கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு: வீரப்பன் கூட்டாளிகள் 9 பேர் விடுதலை
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரில், பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு பண்ணை வீடு உள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, இந்த வீட்டில் ராஜ்குமார் தங்கியிருந்தபோது வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்தப்பட்டார். இது தொடர்பாக தாளவாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு கோவை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து தமிழக – கர்நாடக அரசின் சார்பில் தூதுவர் அனுப்பப்பட்டு, வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதன் தொடர்ச்சியாக 108 நாட்களுக்குப் பிறகு ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் வீரப்பன், அவருடைய நண்பர்கள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, மல்லு, மாறன், கோவிந்தராஜ் என்கிற இனியன், அன்றில் என்கிற ஏழுமலை, செல்வம் என்கிற சத்தியா, அமிர்தலிங்கம், பசுவண்ணா, நாகராஜ், புட்டுசாமி, கல்மண்டிராமா, ரமேஷ் ஆகிய 14 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா ஆகியோர் போலீஸாரால் கடந்த 2004ஆம் ஆண்டு கொல்லப் பட்டனர். மல்லு என்பவர் இறந்து விட்டார். ரமேஷ் என்பவர் தலைமறைவாக உள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறந்தவர்கள் மற்றும் தலைமறைவாக உள்ள ரமேஷை தவிர மீதி உள்ள 9 பேரும் வழக்கின் விசாரணைக்கு கோபி நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். அரசு தரப்பில் மொத்தம் 42 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். 52 ஆவணங்கள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட 31 பொருட்களை சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் ஒப்படைத்திருந்தனர்.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளிலும் இந்திய படைக்கலன் சட்டப்படியும் வெடிபொருள் சட்டப்படியும் இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது.
கடத்தல் வழக்கு விசாரணையின்போது 47 பேர் சாட்சியம் அளித் துள்ளனர். 10 நீதிபதிகள் வழக்கை விசாரித்துள்ளனர். வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே நடிகர் ராஜ்குமார், அவரு டைய மனைவி பருவதம்மாள் ஆகியோர் இறந்து விட்டனர்.
18 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி மணி இன்று (செப்.25) தீர்ப்பளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார், அவரு டைய மனைவி பருவதம்மாள் ஆகியோர் விசாரிக்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை அரசு தரப்பில் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பல உண்மைகள் அரசு தரப்பில் நிரூபிக்கப் படவில்லை. ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட முறை சரியல்ல. குற்றவாளிகள் குறித்து அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை.
அரசு தூதுவராகச் சென்ற நக்கீரன் கோபால், நெடுமாறன் உள்ளிட்ட பலரை போலீஸார் விசாரிக்கவில்லை. தமிழக, கர்நாடக மாநில அரசுகள் வழக்குக்கான ஆதாரங்களை சமர்ப்பிப்பதில் அக்கறை காட்டவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் வீரப்பனுக்கும் எந்தவிதமான தொடர்பு என்பதை நிரூபிக்க எந்த ஆதாரத்தையும் குறிப்பிடவில்லை. எனவே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 9 பேரையும் விடுதலை செய்கிறேன்.
இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தார்.