“அம்பேத்கரின் தேரை நான் முன்னோக்கி இழுத்துச் செல்வேன்!” – இயக்குநர் பா.இரஞ்சித்

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், “பரியேறும் பெருமாள்” இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசியதாவது:

ஒரு தத்துவம் என்பது நமக்கு முன்னால் உறுதியாக வாழ்ந்தவர்களில் இருந்தே பிறக்கிறது. அப்படி எனக்கு முன்னோடியாக புரட்சியாளர் அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார். அவருடைய கனவு என்பது மனித சமூகத்தின் மாண்பை மீட்டெடுப்பதாக மட்டுமே இருந்தது. எனக்கு அம்பேத்கரின் துயரமான நாட்கள் தான் எப்போதும் நினைவில் இருக்கும். அவர் ஒரு விசயத்தை வேதனையோடு சொன்னார். ‘நான கஷ்டப்பட்டு ஒரு தேரை இழுத்து வந்து ஒரு இடத்தில் நிறுத்தி இருக்கிறேன். தயவுசெய்து அதைப் பின்னோக்கி இழுத்து விடாதீர்கள்’ என்று சொன்னார். நிச்சயமாக அந்தத் தேரை நான் முன்னோக்கி இழுத்துச் செல்வேன். அதற்கான ஆரம்பம் தான் இந்த “பரியேறும் பெருமாள்” படம்.

எனக்கிருக்கிற வாய்ப்புகளில் தொடர்ந்து மனித சமூகத்திற்கு இடையே உள்ள முரண்களை உடைக்கிற வேலையை செய்வேன். இதனால் என் மீது வைக்கப்படுகிற விமர்சனங்களையும் தாண்டி, சில வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது.

இந்த படம் உருவாவதற்கு நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் இயக்குநர் ராம் சார். எனக்கு அவரையும் மாரி செல்வராஜையும் பார்க்கும்போது பொறாமையாக இருக்கும். இப்படி ஒரு அப்பா – மகனை இங்கு யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். காரணம் ராம் சார், மாரி செல்வராஜை கண்டெடுத்து உருவாக்கியது மிகவும் நெகிழ்ச்சியானது.

என்னால் முடிந்தவற்றை இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் சிறு வயது முதலே எனக்குண்டு. அந்தஎண்ணம் தான் இப்போதும் என்னை இயக்குகிறது. சில நேரங்களில் குடும்பம், பொருளாதாரம் குறித்த யோசனை எழுந்தாலும், நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நமக்கு அளிக்கும் ஆதரவு தான் நம்மை இயங்க வைக்கிறது. நான் போகும் பாதை சரியா என நான் யோசிக்கும் போதெல்லாம்,  என் மனைவி அனிதா தான் எனக்கு ஊக்கமளிப்பார். ‘நாம் எங்கிருந்து வந்தோம் என்று நமக்குத் தெரியும். இப்போதிருப்பது இல்லாமல் போனாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை. நீ செய்யும் வேலையை நிறுத்தாதே’ என தைரியம் கொடுப்பார். அவர் கொடுத்த தைரியம் தான் இந்த “பரியேறும் பெருமாள்” திரைப்படம்.

கதிர், ஆனந்தி, யோகிபாபு, லிஜீஸ் என படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக பணி புரிந்திருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக இந்தப் படம் எனக்கு முழு திருப்தியை கொடுத்திருக்கிறது.

யாரையும் எதிர்த்து நின்று பேசுவது என் நோக்கமல்ல. அவர்களது கையைக் கோர்த்து பக்கத்தில் அமர்ந்து உரையாடுவதைத் தான் நான் விரும்புகிறேன். அந்த வேலையை “பரியேறும் பெருமாள்” நிச்சயமாக செய்யும். அந்த அளவிற்கு மாரி செல்வராஜ் சமரசமில்லாத ஒரு சினிமாவை உருவாக்கித் தந்திருக்கிறார். சந்தோஷ் நாரயணன் இசை, படத்திற்கு மிக முக்கியமான தூணாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் எனக்குப் பிடித்த, நான் நம்புகிற சினிமாவாக “பரியேறும் பெருமாள்” வந்திருக்கிறது.

இவ்வாறு பா.இரஞ்சித் பேசினார்.

p6

இயக்குநர் ராம் பேசியதாவது:

எனக்கு ஒரு கவிதையில் நான் வாசித்த காட்சி ஞாபகம் வருகிறது. ஒரு தனித்த பனிச்சாலை. ஒரு ஆளற்ற சாலையில் நீள அங்கி போட்ட ஒரு மனிதர் வருகிறார். அவரின் கையில் ஒரு காயப்பட்ட பறவை இருக்கிறது. இரவும் பகலும் அது அழுதுகொண்டே இருக்கிறது. அந்தக் காயப்பட்ட பறவை ஒரு குழந்தையைப் போல இருக்கிறது. அந்த நீள அங்கி போட்ட மனிதர் தான் பா.இரஞ்சித். அந்த காயப்பட்ட பறவையை காலமெல்லாம் அவர் சுமந்து தான் ஆக வேண்டும். அது அவருக்கு விதிக்கப்பட்ட சாபம்.

