சாமி ஸ்கொயர் – விமர்சனம்
திருநெல்வேலியில் போலீஸ் அதிகாரி ஆறுச்சாமியும், தாதா பெருமாள் பிச்சையும் மோதிக்கொண்டால் அது ‘சாமி’. ஆறுச்சாமியின் மகனான போலீஸ் அதிகாரி ராம்சாமியும், பெருமாள் பிச்சையின் மகனான தாதா ராவண பிச்சையும் மோதிக்கொண்டால் அது ‘சாமி ஸ்கொயர்’.
தொலைக்காட்சி நெடுந்தொடரில் நடிக்கும் ஒரு நடிகை திடீரென மக்கர் பண்ணத் தொடங்கினால், அவரை நீக்கிவிட்டு, ‘அவருக்குப் பதிலாக இவர்’ என்று வேறொரு நடிகையை காட்டி நெடுந்தொடரைத் தொடர்வார்களே… அதுபோல, ‘சாமி’ படத்தில் நாயகியாக நடித்த திரிஷா இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதால், அவருக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து ‘சாமி’ படத்தின் சில காட்சிகளை ரீஷூட் செய்து, அக்காட்சிகளுடன் இப்படத்தைத் தொடங்குகிறார்கள்.
திருநெல்வேலி போலீஸ் அதிகாரி ஆறுச்சாமி (விக்ரம்). அவருடைய மனைவி புவனா (ஐஸ்வர்யா ராஜேஷ்). பலம் பொருந்திய தாதா பெருமாள் பிச்சை (கோட்டா சீனிவாசராவ்). இந்த தாதாவை யாருக்கும் தெரியாமல் செங்கல் சூளைக்குள் போட்டு உயிரோடு எரித்துக் கொன்றுவிடுகிறார் ஆறுச்சாமி.
ஆறுச்சாமிக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படும் தன் தந்தை பெருமாள் பிச்சை உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதை தெரிந்துகொள்வதற்காக, இலங்கையில் வசிக்கும் அவரது மகன் ராவண பிச்சை (பாபி சிம்ஹா) தனது 2 அண்ணன்களோடு திருநெல்வேலிக்கு வருகிறார். தன் தந்தையை போலீஸ் அதிகாரி ஆறுச்சாமி உயிரோடு எரித்துக் கொன்றதை தெரிந்துகொள்கிறார். இதற்கு பழி தீர்ப்பதற்காக தன் அண்ணன்களோடு சேர்ந்து ஆறுச்சாமியையும், அவரது நிறைமாத கர்ப்பிணி மனைவியான புவனாவையும் வெட்டி வீழ்த்துகிறார். இறந்துகொண்டிருக்கும் புவனாவுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தையை பார்த்துவிட்டு உயிர் விடுகிறார் ஆறுச்சாமி.
“28 ஆண்டுகளுக்கு பிறகு” என்றொரு கார்டு போடுகிறார்கள். இப்போது ஆறுச்சாமியின் மகனான ராம்சாமி (இன்னொரு விக்ரம்) ஐஏஎஸ் தேர்வு எழுதிவிட்டு, ரிசல்ட்டுக்காக காத்திருப்பதோடு, மத்திய அமைச்சரும் தென்காசி தொகுதி எம்.பி.யுமான பிரபுவிடம் மேலாளராகவும் பணியாற்றி வருகிறார். பிரபுவின் மகளான கீர்த்தி சுரேஷூக்கும், ராம்சாமிக்கும் முதலில் மோதல், பிறகு காதல் என்பதாக கதை ஓடுகிறது.
இதற்கிடையே, ஐஏஎஸ் தேர்வு எழுதிய ராம்சாமி திடுதிப்பென ஐபிஎஸ் ஆக மாறி, திருநெல்வேலி போலீஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்படுகிறார். நெல்லை மண்ணில் போலீஸ் அதிகாரி ராம்சாமியும், தாதா ராவண பிச்சையும் சந்திக்கிறார்கள். சவால் விடுகிறார்கள். சவடால் அடிக்கிறார்கள். இவர்களுக்கு இடையிலான மோதல் எப்படியெல்லாம் விரிந்து ராஜஸ்தான் பாலைவனத்தில் முடிவடைகிறது என்பது மீதிக்கதை.
இந்த முதுமைப் பருவத்திலும் விக்ரம் எப்படி தன் உடம்பை கட்டுக் குலையாமல் வைத்திருக்கிறார் என்பது பெரிய ஆச்சரியம். படம் முழுக்க அவரது ஆதிக்கம்தான். பல இடங்களில் மிடுக்கு காட்டி மிரட்டியிருக்கிறார். ஆனால், சுவாரஸ்யம் இல்லாத கதை, வலுவற்ற திரைக்கதை, அடுத்தடுத்து எளிதில் ஊகிக்கக் கூடிய காட்சிகள் எல்லாம் சேர்ந்து அவரது முயற்சிகளை விரயமாக்குகின்றன..
