உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் உளவியல் திரில்லர் ‘சைக்கோ’: மிஷ்கின் இயக்குகிறார்
உதயநிதி ஸ்டாலின் ‘சைக்கோ’ என்ற சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கிறார். அவருடன் அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன், ராம் ஆகியோர் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். மிஷ்கின் இயக்குகிறார். டபுள் மீனிங் புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கிறார்.
இந்த படம் குறித்து தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறும்போது, “வழக்கமான சினிமா விஷயங்களைத் தகர்த்து, வழக்கத்திற்கு மாறான சிறந்த கிளாசிக்கல் படங்களை வழங்குவதில் மிஷ்கின் சார் கைதேர்ந்தவர். அவருடன் பணிபுரிவது மகிழ்ச்சிக்குரிய விஷயம். சிறந்த படங்களை வழங்கும் அதே நேரத்தில் ரசிகர்களை திரையரங்குக்கு வர வைப்பதில் வல்லவர், அதனாலேயே தயாரிப்பாளர்களின் இயக்குனராக என்றென்றும் இருக்கிறார்.
இசை மற்றும் காட்சியமைப்புகளின் மூலம் மாயஜாலம் நிகழ்த்தும் ஜாம்பவான்கள் மேஸ்ட்ரோ இளையராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் ஆகியோர் ஒரே படத்தில் இணையும்போது வேறு என்ன வேண்டும்? தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது தங்கள் திறமையால் உலகளாவிய பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியவர்கள். எல்லோரைப் போலவே நானும் அவர்கள் இணைந்து செய்யும் மாயாஜாலத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
பெரும்பாலான நேரங்களில் நட்சத்திரங்கள் தேர்வு என்பது இயக்குநரின் மனநிலையை பொறுத்து எடுக்கப்படும் முடிவு. ஆனால் மிஷ்கின் சார் விஷயத்தில் இது முற்றிலும் வித்தியாசமானது. அதே சமயம், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன் மற்றும் ராம் ஆகியோர் அவருடைய தேர்வுகள், எங்களுக்கு அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. உண்மையில், மிஷ்கின் சார் எங்களை பரிந்துரைக்கச் சொல்லியிருந்தால் கூட, நாங்களும் அதே பெயர்களை சொல்லியிருப்போம்” என்றார்.