பாடகர் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் ‘கரிமுகன்’: 26ஆம் தேதி வெளியாகிறது  

விஜய் டிவியின் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் “சின்ன மச்சான் செவத்த மச்சான்” என்ற பாடலை தன் மனைவி ராஜலட்சுமியுடன் இணைந்து பாடி முதல் பரிசை வென்றார் பாடகர் செந்தில் கணேஷ். இந்த பாடலை எழுதியவர் செல்ல தங்கையா. அதற்குப்பிறகு இந்த பாடல் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது…யூ-டியூப்பில் இன்று வரை 13 மில்லியன் பார்வையாளர்கள் இதை கண்டு களித்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் பிரபலமான இந்த குழு ‘கரிமுகன்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்கள்.. இப்படத்தில் செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். காயத்ரி என்ற கேரளப் பெண் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் யோகிராம், பாவாலட்சுமணன், விஜய் கணேஷ், வின்செண்ட் ராய், தீபாஸ்ரீ ரா.கா.செந்தில் ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் இயக்குனர் செல்ல தங்கையா நடிக்கிறார்.

ஏ.விமல் புரொடக்சன்ஸ் சார்பாக டி.சித்திரைச்செல்வி, எம்.செல்வமணி, செந்தூர் பிக்சர்ஸ் எஸ்.கார்த்திகேயன்  ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார் செல்ல தங்கையா.

ஒளிப்பதிவு  –   எழில் பூஜித்

எடிட்டிங்  –   பன்னீர் செல்வம், கேசவன்

கலை  –    நித்தியானந்த்

நடனம்    –   சங்கர்.ஆர்

ஸ்டண்ட்  –   திரில்லர் முருகன்

தயாரிப்பு நிர்வாகம்  –  சுப்ரமணியம்

இப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சம்பவம் பற்றி இயக்குனர் செல்ல தங்கையா கூறுகையில், “கரிமுகன்’ படத்திற்காக திருக்கோளக்குடி என்ற கிராமத்தில் உள்ள பெரிய மலையில் ஒரு காதல் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அமைதியான அந்த காட்டுப் பகுதியில் திடீரென்று ஸ்பீக்கர் சத்தம். நாங்கள் மைக்கில் பேசிய சத்தம்  கேட்டு  தேனீக்கள் படக்குழுவினரை துரத்தித் துரத்தி கொட்ட ஆரம்பித்துவிட்டன.

தேனீக்கள் கொட்டியதால் நான் உட்பட 15 பேர் மயக்க நிலைக்குச் சென்றுவிட்டோம். உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்ட அனைவரையும் அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்துவிட்டு. மறுநாள்  பக்கத்தில் இருந்த வேறொரு மலையில் படப்பிடிப்பை முடித்தோம்.

படம் இம்மாதம் 26ஆம் தேதி வெளியாக உள்ளது”  என்றார் இயக்குனர்.