“தன்பாலின உறவு குற்றம் அல்ல”: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
ஒரே பாலினத்தைச் சேர்ந்த வயதுவந்த இருவர் உடல் ரீதியான உறவு கொள்வது சட்டப்படி குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ல் கூறப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட இந்த சட்டப்பிரிவை ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், இந்த உத்தரவை ரத்து செய்து 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து தன்பாலின உறவு ஆதரவாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நடைபெற்று வந்தது. முக்கியத்துவும் வாய்ந்த இந்த வழக்கு பின்னர் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதன்படி, விரிவான விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்றது. இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், “தன்பாலின உறவு சட்ட விரோதமா, இல்லையா என்பதை நீதிமன்றமே தனது சட்ட அறிவின் மூலம் முடிவெடுக்கலாம்” என்று கூறியது.
பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட. இந்த வழக்கில், இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் ‘‘நாட்டில் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை அரசியல் சட்டம் உறுதி செய்கிறது. கால மாற்றத்துக்கு ஏற்ப சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் தற்போதும் ஏற்புடையதாக இருக்காது. எனவே அரசியல் சட்டத்தின் 377வது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும். தன்பாலின உறவு என்பது சட்டவிரோதமானது அல்ல’’ என கூறினர்.