“மக்களவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவேன்”: பிரகாஷ்ராஜ் அறிவிப்பு
இந்த ஆண்டு ஏப்ரல் / மே-ல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது அறிவித்துள்ளார்.
பிரகாஷ்ராஜ், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான, ம்தச்சார்பின்மை கொள்கை கொண்டவர். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்பும், கர்நாடக பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட பிறகும் பாஜகவையும், பிரதமர் மோடியையும் எதிர்க்கும் தனது மனப்போக்கை அவர் தீவிரப்படுத்தினார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரகாஷ் ராஜ் கூறுகையில், “ நான் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை. நான் மோடிக்கு எதிரானவன், அமித் ஷாவுக்கு எதிரானவன், என்னைப் பொறுத்தவரை அவர்கள் இந்துக்கள் இல்லை” எனத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராகத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சிக்கும் வகையில் #ஜஸ்ட் ஆஸ்கிங் என்ற ஹேஷ்டேக்கில் கேள்விகளைப் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிடுகையில், “அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள். புதிய ஆண்டு பிறந்துள்ளது. புதிய தொடக்கம் ஆரம்பமாகி இருக்கிறது. உங்களின் ஆதரவால், அதிகமான பொறுப்புக்களுடன், புதிய பாதையை தொடங்கப் போகிறேன். வரும் மக்களவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடப் போகிறேன். எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்ற விவரங்களை விரைவில் அறிவிப்பேன்“ எனத் தெரிவித்துள்ளார்.