ஆந்திரா மெஸ் – விமர்சனம்
‘ஒரு கெட்டவன் வாழ்ந்தால் 40 நல்லவர்கள் சாவார்கள்; அதே கெட்டவன் செத்தால் 40 நல்லவர்கள் வாழ்வார்கள்’ என்ற ஒருவரிக் கதை மீது கட்டப்பட்டது தான் ‘ஆந்திரா மெஸ்’ என்ற பிளாக் காமெடி திரைப்படம்.
வினோத் பெரிய தாதா. வட்டித் தொழில் செய்பவர். அவரிடம் கடன் வாங்கியிருப்பவர் ஏ.பி.ஸ்ரீதர். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமலும், ‘சம்பாதிக்கத் துப்பில்லாத ஆள்’ என்று காதலி கழற்றிவிட்ட வேதனையிலும் இருக்கும் ஏ.பி.ஸ்ரீதரிடம், “பாழடைந்த வீட்டிலிருக்கும் ஒரு பெட்டியைத் திருடிக் கொண்டுவந்து கொடுத்தால், கடனை நீ திருப்பித் தர வேண்டாம்” என்கிறார் தாதா வினோத்.
ஏ.பி.ஸ்ரீதர் தனது கூட்டாளிகளான ராஜ் பரத், பாலாஜி, மதி ஆகியோருடன் சேர்ந்து பெட்டியைத் திருடுகிறார். அந்த பெட்டியைத் திறந்து பார்த்தால், கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. இந்த பெட்டியை தாதாவிடம் ஒப்படைக்காமல், நான்கு பேரும் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொள்ளும் திட்டத்துடன் வெளிமாநிலத்துக்கு எஸ்கேப் ஆகிறார்கள்.
அந்த வெளிமாநிலத்தில் உள்ள காட்டு பங்களாவில் வயதான ஜமீன்தார் அமர் வசித்துவருகிறார். மனைவியை இழந்த அவர், இளமையான தேஜஸ்வனியை ஆசைநாயகியாக வைத்து குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறார். அவரது பங்களாவில் ஏ.பி.ஸ்ரீதர், ராஜ்பரத் உள்ளிட்ட நான்கு பேரும் அடைக்கலம் புகுகிறார்கள்.
ஜமீன்தாரின் ஆசைநாயகி தேஜஸ்வினிக்கும், ராஜ் பரத்துக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. இந்நிலையில், பணப்பெட்டியோடு மாயமான அந்த நான்கு பேரும் தலைமறைவாக இருக்கும் இடம் தெரிந்து துப்பாக்கியுடன் கிளம்பி வருகிறார் தாதா வினோத்.
ஏ.பி.ஸ்ரீதரையும், அவரது கூட்டாளிகளையும் தாதா வினோத் என்ன செய்தார்? ராஜ் பரத் – தேஜஸ்வினி காதல் விவகாரம் ஜமீன்தாருக்கு தெரிய வந்ததா? காதலர்கள் என்ன ஆனார்கள்? என்பது மீதிக்கதை.
பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் இப்படத்தில் வில்லனாக அறிமுகம் ஆகியிருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாத அவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது.
ராஜ் பரத் காதல் காட்சிகளில் பின்னியெடுத்திருக்கிறார். தேவைப்படும்போது பார்வையாலேயே மிரட்டியிருக்கிறார். ஒரு நாயகனாக வலம் வருவதற்கான திறமைகள் அவரிடம் தென்படுகின்றன.
தேஜஸ்வினி அழகாக இருக்கிறார். கண்களால் அழகாக பேசுகிறார். காதல் காட்சிகளில் சொக்க வைக்கிறார்.
ஏ.பி.ஸ்ரீதர், ராஜ் பரத் ஆகியோரின் கூட்டாளிகளாக வரும் பாலாஜி, மதி, தாதாவாக வரும் வினோத், ஜமீன்தாராக வரும் அமர் ஆகியோர் திரைக்கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
பிளாக் காமெடியை அடிநாதமாகக் கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெய். பல இடங்களில் காட்சிகளை சிறப்பாக அமைத்திருக்கிறார். மெதுவாக நகரும் திரைக்கதை, படத்திற்கு தொய்வையும், பார்வையாளர்களுக்கு சோர்வையும் ஏற்படுத்திவிடுகிறது.
பிரசாந்த் பிள்ளையின் பாடலிசை கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். முகேஷ்.ஜி-யின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
‘ஆந்திரா மெஸ்’ – காமெடி மெஸ்!