மாரிசெல்வராஜ், ஒரு வாழ்வியலை, வலியை, வாழ்க்கையைப் பதிய வைத்திருக்கிறார். திருநெல்வேலி என்ற ஊரையும் எனக்கு அறிமுகப்படுத்தியவர் மாரி செல்வராஜ். என் பாட்டன், அப்பன் வாழ்ந்த அந்த திருநெல்வேலி மண்ணில் உள்ள வீட்டில் என்னையும் என் மகனையும் அமர வைத்தவர் மாரி செல்வராஜ். தாமிரபரணி கலவரத்தில் கொல்லாமல் விடப்பட்ட கூழாங்கல் அவர். ‘இயக்குநர் ராமின் உதவி இயக்குநர் மாரிசெல்வராஜ்’ என்பதைவிட, ‘மாரி செல்வராஜின் இயக்குநர் ராம்’ என்று அடையாளப்படும் நாளை எதிர்பார்க்கிறேன்.

கதிருக்கு இந்த படத்திற்குப் பிறகு கமர்ஷியல் ஹீரோவிற்கான அந்தஸ்து நிச்சயம் கிடைக்கும். ‘பரியேறும் பெருமாள்’ தமிழ் சினிமாவின் அடையாளம், தமிழ் சினிமாவின் அழகியல். கதிரை பார்க்கும்போது ‘மௌனராகம்’ கார்த்திக் போல எனக்குத் தெரிகிறது.

இந்த ‘பரியேறும் பெருமாள்’ பணமும் குவிக்கும், மரியாதையையும் பெறும்.

இவ்வாறு ராம் பேசினார்.

p4

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது:

இந்த படத்தை பற்றி பேசுவதிலோ, முக்கியமான விசயங்களை பகிர்ந்து கொள்வதிலோ எனக்கு எந்த பயமும் இப்போது இல்லை. காரணம் ராம் சாரும், இரஞ்சித் அண்ணனும் எனக்கு தைரியத்தை தந்திருக்கிறார்கள். முதலில், நான் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த இந்த 12 ஆண்டுகளில் என் வளர்ச்சிக்கு பல வழிகளிலும் துணை நின்றவர்களுக்கும் நன்றி.

ஜாலியான ஒரு படம் செய்யலாம் என்ற நோக்கத்தில் எழுத ஆரம்பிக்கப்பட்ட கதை தான் “பரியேறும் பெருமாள்”. ஆனால், போகப்போக அதன் வடிவமே மாறிப்போனது. சட்டக்கல்லூரியில் படிக்கும்போது நான் சந்தித்த, கடந்துபோன பல மனிதர்களும், சம்பவங்களும் இந்தப் படத்தை வேறு தளத்திற்கு எடுத்துப் போயிருக்கிறது.

இந்தக் கதையை கேட்டதும், உடனே ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்தவர் இரஞ்சித் அண்ணன். இந்தப் படத்தை நம்மால் மட்டுமே சிறப்பாக எடுத்து முடிக்க முடியும் என அவர் நம்பினார். ஒரு முதல் பட இயக்குநராக எனக்கு அளிக்கப்பட்ட முழுமையான சுதந்திரம் தான் இந்தப் படத்தை நான் நினைத்த மாதிரி எடுக்க உதவி இருக்கிறது.

இந்தப் படத்தின் இசை வேறு மாதிரி இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதற்காகத் தான் சந்தோஷ் சாரிடம் பேசினோம். அது மட்டுமல்லாமல், திருநெல்வேலி மண்ணின் மைந்தர்களையும், கலைஞர்களையும் பயன்படுத்தி இருக்கிறோம். முதலில் 5 பாடல்கள் தான் திட்டமிட்டோம். ஆனால் அவராகவே முன்வந்து இன்னொரு பாடலையும் போட்டுக் கொடுத்தார்.

கேமராமேன் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா இருவரும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். கதிர், கயல் ஆனந்தி இருவரும் அந்த வாழ்க்கையை உள்வாங்கிக் கொண்டு நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் யோகி பாபு அண்ணனின் பங்களிப்பு மிகப் பெரியது. இப்படத்தில் கருப்பி என்கிற நாயின் கதாபாத்திரம் விவாதங்களை உண்டாக்கும்.

நான் ராம் சாருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என நினைத்தது இந்தப் படம் தான். இன்று இங்கு என் குடும்பத்தார் யாரும் இல்லை. ஆனால் மொத்தமாக ராம் சார் இங்கிருக்கிறார்.

இவ்வாறு மாரி செல்வராஜ் பேசினார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது:

இந்த படம் என் வாழ்க்கையில் மிகச் சிறந்த திரைப்படம். இயக்குநர் மாரி செல்வராஜ் தன் வாழ்க்கையில் நடந்ததைச் சுற்றி படமாக்கி இருக்கிறார். அந்த ஊர் மக்களை அப்படியே உருவாக்கி இருக்கிறார். எல்லா தரப்பு மக்களுக்கும் இந்த படம்  பிடிக்கும். ‘கருப்பி’ பாடலை வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் பார்த்து என்னை பாராட்டினார்கள்.

மாரி என்ற இயக்குநர் தமிழ் சினிமாவை எப்படி கொண்டுபோவார் என்று எனக்கு ஒரு கனவு வந்தது. அதை நீங்கள் உணர்வீர்கள். பாடல் காட்சிகளைப் பார்த்து ரஞ்சித் மகிழ்ந்தது எனக்கு உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் படம் தயாரிக்கும்போது இது போன்ற படைப்புகள் கண்டிப்பாக வரும். என்னுடன் வேலை பார்த்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு சந்தோஷ் நாராயணன் பேசினார்.

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் இம்மாதம் (செப்டம்பர்) 28ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.