சர்வம் தாள மயம் – விமர்சனம்
விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்தவர் ஜான்சன் (குமாரவேல்). அவர் மிரு தங்கம் வடிவமைப்பதில் கைதேர்ந் தவர் என்பதால் பாலக்காடு வேம்பு ஐயர் (நெடுமுடி வேணு) உட்பட பல முன்னணி வித்வான்களும் அவரிடமே மிருதங்கம் வாங்குவது வழக்கம். ஜான்சனின் மகன் பீட்டர் (ஜி.வி.பிரகாஷ்) கல்லூரி மாணவர். ரிலீஸ் நாளன்று கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, டிரம்ஸ் வாசித்து கொண்டாடும் அளவுக்கு தீவிர விஜய் ரசிகர். ஒருமுறை நெடுமுடி வேணு மிருதங்கம் வாசிப்பதை கேட்டு லயித்துப்போன ஜிவி, தானும் வாசிக்க ஆவல் கொள்கிறார். தங்களது சமூகத்தை காரணம் காட்டி மறுக்கிறார் தந்தை. ஆனாலும் விடாத ஜிவி, நேரடியாக நெடுமுடி வேணுவிடமே சென்று தன் விருப்பத்தை தெரிவிக்கிறார். வித்தை எங்கிருந்தாலும் மதித்து, ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அவர். ஆனால், அவரது முக்கிய சிஷ்யனான வினித் இதை விரும்பவில்லை. ஜிவியை ஒழித்துக்கட்டத் துடிக்கிறார். ஜிவியின் மிருதங்கக் கனவு நனவானதா என்பதை சுவாரஸ்யமான தாளகதியோடு சொல்கிறது ‘சர்வம் தாள மயம்’.
இரு சமூகத்தினருக்கு இடையிலான மோதல், காதலர்களை சேரவிடாமல் அழிப் பது என்ற வழக்கமான பாணியில் இல்லா மல், கர்னாடக இசை உலகில் காணப்படும் சாதிய உணர்வை வெளிப்படுத்துகிறது கதை. அப்பட்டமாக வாளை எடுத்துச் சுழற்றாமல், நேர்த்தியான காட்சி அமைப்புகள், அர்த்த முள்ள வசனங்கள் மூலமாக சாதியத்துக்கு எதிரான தன் குரலை பதிவு செய்துள்ளார் இயக்குநர் ராஜீவ் மேனன்.
திறமை மீது நம்பிக்கையின்றி விளம்பர வெளிச்சங்களை நாடும் கலைஞர்கள், கர்னாடக இசை மேடைகளில் பாடகர் – பக்கவாத்தியக் கலைஞர்கள் இடையிலான ‘ஈகோ’, டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் பின்னணியில் உள்ள டிஆர்பி ரேட்டிங் அரசியல் ஆகியவற்றையும் போகிற போக்கில் ஒருபிடி பிடிக்கிறார்.
குமாரவேல் – ஜிவி இடையிலான அப்பா – மகன் உறவு, நெடுமுடி வேணு உடனான குரு – சிஷ்ய உறவு ஆகியவை ஈர்ப்பும், எதார்த்தமுமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஜிவி – அபர்ணா பாலமுரளி காதல் எந்த பிடிமானமும் இல்லாமல் நகர்கிறது.
இரண்டாம் பாதியில் ஆங்காங்கே திரைக்கதை சறுக்குகிறது. ரியாலிட்டி ஷோ காட்சிகள், நாடுதழுவிய திடீர் பயணம் என கோர்வை இன்றி காட்சிகள் ஆங்காங்கே எம்பிக் குதிக்கின்றன.
நெடுமுடி வேணு, ஜிவி, குமாரவேல் ஆகியோர் முழுப் படத்தையும் தாங்குகின்ற னர். பியானோ, கீபோர்டு கலைஞரான ஜிவி, இந்த படத்துக்காக மிருதங்கம் வாசிக்கவும் தீவிர பயிற்சி எடுத்திருக்கிறார் என்பதை மிருதங்கத்தில் அவர் வாசிக்கும் ‘சாப்புகள்’ காட்டுகின்றன. வினித், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக வரும் திவ்யதர்ஷினியின் நடிப்பும் நிறைவு.
‘பாய்ஸ்’, ‘சங்கமம்’ படங்களுக்குப் பிறகு கிடைத்திருக்கும் இசை சம்பந்தப்பட்ட கதை என்பதால் 6 பா(ட)ல்களிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அதிலும் ‘மாயா மாயா’வும், ராகமாலிகையில் அமைந்த ‘வரலாமா’ பாடலும் கிளாஸிக்கல்! மிருதங்கம், செண்டை, டோலக், பறை எனப் பலரக தாள வாத்தியங்களின் இசை பிரம்மாண்டத்தைக் காட்டி மிரட்டுகிறார். ரியாலிட்டி நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் கர்னாடக தாள வாத்திய மரபுகளை உடைத்துவிட்டு நாயகன் வாசிக்கும் மிருதங்க இசை உட்பட ஏ.ஆர்.ரஹ்மானின் பங்களிப்பு படத்தை முட்டுக்கொடுத்து தாங்கி நிறுத்துகிறது.
நாட்டின் பரந்துபட்ட நிலப்பரப்புகளை யும், கடற்கரைகளின் எழிலையும், மலை களின் பிரம்மாண்டத்தையும் விஷுவல் டிரீட்டாக பரிமாறுகிறது ரவி யாதவ்வின் நேர்த்தியான ஒளிப்பதிவு. ‘சர்வம் தாள மயம்’ பாடல் ஒளிப்பதிவில், ராஜீவ் மேனனின் தாக்கம் தெரிகிறது. ஜிவியின் இசைத் தேடல் பயணக் காட்சி களை சரியான இடத்தில் இணைத்து தொகுத்த ஆண்டனியின் எடிட்டிங் கவனம் பெறுகிறது.
சாதியக் கட்டுமானங்களைக் கடந்தது கலை. திறமையும், தேடலும் இருக்கும் இடத்தில் அது தன்னை தற்காத்துக்கொண்டு அடுத்த தலைமுறைக்கு கடந்துசெல்லும் என்பதை தேர்ந்த நடிகர்கள், சிறந்த இசை மூலமாகத் தந்து, தொடக்கம் முதல் இறுதிவரை தாளம் போட்டு ரசிக்க வைத்துவிடுகிறார் இயக்குநர். வடிவம் வெவ்வேறாக இருந்தாலும் கர்னாடக இசை, வட இந்திய இசை, கேரளத்தின் செண்டை மேள இசை, பறை இசை என அனைத்தும் இசை என்ற சாகரத்தில் சங்கமிக்கின்றன என்று நிறைவு செய்து, இசைக்கு மகுடம் சூட்டி இருக்கிறது ‘சர்வம் தாள மயம்’.