‘தொரட்டி’ பார்த்தேன்! கெமிக்கல் உரங்களுக்கு முன் இந்த மண்ணை காத்த ஒரு சமூகத்தின் கதை!
நல்ல திரைப்படத்தை ரிலீசுக்கு முன்பே பார்ப்பது என்பது திருமணம் செய்து கொள்ள இருக்கிற பெண்ணை அதற்கு முன்பாகவே பார்த்து ரசிக்கிற மாதிரியான அனுபவத்தை தரக்கூடியது. அப்படியான அனுபவத்தை தந்த படம் ‘தொரட்டி’.
“சார் இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு ஒரு நல்ல படம் பண்ணியிருக்கேன் வந்து பாருங்க சார்” என்று அழைத்தார் படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான ஷமன் மித்ரு.
வழக்கமாக ஹீரோவாக நடிப்பவரே ஒரு படத்தை தயாரித்தால் அந்த படம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதற்கு பல அனுபவங்கள் எனக்கு இருக்கிறது. என்றாலும் தயக்கத்துடன் ஒத்துக்கொண்டு சென்று பார்த்தேன். என் நினைப்பில் மண்ணைவாரிப் போட்டது படம். அற்புதமான படம். முழுக்க முழுக்க புதுமுகங்களால் இப்படி ஒரு படத்தை தர முடியுமா என்று ஆச்சர்யம் ஏற்பட்டது.
1980களில் நடக்கிற மாதிரியான கதை. இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரியுமா என்று தெரியவில்லை.. வயலில் கிடைபோடும் ஒரு சமூகம் இருந்தது. கிடை போடுதல் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வயலுக்கு கிடைக்கும் இயற்கை உரங்களில் அற்புதமானது ஆடுகளின் சிறுநீரும், புளுக்கையும். இதற்காக அந்தக் காலத்தில் விவசாயத்துக்கு தயாராகும் வயலில் ஆட்டுக் கிடை போடுவார்கள். 50 முதல் 500 ஆடுகள் வரை கூட்டமாக அழைத்து வந்து அந்த வயலில் வேலி கட்டி ஆடுகளை (அடைத்து) தங்க வைப்பார்கள். அவைகள் வயலில் மேய்ந்து அங்கேயே கழிக்கும் சிறுநீரும், புளுக்கையும்தான் அந்த நிலத்துக்கு விருந்து.
இப்படி கிடை போடுகிறவர்களுக்கு கொஞ்சம் பணம் அல்லது, தானியம் சம்பளமாக கொடுப்பார்கள். ஒன்றிரண்டு நாட்களுக்கு பிறகு அடுத்த வயல்நோக்கி செல்வார்கள். இவர்கள் கிட்டத்தட்ட ஒரு நாடோடி சமூகம், ஒரு முறை ஆடுகளை மேய்த்துக் கொண்டே கிளம்பி விட்டால் சொந்த ஊர் திரும்ப பல மாதங்கள் கூட ஆகலாம். இந்த சமூக மக்களை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ளது இந்தப் படம்.
வெந்த சோறு, சுட்டகறி, பட்டச் சாராயம்தான் அவர்கள் வாழ்க்கை. அந்த கூட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் ஆடு (நாயகன்) வழி தவறி குள்ளநரி (படுபாவிகள்) கூட்டத்தில் சேர்கிறான். அதனால் அவன் பெற்ற அற்ப சந்தோஷமும், பெரும் இழப்புகளும்தான் கதை.
கெமிக்கல் உரங்களுக்கு முன் இந்த மண்ணை காத்த ஒரு சமூகத்தின் கதை. ‘தொரட்டி’ என்பது அவர்களின் ஆயுதம் அல்ல… தெய்வம்.
குடம் பாலில் துளி விஷம் கலந்தால் என்ன ஆகும் என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகிற படம்.
நாயகன் ஷமன் மித்ரு வேலி தாண்டிய கிடாயாகவும், நம்ம பொள்ளாச்சி பொண்ணு சத்யகலா கிடைக்குள் அன்புக்கு ஏங்கிக் கிடக்கும் வெள்ளாடாகவும் வாழ்ந்திருக்கிறார்கள்.
ஆங்காங்கே சில பல விருதுகளை வாங்கினாலும், வெளிவருதற்கு தடுமாறிக் கொண்டிருந்தது தொரட்டி. இப்போது ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ சி.வி.குமார் பெரிய மனசு வைத்து வெளியிட இருக்கிறார்.
‘மேற்கு தொடர்ச்சி மலை’, ‘பரியேறும் பெருமாள்’ வரிசையில்… அடுத்து வருகிறது ‘தொரட்டி’.
காலம் மறைத்துவிட்ட ஒரு விவசாய சமூகத்தின் அற்புதமான பதிவு.
MEERAN MOHAMED