இளம்பெண் சிந்துவை ‘அம்மா’ ஆக்கிய அமைச்சர் ஜெயக்குமார்: குற்றம் – நடந்தது என்ன?
அக்டோபர் 21ஆம் தேதி இரவு. சென்னை மாநகராட்சி சார்பில் தரப்பட்ட ஒரு பிறப்புச் சான்றிதழ், வாட்ஸ்அப்பில் வெளியானது. அதில், ஆகஸ்டு 9ஆம் தேதியன்று பிறந்த ஆண் குழந்தையின் அம்மா பெயர் ஜே.சிந்து, அப்பா பெயர் டி.ஜெயக்குமார், குழந்தை பிறந்த மருத்துவமனையின் பெயர் மற்றும் மருத்துவமனையின் முகவரி, குழந்தையின் பெற்றோர் முகவரி ஆகிய விவரங்கள் இருந்தன. தொடர்ந்து அ.ம.மு.க.வின் ஜெயா ப்ளஸ் டிவியில் ‘பிரேக்கிங் நியூஸ்’ என்று ஓர் ஆடியோ வெளியானது. ‘எம்.பி.க்கு தம்பிப் பாப்பா’ என்கிற தலைப்பில் வெளியான அந்த ஆடியோவில், ஆண் – பெண் உரையாடல் சுமார் பத்து நிமிடங்கள் ஒலித்தது.
இதைத் தொடர்ந்து, அந்தக் குரலுக்கும் குற்றச்சாட்டுக்கும் சொந்தக்காரர் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் என வெளிப்படையாகப் பலரும் வலைத்தளங்களில் பகிர ஆரம்பித்தார்கள்.
இதில் என்னதான் நடந்தது என்பதை அறிய ராயபுரம் தொகுதியில் உள்ள தினகரன் அணியைச் சேர்ந்த பிரமுகர்களைச் சந்தித்துப் பேசினோம்.
“அந்த இளம்பெண் சிந்து, பி.பி.ஏ. படித்தவர். வயது 24. அவருக்குத் திருமணம் நடக்க ஏற்பாடாகி இருந்தது. ஆனால், பெண் பார்க்க வருகிறவர்கள் எல்லாம் ஏதேதோ காரணங்கள் சொல்லித் தட்டிக் கழித்தனர். இதனால், சிந்துவின் அம்மா நிம்மதி இல்லாமல் தவித்திருக்கிறார். இதற்குத் தீர்வு தேடுவதற்காக அவர்கள் கோவளம் பகுதியில் உள்ள மாந்திரீகப் பிரமுகரிடம் சென்றிருக்கிறார்கள். அவர் சில திருமணப் பரிகாரங்களைச் செய்துவிட்டு ஒன்றரை லட்சம் ரூபாயைக் கறந்திருக்கிறார். ஆனால், பல மாதங்களாகியும் சிந்துவுக்குத் திருமணம் நடக்கவில்லை. இதனால் மாந்திரீகப் பிரமுகரிடம் போய் பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளனர். அவர் பணத்தைத் திருப்பித் தர மறுத்ததுடன், ‘உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது’ என்று சத்தம் போட்டிருக்கிறார். சிந்துவின் அம்மா கோவளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்தச் சூழலில்தான் உறவினர்கள் சிலர், ‘இந்த விஷயத்தை தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான ஜெயக்குமாரிடம் எடுத்துச் சென்றால், அவர் பேசி பணத்தை வாங்கித் தருவார்’ என்று யோசனை சொல்லியிருக்கிறார்கள்.
இதையடுத்து அம்மாவும் மகளும் உள்ளூர் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரை சிபாரிசுக்கு அழைத்துக்கொண்டு அமைச்சர் ஜெயக்குமாரைப் போய் சந்தித்திருக்கிறார்கள். அப்போது, ‘உன் பேரு என்னம்மா?’ என்றவர், பிரச்னை குறித்து மிகவும் அக்கறையுடன் விசாரித்தாராம். அவர்களும், ‘திருமணத் தடைகள் பற்றியும், பரிகாரம் செய்வதற்காகப் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிய பிரமுகர் பற்றியும்’ விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள். பின்பு ஜெயக்குமார், ‘போன் நம்பரைத் தந்துவிட்டுப் போங்கள். பிறகு அழைக்கிறேன்’ என்று சொல்லி அனுப்பினாராம்.
திடீரென்று ஒரு நாள், ஜெயக்குமாரிடம் இருந்து போன் அழைப்பு வந்ததாம். அப்போது சிந்துவின் அம்மா ஊரில் இல்லை. சிந்து மட்டும் தனியாக இருந்தாராம். அவரை தனது அலுவலகத்துக்கு வரச் சொல்லியிருக்கிறார் அமைச்சர். சிந்து மறுக்கவே, ‘கோவளம் இன்ஸ்பெக்டரை வரச் சொல்லிவிட்டேன். உனக்குத் தெரிந்ததை வந்து சொல்லு’ என்றும் வற்புறுத்தினாராம். தயங்கித் தயங்கி சிந்து போயிருக்கிறார். இவர் போனபோது, அலுவலகமே வெறிச்சோடிக் கிடந்ததாம். அப்போது வந்த ஜெயக்குமார், கையில் இரண்டு ஜூஸ் டம்ளர்களை வைத்திருந்தாராம். அதில் ஒன்றை சிந்துவிடம் கொடுத்து, ‘இந்தா, குடி…’ என்று சொல்ல சிந்துவும் குடித்தாராம். அதன் பின்பு அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாம். நீண்ட நேரத்துக்குப் பிறகு கண் விழித்தபோது, ஏதோ விபரீதம் நடந்துவிட்டதை உண்ர்ந்திருக்கிறார். அங்கிருந்து அழுதபடி வீட்டுக்கு ஓடியிருக்கிறார். நடந்ததை போன் மூலம் வெளியூரில் இருந்த தன் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். இப்படித்தான் இந்த விவகாரம் சிந்துவின் குடும்பத்தினருக்குத் தெரிந்திருக்கிறது.
