நக்கீரன் கோபால் கைதுக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “பொதுநலனில் கொண்டுள்ள அக்கறையினால் பல்வேறு பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து வெளிப்படுத்துவதில் தணியாத ஆர்வமுடன் செயலாற்றிவரும் மூத்த பத்திரிகையாளரும், நக்கீரன் இதழின் ஆசிரியருமான நக்கீரன் கோபாலை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் அதிமுக அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான தொடர் ஒன்றை வெளியிட்டுவரும் நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியரை, சர்வாதிகார – பாசிச மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்தின் கழுத்தில் ஏறி அமர்ந்து சவாரி செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசும், தமிழக ஆளுநரும் எண்ணுவது, தமிழ்நாட்டில் நடப்பது பாஜக ஆட்சியே என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.
அதிமுக ஆட்சியின் அனைத்து வகை ஊழல்களுக்கும், சட்டத்திற்குப் புறம்பாக முட்டுக் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசும், மாநிலத்தில் உள்ள ஆளுநரும் எடப்பாடி பழனிசாமி அரசைப் பயன்படுத்தி, ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் வேலையில் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது.
பேராசிரியை நிர்மலாதேவி விஷயத்தில் நடப்பது எல்லாமே மர்மமாக இருக்கிறது என்று நாட்டுமக்கள் உணர்கிறார்கள். அவர் புகார் தெரிவித்தவுடன் ஆளுநரே தன்னிச்சையாக ஒரு கமிட்டியை நியமித்தார். சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும், ஆளுநர் நியமித்த ஒருநபர் கமிட்டியும் விசாரித்தது. வழக்கத்திற்கு மாறாக பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று அதிமுக அரசு தரப்பே தொடர்ந்து வாதாடி வருகிறது.
இப்போது அந்தப் பேராசிரியை பற்றி எழுதிய நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பேராசிரியை விவகாரத்தில் எதை மறைக்க இப்படி சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு அதிமுக அரசும், ஆளுநர் மாளிகையும் நடந்து கொள்கிறது என்பது யாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.
ஆளுநர் கொடுத்த புகாரின் பேரில், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தையே கொச்சைப்படுத்திப் பேசிய ஹெச்.ராஜாவைக் கைது செய்யவில்லை. போலீஸ் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் ஆளுநரே அவரைச் சந்தித்துப் பேசுகிறார்.
இன்னொரு பக்கம் ‘பாசிச பாஜக’ என்றதால் மாணவி சோபியா கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை பற்றி, தொடர் எழுதினால் நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கைது செய்யப்படுகிறார். என்னதான் நடக்கிறது தமிழகத்தில்? தமிழ்நாடு என்ன ஜனநாயக நாடா என்றே கேட்கத் தோன்றுகிறது.
ஊழல் அதிமுக அரசும், பாசிச பாஜக அரசின் முகவராக இருக்கும் ஆளுநரும் தமிழ்நாட்டில் ஒரு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை அமல்படுத்தி, பத்திரிகைச் சுதந்திரத்திற்கு பகிரங்கமான அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்.
பொம்மை அரசை வைத்துக்கொண்டு தங்கள் சித்தாந்தங்களுக்கு வேண்டாதவர்களை கைது செய்யத் தூண்டும் மத்திய பாஜக அரசும், மாநில ஆளுநரும் இந்த அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு நேரடியாகவே பாஜக வழிகாட்டுதலில் மாநில அரசை நடத்தலாம். அதை விடுத்து விட்டு, கொல்லைப்புற வழியாக முகமூடி அணிந்துகொண்டு தங்கள் கட்டளைகளை நிறைவேற்ற இந்த அரசைப் பயன்படுத்துவது வெட்கக்கேடானது.
பொறுப்பான மாநில ஆளுநர் பதவியில் இருப்பவர் மறைமுகமாக அரசியல் செய்ய நினைக்கும்போது, விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும். அப்படி பொறுத்துக்கொள்ள இயலாமல், முதல்வரை ராஜ்பவனுக்கே அழைத்து, நக்கீரன் கோபாலை கைது செய்யச் சொல்லியிருப்பது ஒரு மாநில ஆளுநருக்கு – அதுவும் அரசியல் சட்டப் பதவியை வகிப்பவருக்கு அழகா?
