நாட்டுக்கு நல்லது செய்ய மோடி கடினமாக முயற்சி செய்கிறாராம்: ரஜினி சொல்கிறார்!

நடிகர் ரஜினிகாந்த் வடநாட்டு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு நல்லது செய்ய விரும்புகிறார். அதற்காக கடினமாக முயற்சி செய்யும் அவர் தனது சிறப்பைக் கொடுக்கிறார். மோடி குறித்து இதை மட்டுமே இப்போது நான் சொல்ல விரும்புவேன்.

தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் உள்ளது.

தமிழர்களிடம் நிறைய ஆற்றல் வளம் உள்ளது. அவர்கள் கடின உழைப்பாளி மட்டுமல்ல, அறிவார்ந்த மக்கள். ஆனால் அவர்கள் தங்களது திறமைகள், பலம், அறிவு உள்ளிட்டவற்றை மறந்து விட்டார்கள். எல்லாம் இருந்தாலும் அவற்றை ஒழுங்காக நிர்வகிக்கத் தெரியவில்லை.

தமிழக மக்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் அது மிக முக்கியமானது. அவர்கள் வாக்குகளைப் பெறுவதை விட இது மிகவும் முக்கியமானது. மக்களுக்கு அரசியல் அறிவை அளிக்க வேண்டும். மக்களிடம் ஓட்டு கேட்பதை விட, அறிவை அளிப்பதே முக்கியம். மக்கள் கடினமாக உழைக்கிறார்கள், அவர்களுக்கு நாம் கைமாறு செய்ய வேண்டும்.

நான் எப்போதும் அரசியலையும், சினிமாவையும் இணைத்து பார்க்க நினைத்ததில்லை. தொடக்கத்தில் இருந்தே இரண்டையும் தூரத்திலேயே வைத்து இருந்தேன். அரசியல் வேறு, சினிமா வேறு. சினிமா என்பது பொழுது போக்கிற்கு மட்டுமே.

எம்ஜிஆர் மிகச்சிறந்த அரசியல்வாதி. சினிமா நடிகர்கள் அரசியலில் வெற்றி பெற்று மக்களுக்கு உதவ முடியும் என்பதை எம்.ஜி.ஆர். தான் நிரூபித்துக் காட்டினார். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் எல்லோருக்கும் அவர்தான் ரோல் மாடல். எனக்கும் அவர் தான் ரோல் மாடல். அதேபோல் தான் ஜெயலலிதாவும். அவர் மிகவும் வலிமையான பெண்.

கமலுக்கும் எனக்கும் எந்த சண்டையும் இல்லை. எனக்கும் அவருக்கும் போட்டி கூட இல்லை. அவர் ஒரு நல்ல நண்பர். அவர் எனக்கு நிறைய இடங்களில் உதவி இருக்கிறார். அவர் இப்போதும் எனக்கு நெருங்கிய நண்பர்தான். அவர் நாட்டிற்கு நல்லது செய்ய நினைக்கிறார். அவர் தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.