உத்தரவு மகாராஜா – விமர்சனம்
எமோஷன், காதல், காமெடி, செண்டிமெண்ட் கலந்த சைக்கோ திரில்லர் தான் ‘உத்தரவு மகாராஜா’.
நாயகன் உதயா ஒரு டிராவல் ஏஜென்சி நடத்தி வருபவர். நண்பர்களிடம் பொய்கள் சொல்லி தன்னைப் பற்றி பில்டப் தருவதை வழக்கமாக வைத்திருப்பவர். அவர் திடீரென்று காணாமல் போய் ஒரு மாதம் கழித்து மீண்டும் திரும்பி வருகிறார்.. ஆனால் அவருக்கு தான் காணாமல் போனதும், ஒரு மாதம் எங்கே இருந்தோம் என்பதும் தெரியவில்லை. அந்த நினைவுகளை முழுமையாக அவரால் கொண்டுவர முடியவில்லை.
இதற்கிடையே, உதயாவுக்கு திடீரென்று வித்தியாசமான குரல்கள் கேட்கத் தொடங்குகின்றன. இதனால் நிம்மதியை இழக்கிறார். அவரை மனநோயாளியாக மாற்றும் அந்த குரல்கள் யாருடையது? உதயா நல்லவரா? கெட்டவரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.
மன நோயாளி உள்ளிட்ட பல வேடங்களில் உதயா நடித்து இருக்கிறார். படம் முழுக்க ஆக்கிரமிக்கும் வேடம் என்பதை உணர்ந்து நடித்து இருக்கிறார். நிம்மதி இழந்து அவர் தவிக்கும் காட்சிகளில் பரிதாபத்தை ஏற்படுத்துகிறார். உதயாவை ஆட்டுவிக்கும் டாக்டராக பிரபு. படம் சற்று தொய்வடையும்போது எல்லாம் பிரபு நுழைந்து நிமிர வைக்கிறார். நடிப்பில் வழக்கமான கம்பீரம்.
கதாநாயகிகள் பிரியங்கா, சேரா இருவரும் தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்து இருக்கிறார்கள். கோவை சரளா, ஸ்ரீமன், மனோபாலா, ஆடம்ஸ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் சிரிக்க வைத்திருக்கிறார்கள். மனோபாலாவின் அடியாட்களாக மனோஜ்குமார், ஹரிகிருஷ்ணன், கண்ணன் ஆகியோரும் நிறைவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குனர் ஆசிப் குரேசி குழப்பமான திரைக்கதையை இரண்டாம் பாதியில் புரிய வைத்ததன் மூலம் கவனிக்க வைக்கிறார். ஒரு சைக்கோ திரில்லரில் எமோஷன், காதல், காமெடி, செண்டிமெண்ட் கலந்து கொடுத்திருக்கிறார். படத்தின் நீளத்தைக் குறைத்து, வேகத்தை அதிகரித்திருக்கலாம்.
நரேன் இசையும், பாலாஜி ரங்கா ஒளிப்பதிவும் சைக்கோ திரில்லருக்கு ஏற்றபடி சிறப்பாக வந்துள்ளன.
`உத்தரவு மகாராஜா’ – ஒருமுறை பார்க்கலாம்!