மோடி – பாடி ஆட்சிகளை அகற்றினால் மட்டுமே பிரதீபாக்களையும், அனிதாக்களையும் காப்பாற்ற முடியும்!

பார்ப்பன பனியா கும்பல் சூழ்ச்சி காரணமாக தமிழ்நாட்டு ஏழை எளிய, கிராமப்புற மாணவ மாணவிகள் மீது திணிக்கப்பட்ட நீட் தேர்வு, கடந்த ஆண்டு மாணவி அனிதாவை காவு வாங்கியது. அதுபோல இந்த ஆண்டு பிரதீபா என்ற மாணவியை காவு வாங்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம், பெருவளூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (47). கூலித்தொழிலாளி. இவரது மனைவி அமுதா(42).  இந்த தம்பதியருக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர்.

மகன் பிரவீண்ராஜ் (21) பி.ஈ மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். இன்னொரு மகள் உமா பிரியா (24)  எம்.எஸ்.சி முடித்துள்ளார். தான் படிக்காவிட்டாலும் தனது பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்தார் சண்முகம்.

இவரது கடைசி மகள் பிரதீபா (18). இவர் சிறுவயதிலிருந்தே மருத்துவராகும் கனவோடு படித்து வந்தார். 10ஆம் வகுப்பில் 490 மதிப்பெண் எடுத்து பாராட்டு பெற்றார். இவரது படிப்புத் திறமையைப் பார்த்த மாவட்ட ஆட்சியர், அவர் ஒரு  தனியார் பள்ளியில் பிளஸ்1, பிளஸ்-2 படிக்க உதவி செய்தார். அந்த உதவியை வீணாக்காமல் கடந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வில் 1,125 மதிப்பெண் எடுத்தார் பிரதீபா.

கடந்த ஆண்டு நீட் அமல்படுத்தப்பட்டபோது இவரும் தேர்வு எழுதினார் அப்போது 155 மதிப்பெண் பெற்றார். இந்த மதிப்பெண்ணுக்கு பல பத்து லட்சங்கள் கட்டி தனியார் மருத்துவ கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என்பதால் மருத்துவ கல்லூரியில் சேர இயலாமல் போனது.

இந்த ஆண்டும் நம்பிக்கையுடன் நீட் தேர்வை பிரதீபா எழுதினார். ஆனால் 39 மதிப்பெண் மட்டுமே பெற முடிந்தது. இதனால் தனது மருத்துவ கனவு இந்த ஆண்டும் தகர்ந்ததை எண்ணி மனம் உடைந்த பிரதீபா, தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டிலிருந்த எலி மருந்தை சாப்பிட்டார். அவரை உடனடியாக் உறவினர்கள் மீட்டு திருவண்ணாமலை மருத்துமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரதீபா உயிரிழந்தார்.

தனது மரணத்திற்கு முன் பிரதீபா எழுதி வைத்துள்ள கடிதத்தில், நீட் தேர்வில் இந்த ஆண்டும் வெற்றி பெற முடியவில்லை, இனியும் பெற்றோருக்கு பாரமாக இருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதீபாவின் தந்தை சண்முகம் கூறும்போது “கடந்த ஆண்டு நீட் தேர்வால் அனிதாவை இழந்தோம், இந்த ஆண்டு என் மகளை பறி கொடுத்துள்ளேன். இனியும் இந்த மரணங்கள் தொடரக் கூடாது” என்று அழுதபடி கூறினார்.

மாணவி பிரதீபாவின் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல் தமிழக தலைவர்களும், இன்ன பிறரும் தங்கள் குமுறல்களை, கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

நிதானமாக யோசித்தால், நீட் தேர்வை மன்மோகன் சிங் ஆட்சி தான் கொண்டு வந்தது என்றாலும், அது தமிழக மாணவர்கள் மீது அப்போது திணிக்கவில்லை. மோடியின் அராஜக ஆட்சியும், அதன் பினாமி ஆட்சியான எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியும் தான் பிடிவாதமாக இந்த நாசகார செயலைச் செய்துள்ளன. (2017ஆம் ஆண்டு தான் தமிழக மாணவர்கள் முதன்முதலாக நீட் தேர்வு எழுத நேர்ந்தது என்பதை நினைவில் கொள்க) எனவே, மோடி ஆட்சியையும், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியையும் அகற்றிவிட்டு, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கிடைக்க வழிவகை செய்யும் கட்சிகளை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் அமர்த்தினால் மட்டுமே அனிதாக்களையும், பிரதீபாக்களையும் நாம் காப்பாற்ற முடியும்.

இது நடந்தேறும் வரை, நம் மாணவச் செல்வங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவுக்கு போகாதவாறு அவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வோமாக.