ஆகவே, கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கினை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலை இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
அருப்புக்கோட்டை, கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் வற்புறுத்தல் செய்தது தொடர்பாக ஆடியோ வெளிவருவதற்கு முன்னரே இத்தகைய சம்பவத்தை வெளியுலகத்திற்கு தெரிவித்தது நக்கீரன் பத்திரிகையாகும். அதன் பிறகு அது தொடர்பான வழக்கு விசாரணை சம்பந்தமாக பல்வேறு கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு முறையான விசாரணை நடைபெற வேண்டுமென நக்கீரன் பத்திரிகை எழுதி வந்தது. இது தொடர்பாக ஆளுநர் அலுவலகத்திலிருந்து புகார் வந்த அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வழக்குப் பதிவு செய்வதற்கு முன்னரே அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உயர் பதவிகளில் உள்ளவர்கள் மீதான புகார்கள், குற்றச்சாட்டுகள் எழும்போது அதை வெளியுலகத்திற்கு கொண்டு வருவதும், அதன் மீது முறையான நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவதும் பத்திரிகை சுதந்திரத்தின் உயிர் நாடியாகும். அதைப் பறிக்கும் வகையில் இன்று நக்கீரன் கோபாலை கைது செய்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இந்தப் பிரச்சினையில் ஆளுநர் பெயரும் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், பாரபட்சமற்ற சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே வலியுறுத்தியிருக்கிறது. உயர் பொறுப்புகளில் இருப்போர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் வரும்போது, நியாயமான விசாரணை மூலம் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய நிலையில், குற்றச்சாட்டுகளை முன்வைப்போர் மீது இத்தகைய தாக்குதல்கள் தொடுப்பது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும். எனவே, ஆளுநர் தமிழகத்திலிருந்து திரும்ப அழைக்கப்பட வேண்டுமென்கிற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.
மாணவிகளைப் பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பிரச்சினையில் உயர் பொறுப்புகளில் இருக்கிற அதிகாரிகள் மற்றும் அரசியல் செல்வாக்குள்ளவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலரும் வற்புறுத்திய நிலையில் இதற்கு நேர்மாறாக, சிபிசிஐடி போலீஸார் நிர்மலா தேவி மற்றும் அவருக்கு கீழே பணியாற்றிய இரண்டு துணை பேராசிரியர்களோடு இந்த வழக்கை முடித்துவிட்டிருப்பது எண்ணற்ற கேள்விகளுக்கு இடமளித்துள்ளது. இந்நிலையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது பல உண்மைகளை மூடி மறைக்க மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சதியாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் உரிமைகளுக்காக போராடுகிற பல அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, அலைக்கழிக்கப்படுவது, சிறையில் அடைக்கப்படுவது அன்றாட நடவடிக்கைகளாக மாறியுள்ளது. மேலும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய தாக்குதல்களின் மூலம் தமிழக மக்களின் உரிமைப் போராட்டங்களை முடக்கிவிட நினைப்பது பகல் கனவாகவே முடியும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எனவே, கைது செய்யப்பட்ட நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேலும் தமிழக அரசின் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்த்து அனைத்து கட்சிகளும், பொதுமக்களும் வலுவான கண்டனக் குரலெழுப்ப வேண்டும்” என பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக ஆளுநர் அலுவலகம் மூலம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவி குறித்து செய்தி வெளியிட்டதற்காக ஆளுநர் அலுவலகத்தில் இருந்து புகார் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது அப்பட்டமான அதிகார வரம்பு மீறலாகும். ஆளுநர் அலுவலகத்திலிருந்து பத்திரிகையாளர் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்படுவது இந்தியாவில் வேறெங்குமே நடந்ததாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இப்படி ஒரு மிக மோசமான முன்னுதாரணம் ஏற்படுத்தப்பட்டிருப்பது வேதனைக்குரியது.
பல்கலைகழகத் துணைவேந்தர் நியமனங்களில் முறைகேடு நடந்ததாக ஆளுநர் கூறியிருந்தார். துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் கொண்ட ஆளுநரே அப்படி சொன்னது எல்லோருக்கும் வியப்பளித்தது. அது குறித்த விவரங்களை வெளியிட வேண்டுமென்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதை திசை திருப்புவதற்காகவே இப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருகிறதோ என்ற ஐயம் நமக்கு எழுகிறது.
தமிழ்நாட்டில் ஊடகங்களுக்கு ஆளும் தரப்பினரால் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து நெருக்கடிகள் தரப்படுகின்றன. இதைப் பற்றி பிரதமரிடமே சென்று ஊடகவியலாளர்கள் முறையிட்டுள்ளனர். இந்தச் சூழலில் பத்திரிகை சுதந்திரத்தை நெரிக்கும் செயலில் ஆளுநர் அலுவலகமே ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது. இது கருத்துரிமைக்குப் பேராபத்தாகும். இதை எதிர்த்து அனைத்துக் கட்சிகளும் குரலெழுப்ப முன்வர வேண்டும் என்று அழைக்கிறோம். நக்கீரன் கோபாலை உடனே விடுதலை செய்ய வேண்டும்” என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.