விஜயகாந்த் உடம்பில் உள்ள நோய்கள்: பட்டியலிட்டார் பிரேமலதா!
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசுகையில், “விஜயகாந்த் பேசுவது புரியவில்லை என்கிறார்கள். சிவாஜிக்குப் பிறகு பக்கம் பக்கமாக வசனம் பேசியவர் விஜயகாந்த். ஆனால் அவருக்கு இப்போது சைனஸ் பிரச்சனை இருக்கிறது. மூக்கடைப்பு, தொண்டை அடைப்பு இருக்கிறது. தொண்டையில் டான்சில்ஸ் பிரச்சனையும் உள்ளது. மேலும், வயோதிகம் காரணமாகவும் அவர் பேசுவது புரியாமல் இருக்கலாம்.
“விஜயகாந்த் எப்போதுமே உண்மையை பேசுபவர். அவர் பல முறை பேசும்போது, ‘எனது பேச்சு கோர்வையாக இருக்காது’ என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அது போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டில் யாருமே இல்லை. எதுவுமே தெரியாத நிலையில், எல்லாம் தெரிந்தது போன்று பேசும் தலைவர்கள்தான் உள்ளனர்.
“எம்ஜிஆரையும் இப்படிதான் கூறினார்கள். குண்டடி பட்டபிறகு எம்ஜிஆர் பேசுவது புரியவில்லை என்றார்கள். மேலும், காமராஜர் படிக்கவில்லை என்றும் கூறினார்கள். ஆனால், இன்றளவும் மக்கள் மனதிலே நிற்பவர்கள் எம்ஜிஆரும், காமராஜரும்தான்” என்றார் பிரேமலதா.