுபாண்டியாக வரும் அஜெய் நடராஜ், நம்பியாக வரும் ஐந்துகோவிலான், பேச்சியம்மாவாக வரும் செந்தி, அல்லிதுரையாக வரும் ஞானம் என துணைக் கதாபாத்திரங்களின் நடிப்பிலும் அவ்வளவு உயிரோட்டம். நெல்லைப் பேச்சு வழக்கின் அசல் தன்மையை உணர வைத்ததற்காகவே இயக்குநர் செல்வக்கண்ணனைப் பாராட்டலாம்.
முதல் பிரேமில் தொடங்கி நெல்லின் வாசனையையும் மலையின் வாசனையையும் உணரவைக் கிறது வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு. ஜோஸ் ஃபிராங்க்ளினின் உணர்வுபூர்வ பின்னணி இசை, படம் முழுவதும் ரம்மியமாக பங்காற்றுகிறது.
உறவுகளின் உயிரோசையை, காதலின் பேராண்மையை சாமானிய மனிதர்கள் மத்தியில் உணர வைக்கிறது இந்த ‘நெடுநல்வாடை’.