திமுகவுக்கு எதிரான கருத்தியலோடு ‘சன்’ குழுமம் கை கோர்த்து இருப்பது தற்செயலானது அல்ல!
சுந்தர் ராமசாமியின் அப்பா ராமேஸ்வரம் மீனவர். அவரோடு சேர்த்து மொத்தம் பதிமூன்று பேர் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். “என்னை கரைக்குக் கொண்டுபோனால் அடக்கம் செய்ய செலவாகும். அந்தக் காசுல என் புள்ளைங்க பசியாறட்டும். என்னை கடல்லயே போட்ருங்க” என்று மரண வாக்காக சொல்லிவிட்டு செத்துப் போகிறார் சு.ரா.வின் தந்தை. அதேபோல் அவரது உடலை கடலில் வீசிவிடுகிறார்கள்.
“எல்லாருக்கும் அஸ்தியைக் கடல்ல கரைப்பாங்க, ஆனா எங்கப்பாவையே கடல்ல கரைச்சிட்டாங்க” என்று கண்ணீர் விடுகிறான் சுந்தர் ராமசாமி.
அப்படியாப்பட்ட சோகப் பின்னணி கொண்ட கதாநாயகன் என்ன செய்வான்..?
தன் தந்தையின் சாவுக்குக் காரணமான சிங்கள ராணுவத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பான்.
அது கஷ்டமென்றால், குறைந்தபட்சம் தன் தந்தை போல் இனி எந்த மீனவனும் சாகக் கூடாதென மீனவ நண்பனாகத் திகழ்வான்.
ஆனால், ஜெயமோகனைத் துணைகொண்ட முருகதாஸின் கதாநாயகன், ஒரு மல்ட்டி நேஷனல் கம்பெனியின் தலைமை அதிகாரியாகிறான். வருடம் ஆயிரத்து எண்ணூறு கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறான். அதில் ஒத்தப் பைசாகூட ராமேஸ்வரம் மீனவர்களுக்கு செலவிடவில்லை. மாறாக தனக்கெதிரான கம்பெனிகளை அழித்து இழுத்து மூடுகிறான். அப்படி மூடப்பட்ட ஒரு கம்பெனியால் இருபத்தியிரண்டாயிரம் பேர் வேலை இழக்கின்றனர்.
இப்படி பல கம்பெனிகளை மூடி லட்சக்கணக்கானவர்கள் சோற்றில் மண்ணள்ளிப் போட்ட கார்பரேட் கிரிமினல், அவன் ஓட்டை யாரோ போட்டதற்காக வீறுகொண்டு எழுகிறான். மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஸ்டெரிலைட், காவேரி எல்லாவற்றுக்கும் குரல் கொடுக்கிறான். ஆனால் பாவம், அந்தக் கூமுட்டைக்கு டெல்லியில் ஒரு அரசாங்கம் இருப்பதே தெரியவில்லை.
எல்லாப் பிரச்னைக்கும் காரணம் முதலமைச்சர் மாசிலாமணி தான் என்றே நம்புகிறான். அவரை எதிர்த்து டி.ராஜேந்தரின் உடல் மொழியிலும், சமுத்திரக்கனியின் வாய்மொழியிலும் போராடுகிறான்..
போதும்; மீதியை வெண்திரையில் காணுங்கள்..
சொல்ல வந்தது இதுதான்:-
- ஏ.ஆர்.முருகதாஸ் தன் கதாநாயகனுக்கு ‘சுந்தர் ராமசாமி’ என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக ‘எச்.ராஜா’ என்று பெயர் வைத்திருக்கலாம். காரணம் ஏறக்குறைய ‘எச்சா’ரின் அரசியல் பார்வையுடன் தான் தமிழக அரசியலின் மீது குரோதத்தோடு இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது
- சமகால நிகழ்வுகளை விஜய் டி.வி.யில் ‘லொள்ளு சபா’ வெகு சுவாரசியமாக கையாண்டிருக்கிறது.
- ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம், காவேரி என பல போராட்டங்களில் இளம் இய்க்குநர்களும், உதவி இயக்குநர்களும் களத்துக்கு வந்து போராடியிருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் இவற்றிற்கு ஆதரவாக ஒரு வார்த்தை பேசாத முருகதாஸ், இவற்றையெல்லாம் தன்வயப்படுத்த முயன்றிருக்கிறார்.
- தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்துக்கு எதிரானதொரு கருத்தியலோடு சன் டி.வி. கை கோர்த்திருப்பது தற்செயலானது என்று கருத முடியாது.
- தமிழ்த் திரையுலகில் பலமானதொரு பி.ஜே.பி. லாபி உருவாக்கப்படுகிறது.. இதில் துன்ப அதிர்ச்சியாக சிலரும் இருக்கலாம். இனி நம் கதாநாயகர்களில் சிலர் மறைமுகமாக “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று முனகுவார்கள்
- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கங்கை அமரன் பி.ஜே.பி வேட்பாளரானது தெரிந்ததே. அதுபோல் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் ஏ.ஆர்.முருகதாஸ் கள்ளக்குறிச்சி தொகுதியின் பி.ஜே.பி. வேட்பாளராவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
KAVITHA BHARATHY