தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது ஏன்?: தனுஷ் விளக்கம்!
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வடசென்னை’. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், ராதாரவி, சீனு மோகன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம், வருகிற (அக்டோபர்) 17ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது. இதனையொட்டி இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
தனுஷ் பேசுகையில், “மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த படத்தில் நடித்ததை நினைக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வரும் 17ஆம் தேதி ரிலீஸாகும் ‘வடசென்னை’ உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும். படத்தில் அமீர் சார் வேற லெவல்ல நடிச்சிருக்கார். அவருக்கு என் வாழ்த்துகள். மேலும், உடன் நடித்த ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட அனைவருமே சூப்பரா நடிச்சிருக்காங்க. சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு பெரிய பிளஸ். பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளன .வேல்ராஜ் சார் அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இரவு பகல் பாராமல் படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
“நீங்கள் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதற்கான காரணம் என்ன?” என்று தனுஷிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த தனுஷ், “ரெண்டு பேருமே நிறைய தப்பு பண்ணுவோம். ஆனால், எதுவும் உள்ளே வராத மாதிரி பார்த்துப்போம். அது வேற, இது வேற என்பதில் தெளிவாக இருப்போம். இருவரும் நல்ல புரிதலுடனும், மன்னிக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருக்கிறோம்.
ஒருவருடன் எதற்காக நட்பில் இருக்கிறோம் என்பது ரொம்ப முக்கியம். என்னுடைய நல்லது – கெட்டதுகளிலும் சரி, கஷ்ட – நஷ்டத்திலும் சரி, மேலே – கீழே இருந்தபோதும் சரி, என்னுடன் ஒரே மாதிரியாகப் பழகுவார். அந்த மாதிரி ஆட்களை மிஸ் பண்ணிட்டீங்கன்னா, நீங்கதான் முட்டாள். அந்த வகையில் அவர் எனக்கு ப்ரதர். இயக்குநரே ப்ரதராகவும் அமைந்த விஷயத்தில், நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.
நான் நினைத்ததைவிட எனக்கு நல்லதொரு ப்ளாட்ஃபார்ம் அமைத்துக் கொடுத்தவர் வெற்றிமாறன். எனக்குனு நிறைய பேரு இருக்காங்கன்னு நான் நினைக்கலாம். ஆனால், எனக்கு ஒரு பிரச்சினை வரும்போது, அவர் மட்டும்தான் என் கண் முன்னாடி நிற்பார். எனவே, எந்த வகையிலும் இழக்கக் கூடாத மனிதர் அவர்” என்றார் தனுஷ்.
‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தனுஷ். தற்போது ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார். தனுஷே இதில் ஹீரோவாகவும் நடிக்கிறார். “ரஜினிகாந்த் நடிக்கும் படம் இயக்குவீர்களா?’ என்ற கேள்விக்கு பதிலளித்த தனுஷ், “நானா வேண்டாம்னு சொல்றேன். கிடைக்கணும்ல. கிடைச்சா ஓகே. அது மாதிரி வாய்ப்பெல்லாம் அமையணும். அது ஒரு ஆசீர்வாதம். எந்தெந்த அரிசியில் யார் யார் பெயர் எழுதியிருக்கிறதோ, அது அவங்கவங்களுக்கு போய்ச் சேரும். எதிர்காலத்தில் அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால், அதைவிட வேறென்ன வேண்டும்?” என்றார்.
நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் பேசுகையில், “வடசென்னை படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. எந்த ஒரு காட்சியும் நீக்கப்படவில்லை. முதல் பாகத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் மற்றும் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவரும்.. அந்தந்த காலகட்ட காட்சிகளுக்கு ஏற்ப தனுஷ் அருமையாக நடித்துள்ளார். அவர் பேச்சு, நடிப்பு, ஜாடை.என அனைத்திலும் அசத்தியுள்ளார். கலை இயக்குனர் ஜாக்கிங், ஜெயில் செட் மற்றும் வடசென்னை செட் மிகப் பிரமாதமாக உருவாக்கியுள்ளார். அவருக்கு மிகப்பெரிய நன்றி. ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, பவன், சமுத்திரக்கனி, கிஷோர் அற்புதமாக நடித்துள்ளார்கள். மேலும், அமீரும் சமுத்திரக்கனியும் இயக்குனர்களாகவும் எனக்கு சிறிது உறுதுணையாக இருந்தார்கள்.. இப்படத்துக்காக உழைத்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்” என்றார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், “இந்த படத்தில் வாய்ப்பளித்த வெற்றிமாறனுக்கு நன்றி மேடையைப் பார்க்கும்போது ‘காக்கா முட்டை’ படத்தின் விழா ஞாபகத்துக்கு வருகிறது. ‘வடசென்னை’ படத்தில் ஒரு இனிமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். தனுஷுடன் முதன்முதலாக ஜோடியாக நடித்ததில் மகிழ்ச்சி. படத்தின் முதல் சீனில் என்னைப் பார்த்தவுடன் லவ் பண்ணுவார் தனுஷ். படத்தில் அனைவருமே நன்றாக. நடித்துள்ளனர்” என்றார்.
நடிகரும் இயக்குனருமான அமீர் பேசுகையில், “வடசென்னை’ படத்தை ஒரு ரசிகனாகப் பார்த்தேன். படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. தனுஷின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. வெற்றிமாறன் ஒரு தரமான படத்தினை இயக்கியுள்ளார்.ஆண்ட்ரியாவை ‘தரமணி’ போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம் .இந்த படத்தில் அதையும் தாண்டி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் நடித்த அனைவருமே மிகவும் அருமையாக நடித்துள்ளனர் இந்த படத்தின். சக்சஸ்மீட்டில் மீண்டும் சந்திக்கிறேன்” என்றார்.
நடிகை ஆண்ட்ரியா, நடிகர்கள் டேனியேல் பாலாஜி, பவன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பேசினார்கள்.