முதல் விக்ரமின் மனைவியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு ஓ.கே. என்றாலும், கதாபாத்திரத்துக்கு அவர் கொஞ்சம்கூட பொருந்தவில்லை. நல்லவேளையாக, படத்தில் சிறிது நேரம் மட்டுமே வந்துபோகிறார் என்பது பெரிய ஆறுதல்.
கீர்த்தி சுரேஷ், கொடுத்த பாத்திரத்துக்கு குறை வைக்காமல் நடனம் ஆடுகிறார். விக்ரமை நினைத்து ஏங்குகிறார். ஆனால் படம் முழுக்க விக்ரம் முறைப்பாகவே திரிவதால் கீர்த்தி சுரேஷூடனான காதல் காட்சிகள் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை..
சூரியின் பாவனை, பேச்சு, நடிப்பில் எந்த வித்தியாசமும் இல்லை. காமெடி என்ற பெயரில் தப்பு தப்பாக ஆங்கிலம் பேசியும், காட்டுக் கூச்சல் போட்டு, அமைச்சரின் மச்சானாக வெட்டி அலப்பறை செய்தும் பார்வையாளர்களை ஓவராக வெறுப்பேற்றுகிறார். ஒருசில இடங்களில் மட்டும் கைதட்டல் பெறுகிறார்.
வில்லனாக வரும் பாபி சிம்ஹா, கடைசி வரை விக்ரமுக்கு போட்டியாக விறைப்பாக நடிக்கிறார். ஆனால், தனித்துவம் இல்லாமல் ரஜினியின் வில்லத்தனத்தை நகலெடுத்து வெளிப்படுத்துவது அயர்ச்சி.
தனக்கே உரிய விறுவிறுப்பு, வேகம், ஆக்சன் என ‘சாமி’ படத்தின் துடிப்பை முழுமையாக கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஹரி. ஆனால், குடும்பப் பின்னணி கதை ஓட்டம் தொடங்கி, காவல்துறை திருப்புமுனை வரை ஹரியின் முந்தைய படங்களின் தழுவல் மேலோங்குகிறது. தவிர, திருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் வில்லன் மற்றும் அவரது சகோதரர்கள் பகுதிகளில் பெரிதாக இல்லை. இதுவும் படத்தின் சுவாரசியத்தை குறைத்துவிடுகிறது. பலரை ஒரே அடியில் வீழ்த்துவது, கார்கள் அந்தரத்தில் பறப்பது என மாஸ் ஹீரோயிஸம் காட்டுகிற பழைய பாணியிலேயே கதை நகர்வதால் ஒருகட்டத்தில் பார்வையாளர்கள் சோர்வடைகின்றனர்.
ஹரி படங்களில் பெரிதாக லாஜிக் பார்க்க முடியாதுதான். ஆனாலும், திடீரென வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர், ஒரு மாவட்டத்தில் பெரிய தாதாவாகி, பணம், ஆள் கடத்தல், தந்தைக்கு சிலை வைப்பது என ரவுடித்தனம் செய்வதை அத்தனை போலீஸாரும் கைகட்டி வேடிக்கை பார்ப்பது என ஒரேயடியாக பூசுற்றுகிறார். நல்லவனுக்கு ‘ராம்’ என்றும், கெட்டவனுக்கு ‘ராவணன்’ என்றும் பெயர் சூட்டியிருப்பதன் மூலம், தமிழர் உணர்விலிருந்து ஹரி எவ்வளவு தூரம் விலகியிருக்கிறார் என்பது வெளிப்படை.
தேவி ஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் ஓ.கே. ரகம் தான். ஆனால் அவரது பயங்கரமான பின்னணி இசை காது ஜவ்வுகளைக் கிழிக்கிறது. அதிலும், ஏதோ ராமாயண காவியத்துக்கு இசையமைப்பதாக நினைத்துக்கொண்டு, சண்டைக் காட்சிகளின்போது “ராம் ராம் ராவணா ராவணா” என குரல் ஒலிக்கச் செய்திருப்பது கொடுமை.
‘சாமியின் வேட்டை தொடரும்’ என்ற பயமுறுத்தலுடன் படம் முடிகிறது. இது என்ன சோதனை என்ற சோர்வுடன் பார்வையாளர்கள் திரையரங்கை விட்டு வெளியேறுகிறார்கள்.
‘சாமி ஸ்கொயர்’ – விக்ரம் ரசிகர்களுக்கு பிடிக்கும்!