கையில் பீர் பாட்டிலுடன் போலீஸ் ஜீப்பில் ‘அயோக்யா’ விஷால்: ராமதாஸ் எதிர்ப்பு!
‘அயோக்யா’ படத்தின் ஃபர்ஸட்லுக் போஸ்டரில், கையில் பீர் பாட்டிலுடன் போலீஸ் ஜீப்பில் விஷால் அமர்ந்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸும், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸும், மது குடித்தல் மற்றும் புகை பிடித்தலுக்கு எதிராகக் கடந்த பல வருடங்களாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
“திரைப்படங்களைப் பார்த்துதான் இளைஞர்கள் புகை பிடித்தலுக்கும், மது குடித்தலுக்கும் அடிமையாகிறார்கள். எனவே முன்னணி நடிகர்கள் படங்களில் அவ்வாறு நடிக்கக் கூடாது” என இருவரும் வற்புறுத்தி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோது, அதில் விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. அதற்கு ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த போஸ்டர் திரும்பப் பெறப்பட்டது. ஆனாலும், படத்தில் அதுபோன்ற காட்சிகள் இடம் பெற்றன.
இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் என்ற மோசமான குருவிடமிருந்து கீழ்த்தரமான வியாபாரத் தந்திரங்களைக் கற்றுக்கொண்ட அவரது சீடரான வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துவரும் ‘அயோக்யா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நேற்று (நவம்பர் 20) மாலை வெளியானது. அதில், போலீஸ் ஜீப்பின் மீது அமர்ந்தபடி, கையில் பீர் பாட்டிலுடன் போஸ் கொடுத்துள்ளார் விஷால். இதற்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச் செயலாளரிடம் இருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்.
‘அயோக்யா’ திரைப்பட விளம்பரத்தில் கதாநாயகர் விஷால் பீர் புட்டியுடன் தோன்றுகிறார். நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் என்ற முறையில், புகைக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதைத் தடை செய்ய வேண்டும் என கடிதம் எழுதினேன். இப்போது புகையைத் தாண்டி பீர் பாட்டிலுடன் நடிக்கிறார். என்னவொரு சமூகப் பொறுப்பு!” என கிண்டலாக ட்வீட் செய்துள்ளார் ராமதாஸ்.