தூத்துக்குடி படுகொலையை கண்டித்த சின்னத்திரை நடிகை நிலானி கைது!
மக்களின் உடல்நலத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் 100வது நாள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீசாரின் இந்த வெறிச்செயலைக் கண்டித்து தமிழ் தொலைக்காட்சி தொடர் (டிவி சீரியல்) நடிகை நிலானி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். போலீஸ் உதவி கமிஷனர் வேடத்தில் காக்கி சீருடை அணிந்து நடித்துக்கொண்டிருந்த நிலானி, அதே சீருடையில் வீடியோவில் தோன்றி பேசுகையில், “இலங்கையில் என்ன நடந்ததோ, அதேதான் தமிழ்நாட்டிலும் நடக்கும். தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பக்கிச் சூடு சம்பவத்தில் அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். (தான் அணிந்திருந்த போலீஸ் சீருடையை சுட்டிக்காட்டி) இந்த உடையை அணிவதற்கே உடம்பு கூசுகிறது.
தமிழர்களை தீவிரவாதிகள் ஆக்க முயற்சி செய்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இது தற்செயலாக நடந்தது போல் இல்லை. முற்றிலும் திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் உள்ளது.
இங்கு இன்னுமொரு ஈழப்பிரச்சனை உருவாகிவிடக் கூடாது. இன்னுமொரு பாலச்சந்திரனையும், இசைப்பிரியாவையும் பறி கொடுக்கக் கூடாது. இவை எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் வகையில் விரைவில் புரட்சி வெடிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அவரது வீடியோ வைரலானது.
இதனால் காண்டான பாரதிய ஜனதா கட்சியினர், நிலானி மீது வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து நிலானி மீது கடந்த 24ஆம் தேதி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து வீடியோவில் பேசிய நிலானி, “நாங்கள் காந்தியவாதிகள். அறவழியில் போராடுகிறோம். எங்களை தீவிரவாதியாக காட்ட முயற்சி செய்கிறீர்கள். என்னை கைது பண்ணனுமா? பண்ணிக்கங்க. சுட்டுக் கொல்லணுமா? கொன்னுக்கங்க. நான் போனா என் குழந்தை கேள்வி கேட்கும். கடைசியா ஒரேயொரு தமிழன் இருந்தாலும் அவன் நியாயத்துக்காக கேள்வி கேட்பான்” என்றார்.
இந்நிலையில், வடபழனி போலீசார் நிலானியை குன்னூரில் கைது செய்துள்ளனர்.