அதன் பின்பு சிந்துவின் அம்மா இது குறித்து ஜெயக்குமாரிடம் போய் நியாயம் கேட்டபோது, ‘நான் சிந்துவின் கழுத்தில் தாலி கட்டுகிறேன். தனிவீடு பார்த்துக் குடிவைக்கிறேன். இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்துகொண்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு வந்துபோகிறேன். உங்கள் குடும்பத்துக்கு என்னென்ன வசதிகள் வேண்டுமோ எல்லாம் செய்து தருகிறேன்’ என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அதை அவர்களும் நம்பினர்.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் வந்தது. அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் வேலைகளைக் கவனிக்க ஜெயக்குமார் போயிருந்தார். அதற்காக திண்டுக்கல்லில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கினார். அங்கேதான் சிந்துவையும் தங்க வைத்திருந்தார். அதையெல்லாம் அங்கே இருப்பவர்களிடம் இப்போது கேட்டால்கூட தெரியும்.
ஒவ்வொரு முறையும் சிந்துவிடம் நெருங்கிப் பழகும் முன்பு, சில மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் என்று ஜெயக்குமார் கூறியிருந்தாராம். அதன்படி தான் சிந்துவும் செய்திருக்கிறார். இப்படி பல முறை நெருக்கமான சந்திப்புகள் அரங்கேறியிருக்கின்றன.
ஆனால், பல மாதங்கள் ஆன பின்பும் திருமணப் பேச்சை எடுத்தாலே ஏதோ சொல்லி மழுப்பியிருக்கிறார் ஜெயக்குமார். இதனால் சிந்து குடும்பத்தினருக்கு சந்தேகம் வந்துவிட்டது. அதன்பிறகு அவருடன் நெருங்கிப் பழகியபோது, முன்னெச்சரிக்கையாகச் சாப்பிடும் மாத்திரையைச் சாப்பிடாமல் இருந்திருக்கிறார் சிந்து. கர்ப்பம் தங்கிவிட்டது. இந்த விஷயம் ஜெயக்குமாருக்கு தெரியவே கோபம் அடைந்தவர், ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கொடுத்து கருவைக் கலைக்கச் சொல்லியிருக்கிறார். சிந்துவின் அம்மாவும் மருத்துவமனையில் 80 ஆயிரம் ரூபாய் செலவானதாகச் சொல்லி, மீதிப் பணத்தைத் திருப்பி ஜெயக்குமாரிடம் கொடுத்திருக்கிறார். இதை நம்பிவிட்டார் ஜெயக்குமார். ஆனால், ‘குறிப்பிட்ட காலத்தைக் கடந்துவிட்டதால், இனி கலைத்தால் சிந்து உயிருக்கு ஆபத்து’ என்று ம்ருத்துவர்கள் தரப்பில் சொன்னதால், அவர்கள் பயந்து, கருவைக் கலைக்கவில்லை. இப்படித்தான் ஆண் குழந்தை பிறந்தது. அவர்களும் குழந்தைக்கு அப்பா ஜெயக்குமார் என்று பிறப்புச் சான்றிதழில் பதிய வைத்திருக்கிறார்கள். இடையில், சிந்துவின் அம்மாவுடன் ஜெயக்குமார் பேசிய ஆடியோ பேச்சுக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஜெயக்குமார் ஏமாற்றுகிறார் என்று தெரிந்த பிறகுதான், தேவையான ஆதாரங்களைச் சேகரித்திருக்கிறார்கள் அவர்கள்.
ஜெயக்குமார் கருவைக் கலைக்கச் சொன்னதுவரை அமைச்சரின் பார்வையில்தான் சிந்து இருந்தார். அதன் பின்பு பாதுகாப்புக் கருதி சிந்துவின் குடும்பத்தினரை தினகரன் ஆதரவாளர்கள் சிலர் கஸ்டடி எடுத்துவிட்டனர். இதற்கிடையே ஜெயக்குமாரும் இந்த விஷயத்தை மறந்துவிட்டார். குழந்தையும் பிறந்துவிட்டது.
அதன் பின்பு சிந்துவின் குடும்பத்தினருடன் சிலபல பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், எதிர்பார்த்தது நடக்கவில்லை என்பதால், இப்போது விஷயம் வெளியே வந்துவிட்டது.
எனினும், அமைச்சர் தரப்பினர் சிந்துவின் குடும்பத்தினரிடம் பேசிவிட்டார்கள். சீக்கிரமே, ‘எங்களுக்கும் அமைச்சருக்கும் தொடர்பு இல்லை’ என அவர்களே சொல்வார்கள். அரசியலில் எதுவும் நடக்கலாம்” என்று சொல்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.
(ஜூனியர் விகடன், 28.10.18 தேதியிட்ட இதழிலிருந்து)
Courtesy: Junior Vikatan