கருணாநிதி உடல்நிலை: ரத்த அழுத்தம் திடீரென குறைந்தது
திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால் நள்ளிரவில் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்பு அவரது ரத்த அழுத்தம் சீராக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவில் கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்தது. உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் அவருக்கு கூடுதல் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால் உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் நள்ளிரவிலும் காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள் கூடினர். மருத்துமவனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சற்று நேரத்தில் கருணாநிதியின் உடல் ரத்த அழுத்தம் சீராகத் தொடங்கியது.
பின்னர் இது குறித்து செய்தியாளரகளிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, ‘‘திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. ரத்த அழுத்தம் சீரடைந்துள்ளது’’ எனக் கூறினார்.
இதன்பின்னர் காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ‘‘ரத்த அழுத்த குறைவு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ரத்த அழுத்தம் சீராக உள்ளது. கருணாநிதி உடல் நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்’’ என தெரிவிக்கப்பட்டது.