முறைகேடான பாலுறவு விவகாரம்: “அந்த ஆடியோ மார்பிங்” என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்!
வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று இரண்டு ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அவை அமைச்சர் ஜெயக்குமாருடன் ஒரு பெண் உரையாடுவது போன்று அமைந்திருந்தன. ஒரு ஆடியோவில், “ரெக்கமண்டேசனுக்காக உங்களைப் பார்க்க என் மகளை அழைத்து வந்தேன் இப்படிச் செய்துவிட்டீர்களே. இப்போது என் மகள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். கருவைக் கலைக்க பணம் தாருங்கள்” என்று பெண்குரல் கேட்க, “வந்து வாங்கிக்கம்மா” என்று அமைச்சர் ஜெயக்குமார் குரலையொத்த ஆண்குரல் கூறுகிறது.
மற்றொரு ஆடியோவில், “கருவைக் கலைக்கும் விஷயம் வீட்டு ஆண்ககளுக்குத் தெரிந்துவிட்டது. உங்களைப் பார்க்கணும் என்று சொல்கிறார்கள் அழைத்து வரவா?” என்று அந்த பெண்குரல் கேட்கிறது. “அதெல்லாம் வேண்டாம். நீங்கள் தனியாக வீட்டுக்கு வாங்கம்மா” என்று அமைச்சர் ஜெயக்குமார் குரலையொத்த ஆண்குரல் கூறுகிறது. “இல்லீங்க. நீங்க கலைப்பதோடு ஒதுங்கிக் கொள்வீர்கள். என் மகளுக்கு திருமணம் செய்யும் செலவு எல்லாம் இருக்கு” என்று பெண்குரல் சொல்ல, “போனில் அனைத்தையும் சொல்ல முடியாது. நேரில் நீங்க மட்டும் தனியாக வாங்க” என்கிறது ஆண்குரல்.
அமைச்சர் ஜெயக்குமார் குரல் போன்று அந்த ஆடியோவில் ஆண் குரல் இருப்பதோடு, அதனுடன், ஆகஸ்டு மாதம் ஆண் குழந்தை பிறந்தது போன்றும், அதில் தந்தை என்ற இடத்தில் ஜெயக்குமார் பெயரும், தாய் என்ற இடத்தில் ஒரு பெண்ணின் பெயரும் இருப்பது போன்றும் உள்ள மாநகராட்சி பிறப்புச் சான்றிதழ் ஒன்றும் காட்டப்படுவதால் அது பரபரப்புடன் வைரலானது.
இது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது கூறியதாவது:
அந்தக் கும்பல் கடுமையாக என்னை எதிர்ப்பதற்காக என் மீது அரசியல் காழ்புணர்ச்சியோடு ஒரு நட்சத்திர விடுதியில் நான் யாருடனோ இருப்பது போன்று மார்பிங் செய்து ஏற்கனவே வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் உலாவ விட்டனர். இது எனது கவனத்திற்கு வந்து சைபர் கிரைமில் புகார் அளித்து மூன்று பேரைக் கைது செய்து சிறையிலடைத்தோம்.
அதன் பின்னர் சிலகாலம் அடங்கி இருந்த அந்தக் கும்பல், அந்தக் குடும்பத்தை முழுமையான அளவிற்கு நான் எதிர்க்கின்ற காரணத்தினால் என்னை நேரடியாக எதிர்க்க திராணி இல்லாமல் வாய்ஸ் ஒன்றை ஆடியோ மார்பிங் செய்து போட்டுள்ளனர்.
இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதன் பின்னணியில் உள்ளவர்கள் சட்டத்திற்கு முன் பதில் சொல்ல வேண்டியவர்கள். சட்டப்படி அதனை எதிர்க்கொள்ள நானும் தயாராக இருக்கிறேன்.
ஏனென்றால் அதை வாட்ஸ்அப்பில், முகநூலில் பதிவு செய்தவர்கள் நிச்சயம் அந்தக் கும்பல் தான். ஏனென்றால் தனியார் தொலைக்காட்சிகள் சிலவற்றில் ஒரு மாதம் முன்னரே இது போன்ற ஆடியோ இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள் என்றால் எந்த அளவுக்கு இவர்கள் போலியாகத் தயாரிப்பதில் வல்லவர்கள் என்று பாருங்கள்.
அந்தக் கூட்டமே பிராடு, சீட்டிங் கூட்டம். இந்த சிறு நரிகளுக்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல. சிங்கக் கூட்டம் நாங்கள். எந்த ஒன்றையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். சட்டத்தின் முன் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். அதை அவர்களும் எதிர்கொள்ள வேண்டும். கண்டிப்பாக வழக்குத் தொடருவேன். போலீஸிலும் புகார் அளிப்பேன்.
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
“அந்த கும்பல், அந்த குடும்பம் என்று யாரை குற்றம் சாட்டுகிறீர்கள்?” என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “உங்களுக்கே தெரியும். உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி தேவையா? அது வெளிப்படையாகத் தெரியும். சசிகலா குடும்பம், தினகரனைச் சார்ந்தவர்கள். இவர்கள்தான் அந்த மாஃபியா கும்பல். இவர்கள் குடும்பத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன். எதிர்ப்பது என்றால் என்ன? ஒட்டுமொத்த கட்சிக்காரர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கிறேன் அவ்வளவுதான். அதற்காக என் மீது ஒரு அவதூறு பரப்பும் வகையில் இது போன்ற ஆடியோவை வெளியிடுகின்றனர். நிச்சயமாக அதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்” என்றார் ஜெயக்குமார்.