பாஸ்கர் ஒரு ராஸ்கல் – விமர்சனம்
கேரளாவில் ‘பாஸ்கர் த ராஸ்கல்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற மலையாளப் படம், தமிழில் ரீமேக் செய்யப்பட்டு, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.
அடிதடி என்றால் முறுக்கிக்கொண்டு முன்னே செல்லும் சுபாவம் கொண்ட செல்வந்தர் அரவிந்த்சாமி. மனைவியை இழந்தவர். அவருடைய மகன் மாஸ்டர் ராகவ் அவருக்கு நேர்மாறாக பொறுமையும், நிதானமும் உள்ள நல்ல பையன்.
அமலாபால், கணவனை இழந்தவர். எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் பார்த்துப் பார்த்து பயந்து செய்யக் கூடியவர். அவருடைய மகள் பேபி நைனிகா.
பள்ளி விடுமுறை காலத்தில் கராத்தே பயிற்சிக்குச் செல்கிறான் மாஸ்டர் ராகவ். அவனது நெருங்கிய சினேகிதியான பேபி நைனிகாவும் கராத்தே பயிற்சிக்கு வருகிறாள்.
தனக்கு அப்பா இல்லையே என்ற ஏக்கத்தில் இருக்கும் பேபி நைனிகா, ஒருநாள் கராத்தே வகுப்பில் நடக்கும் பிரச்சனையின்போது அரவிந்த்சாமியின் அடிதடியை பார்த்து வியக்கிறாள். மேலும், எதிலும் தைரியமாக இருக்கும் அரவிந்த்சாமியை ‘அப்பா’ என்று அழைக்க ஆரம்பிக்கிறாள்.
நைனிகாவின் அம்மாவான அமலாபாலின் பொறுமையான சுபாவம் மாஸ்டர் ராகவுக்குப் பிடித்துப் போகிறது. அமலாபாலை அவன் ‘அம்மா’ என்று அழைக்க ஆரம்பிக்கிறான்.
அரவிந்த்சாமியையும், அமலாபாலையும் சேர்த்து வைத்துவிட்டால், அம்மா / அப்பா இல்லாத தங்கள் குறை தீர்ந்துவிடும் என்று மாஸ்டர் ராகவும், பேபி நைனிகாவும் நினைக்கிறார்கள். அரவிந்த்சாமியையும், அமலாபாலையும் காதலர்களாக மாற்ற இச்சிறுவர்கள் செய்யும் சித்துவேலைகள் என்ன? அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன? இறுதியில் அவர்களது எண்ணம் நிறைவேறியதா? என்பது மீதிக்கதை
அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக இருக்கிறது. எந்த பிரச்சனை வந்தாலும் பயப்படாமல், அடித்து துவம்சம் பண்ணும் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி மிரட்டியிருக்கிறார். அதேநேரம், தன் மகன் சொல்வதைக் கேட்கும் தந்தையாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
பயந்த சுபாவம் கொண்ட பெண்ணாக வ்ரும் அமலாபால் கலக்கியிருக்கிறார். ஒரு பாடலில் படுகவர்ச்சியாக வந்து கிறங்கடித்திருக்கிறார்.
மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா ஆகிய இருவருமே போட்டி போட்டு நடித்து, பின்னி பெடலெடுத்து இருக்கிறார்கள்.
சூரியும், ரோபோ சங்கரும் காமெடி பண்ணி சிரிக்க வைக்கிறார்கள். நாசர், விஜயக்குமார், சித்திக், ரமேஷ் கண்ணா, அஃப்தாப் ஷிவ்தாசனி, ரியாஸ் கான் உள்ளிட்டோர் தத்தமது பாத்திரம் உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அப்பா, அவருடைய மகன், அம்மா, அவருடைய மகள் ஆகிய நான்கு பேருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாக வைத்து கலகலப்பாக படத்தை உருவாக்கியிருக்கி இருக்கிறார் சித்திக். காமெடி, ஆக்ஷன், பாசம் என அனைத்தையும் கலந்த கலவையாக கொடுத்திருப்பதால் படம் ரசிக்கும்படியாக இருக்கிறது.
அம்ரேஷ் கணேஷ் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசையில், குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். விஜய் உலகநாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்கும்படியாக வந்திருக்கிறது.
`பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ – காமெடி கல்கலப்பு!