டு லெட் – விமர்சனம்
கடந்த முப்பது வருடங்களில் தமிழில் வந்திருக்கும் மிகச் சிறந்த சினிமா – டுலெட்.
சினிமா ஒரு விஷூவல் ஆர்ட் என்பதை முழுமையாக உணர்ந்த, அறிந்த கலைஞனிடமிருந்து வந்திருக்கும் சினிமாவும்கூட.
நீளமும் அகலமும் கொண்ட சட்டகத்திற்குள் (Frame) நிறைந்திருக்கும் ஆழமே ஒரு காட்சியை அல்லது திரைப்படத்தை உன்னதமான படைப்பாக்குகிறது. ஒளி, ஒலி, நிழல், மௌனம் இவை எல்லாவற்றையும் கதை சொல்லப் பயன்படுத்துபவர்களே உலகளவில் தலைச்சிறந்த இயக்குநர்களாக பரிணமிக்கிறார்கள். டுலெட் மூலமாக செழியன் அவர்கள் அப்படியொரு இயக்குநராக நமக்குக் கிடைத்திருக்கிறார்.
வீட்டைப் பார்க்க வருபவர்களுக்காக திறந்து திறந்து மூடப்படும் கதவுகளும் வீட்டிற்குள் நுழைந்து மின்விசிறிக்கு மேலே பறக்கும் குருவியும் அந்தச் சிறுவனின் கண்களும் உருவாக்குகிற பேரனுபவம் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. திரையில் பாருங்கள், உணர்வீர்கள்.
நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் நம்பிராஜனும் நாயகி ஷீலாவும் தங்களின் உயிர்ப்பான நடிப்பின் மூலம் மனதில் நிலைக்கிறார்கள். இருவரின் தேர்வும் செறிவான நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலம். மகனாக வரும் சிறுவன், இனிய நண்பர்கள் கவிஞர் ரவி சுப்ரமனியன், எம்.கே.மணி, அருள் எழிலன், ஆதிரா உட்பட எல்லாத் துணைக்கதாப்பாத்திரங்களிலும் இயல்பு முகங்களுடன் வருபவர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். படத்தின் இன்னொரு முக்கிய கதைப்பாத்திரமாக தபஸ் நாயக்கின் ஒலி வடிவமைப்பைச் சொல்லலாம். ஒரு படத்தில் ஒலி எவ்வளவு முக்கியத்துவம் வகிக்கிறது என்பதற்கு டுலெட் நல்ல உதாரணம்.
“உங்களது கருத்தைப் பார்வையாளர்களுக்குச் சொல்ல வேண்டும் என முயற்சி செய்யாதீர்கள். அவர்களுக்கு ஒரு வாழ்க்கையைக் காட்டுங்கள். அவர்கள் அதற்குள் தங்களை இணைத்துக்கொள்வார்கள்.” என்கிறார் தார்கோவெஸ்கி.
டுலெட் அதிரடி வசனங்களாக எதையுமே சொல்லவில்லை. கருத்தைத் திணிக்கவில்லை. ஆனால் அதன் வழியாக செழியன் அவர்கள் காட்டும் வாழ்க்கையில் நம்மை எளிதில் இணைத்துக்கொள்ள முடிகிறது. உலகமயமாக்கலின் விளைவாக வீடற்றவர்களாக, நாடற்றவர்களாக சொந்த நாட்டிற்குள்ளேயே அகதிகளாக்கப்பட்டிருக்கும் அடித்தட்டு மற்றும் நடுத்தர எளிய மக்கள் எல்லோரின் வலியையும் உணர முடிகிறது. வீடு என்பது வீடு அல்ல என்பதையும், வீடு தேடி அலைகிற அலைச்சலோடு இடம் பெயர்தலையும் பொருத்திப்பார்க்க முடிகிறது.
பாலுமகேந்திரா அவர்கள் தன்னுடைய சினிமா மொழியை “வீடு”, “சந்தியா ராகம்” போல சமரசமற்ற முயற்சிகளை முன்னெடுத்து நல்ல சினிமாக்களை உருவாக்குவார்கள் என்று சிலரின் மேல் நம்பிக்கை வைத்திருந்தார். அந்த பட்டியலில் செழியன் முக்கியமான இடத்தில் இருந்தார். என்னைப் போன்றவர்களிடம் அவர் அதைப் பலமுறை பகிர்ந்ததுண்டு. இன்று பாலுமகேந்திரா இருந்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பார். செழியனை வாரியணைத்து உச்சி முகர்ந்திருப்பார்.
செழியன் அவர்களே தயாரிப்பாளராகவும் இருந்து சுயாதீன சினிமாவாக எடுக்கப்பட்டிருப்பதால் இப்படியொரு உன்னதமான, சுதந்திரமான சினிமா சாத்தியப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை வணிக வெற்றியடையச் செய்வதன் வழியாக அது தமிழ் சினிமாவிற்குள் புதிய கலாச்சாரத்தை உருவாக்கும். வெற்றிகள் தோற்றுவிக்கும் கலாச்சாரத்தைப் பின் தொடர்வதில் பழக்கபட்டிருக்கும் பல தயாரிப்பாளர்கள் இது போன்ற நல்ல முயற்சிகளை நோக்கி வரக்கூடும். செழியன் அவர்கள் அதற்கான விதையை விதைத்திருக்கிறார். அது நல்ல விதையாக முளைக்கவும் செய்திருக்கிறது.
“டுலெட்” திரைப்படம் நாம் அனைவரும் பார்த்து எக்காலத்திற்கும் நம் மனதில் இருத்த தகுதிகள் கொண்ட முழுமையான திரைப்படம்.
வாழ்த்துகள் செழியன் சார்!!
மீரா கதிரவன்
இயக்குனர்