நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி கோரி காவல் நிலையம் முன் தர்ணா: வைகோ கைது
நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலை போலீசார் இன்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்து, சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நக்கீரன் கோபாலைச் சந்திக்க சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “நான் வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலைச் சந்திக்க வந்தேன். முதலில் நான் அவரைச் சந்திக்க வேண்டும். காவல்துறையையும் நீதித்துறையையும் களங்கப்படுத்தி தகாத வார்த்தைகளில் பேசிய பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து வைத்தார்.
நக்கீரன் கோபால் ஏற்கெனவே சிறை சென்றவர். அவர் இதற்கெல்லாம் பயப்பட மாட்டார். ஆனால் சட்டத்தை, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் விதத்தில் நெருக்கடி காலத்தை போல ஆளுநர் உத்தரவின்படி காவல்துறை செயல்படுகிறது. விமான நிலையத்தில் பயணிகள் புறப்படத் தயாராக இருக்கும்போது மிரட்டி கோபாலை கைது செய்துள்ளனர். என்னை அனுமதிக்காவிட்டால் காவல்துறை மீது அவமதிப்பு வழக்கு தொடருவேன்” என தெரிவித்தார்.
இதையடுத்து, கோபாலை சந்திக்க தன்னை அனுமதிக்கக் கோரி தர்ணாவில் ஈடுபட்ட வைகோவை போலீஸார் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “சட்டப்படி அனுமதி கேட்டும் காவல்துறை என்னைக் கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது” என தெரிவித்தார்.